Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நம்மில் நிழலாடி, இறையில் உறவாடும் நம் இறந்தவர்கள்
இறந்தவர்களுக்காக செபிக்கவேண்டுமா?
ஏன் செபிக்கவேண்டும்?
அவர்கள் நமக்காக செபிக்கிறார்களா?
நம்முடைய செபம் அவர்களுக்கு சேருமா?
அவர்கள் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களா?
இவையெல்லாம் நம்மில் பொதுவாக எழுகின்ற கேள்விகள். என்னதான் பதில் என்று சிந்தித்துப் பார்த்தோமானால், அதற்கான பதில்களை நாம் நம் அன்றாட வாழ்வில் வாழ்ந்துகாட்டிக் கொண்டுதான் இருக்கின்றோம் என்று சொல்லலாம்.
• செபம் என்றால் என்ன? கடவுளோடு உரையாடல், உறவு
• இது காலத்தையும் இடத்தையும் கடந்ததா? கடந்தது (எங்கோ ஒரு இடத்தில் இருப்பவர்களுக்காக, வெவ்வேறு இடத்தில் இருந்து, ஒரே நேரத்தில் செபிக்கிறோம்).
• நாம் வெவ்வேறு இடத்தைச் சார்ந்தவர்கள்தான், ஆனால் எல்லாரும் ஏன் ஆலயம் வந்து ஒரே திருப்பலியில், செபத்தில் பங்குகொள்கிறோம்? திருமுழுக்கினால், நம்பிக்கையினால் இணைக்கப்பட்ட ஒரு திருக்கூட்டமாக இருப்பதால்தான்.
• இந்த நம்பிக்கைத் திருக்கூட்டத்தின் உறுப்பினர் உரிமை மாறக்கூடியதா? மாறாதது. இறப்பிற்குபின்னும் மாறாதது.
நம்பிக்கையாளர் திருக்கூட்டத்தைச் சார்ந்த நம்முடைய செபம் காலத்தையும் இடத்தையும் கடந்து சென்றடைகின்றது என்றால் இறந்தவர்களையும் சென்றடைகின்றது. அவர்கள் நமக்காக செய்யும் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சரியா? எனவே, நாம் அனைவரும் இறந்தவர்களுக்காக செபிக்கவேண்டும். அவர்கள் நமக்காக பரிந்துரை செய்கிறார்கள்.
அவர்களுக்காக ஏன் நாம் செபிக்கவேண்டும்? அவர்களுக்கு நம்முடைய செபம் தேவையா?
மிட்ச் ஆல்பம் எழுதிய நீங்கள் விண்ணகத்தில் நீங்கள் சந்திக்கும் ஐந்து நபர்கள் (The Five People You Meet in Heaven) என்ற புத்தகத்தில் கிறிஸ்தவ நம்பிக்கையை எளிய முறையில் பிரதிபலித்திருப்பார். முடிந்தால் அந்த புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்.
ரூபி பியர்ஸ் என்ற பொழுது போக்குப் பூங்கா. அங்கு தன் வாழ்நாளைக் கழித்த எடி, எதிர்பாராத விபத்தில் ஒரு குழந்தையை காப்பாற்ற முயன்றபோது, அவர் இறந்துவிடுகிறார்.
அவர் விண்ணகம் சென்று, கடவுளைக் காணமுடியவில்லை, விண்ணகத்தின் மாட்சியைக் காணமுடியவில்லை. ஆனால் மண்ணகத்தில் இருந்த சூழ்நிலைகள்தான் நிலவுகிறது. அதன்பின்பு அவர் ஒரு நபரைச் சந்திக்கிறார். அவருடைய இறப்பிற்கும் இவருக்கும் இவர் அறிமாலே ஒரு தொடர்பு இருப்பதைக் காண்கிறார். அந்த நபர் இவருக்காக காத்திருக்கின்றார். அவர் இவரைச் சந்தித்து அவருடைய மனவருத்தங்கள் நீங்கியபின்பு கடவுளைச் சந்திக்கப்போகிறார்.
அதே போன்று எடியும் விண்ணகத்தில் கடவுளைக் காண்பதற்குமுன்பு அவர் அவருடைய மனதில் அமைதியைக் கலைத்த ஐந்து நபர்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அவர்கள் சந்திப்பு அவர்கள் எதை வாழ்வில் இழந்திருக்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொடுக்கிறது. அந்த நபர்களைச் சந்திப்பதற்காக அவர்கள் படும்வேதனையும், கடவுளைக் காணமுடியாமல் அடையும் தவிப்புமே உத்தரிக்கதலம். இதனை நம்மை சுத்திகரிக்கும் கடவுளின் அன்பு (Purifying Love of God) எனவும் கூறுவார்கள். எடியும் அந்த மனிதர்களைச் சந்திக்கிறார், தூய உள்ளத்தில் கடவுளை முகம் முகமாய் தரிசிக்கிறார்.
இந்த வேளையில் நாம் இறந்தவர்களுக்காக செபிக்கவேண்டும். ஒருவேளை அவர்கள் நம்மால் கடவுளை முகம் முகமாய் தரிசிக்கின்ற பாக்கியத்தை பெறாமல் தவிக்கலாம். நம்முடைய ஒப்புறவாதற்கு காத்துக்கொண்டிருக்கலாம். எனவே அவர்களுக்காக நாம் செபிக்கவேண்டும். நாம் அவர்களை மன்னிக்கவேண்டும். அதன்பின்பு அவர்கள் கடவுளிடம் இருக்கும்போது நமக்காக பரிந்துபேசி பல ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தருவார்கள்.
தூத்துக்குடி கன்னியாக்குமரி கடற்கரைக் கிராமங்களில் இந்த பழக்கம் அதிகமாக இருக்கும். வாடி சந்திக்கப் போகவில்லையா என்று கேட்பார்கள். அவர்கள் அடிக்கடி சென்று கல்லறையில் துயில்கொண்டிருக்கும் உறவினர்களை நண்பர்களைப் பார்த்து அவர்களுடன் பேசுவார்கள்.
வீட்டில் அவர்கள் விழாக்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றில் அவர்களின் உடனிருப்பை உணர்வார்கள். தங்களுடைய ஒவ்வொரு நாளுக்கான வேலைகளை அவர்களுடைய படத்தின் அருகில் நின்று பகிர்ந்துகொள்வார்கள், பேசுவார்கள், உணர்வார்கள்.
ஆக, இறந்தவர்கள் அனைவரும் நம்முடன் உடன் பயணிக்கிறார்கள். நம்மை வழிநடத்துகிறார்கள். அவர்களை நாம் நினைவுகூர்கிறோமா? அவர்களோடு இருக்கிறோமா? அவர்கள் கடவுளிடமிருந்துப் பெற்றுத் தரும் ஆசியைப் பெறுவதற்கு தயாராக இருக்கிறோமா? இருந்தால் இவ்விழா அர்த்தமுள்ளதாக அமையும்.
Add new comment