ஜீன்ஸ் அணிந்த புரோகிராமிங் அருளாளர் I கார்லோ அக்கூட்டீஸ்


Carlo Acutis

வணக்கத்திற்குரிய கார்லோ அக்கூட்டீஸ் அவர்களின் கல்லறையானது திறக்கப்பட்டது. அவரது உடல் அங்கு அழியாமல் இருக்கின்றது. திருஅவை வரலாற்றில் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படும் ஒருவர் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து ஷீ அணிந்து இருப்பதையும் அவ்வாறே அடக்கம் செய்யப்பட்டிருப்பதையும் தம் கண்களால் கண்டு அனைவரும் பெருமிதம் கொண்டிருக்கும்வேளையில் புனிதம் என்பது எல்லா மனிதனுக்கும் எட்டும்தூரத்தில்தான் உள்ளது. அனைவரும் புனித நிலை அடையலாம் என்பதற்கான புதிய நம்பிக்கையை இவரது வாழ்வு நமக்குக் கொடுக்கிறது என்று நாம் உறுதியாக சொல்லமுடியும்.

யார் இந்த கார்லோ அக்கூட்டீஸ்

இவர் இத்தாலியைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க இளைஞர். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி இலண்டனில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஆன்ட்ரியா அக்குடிஸ், அன்டோனியா சல்சானோ. இத்தாலி நாட்டினைச் சார்ந்த இவர்கள் இலண்டனில் வேலைசெய்தார்கள். பின்னர் மீண்டும் மிலானுக்குத் திரும்பினார்கள். கார்லோவை நவீன காலத்தில் புனிதத்தை வெளிப்படுத்தும் இளைஞனாக வளர்த்தார்கள். 

கார்லோ அன்னை மரியாவின்மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். தனது பற்றினை அடிக்கடி செபமாலை செபிப்பதன் வழியாக வெளிப்படுத்தினார். தனது 7 ஆம் வயதில் நற்கருணை அருளடையாளத்தைப் பெற்றார். தன்னுடைய 11 ஆம் வயதில் உறுதிபூசுதல் அருளடையாளத்தைப் பெற்றார்.

இவர் திருப்பலியில் அடிக்கடி பங்கு கொண்டார். திருப்பலிக்கு முன்னரும் பின்னரும் நற்கருணைப் பிரசன்னத்தில் நேரத்தை செலவழிப்பார். அவருக்கென்று சில புனிதர்களை முன்மாதிரியாகக் கொண்டு தன் வாழ்வுப்பாதையை நெறிப்படுத்த ஆரம்பித்தார். அவர்கள், புனித பிரான்சிஸ் அசிசி, அருளாளர்கள் பிரான்சிஸ்கோ மற்றும் செசிந்தா மார்டோ, புனித தோமினிக் சாவியோ, புனித தார்சியஸ் மற்றும் புனித பெர்னதெத்து சௌபிரியஸ்.

திருமண மனமுறிவு செய்துகொண்ட பெற்றோர்களைக் கொண்டத் தன்னுடைய நண்பர்கள் பற்றி அதிகம் கவலை கொண்டார். அவர்களை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து உதவிகள் செய்தார். தன்னுடைய பள்ளியில் படிக்கும் இயலாத முடியாத மாணவர்களை மற்றவர்கள் கேலிசெய்கின்றபோது, அவர்களுக்கு உறுதுணையாக நின்றார். கார்லோ பயணம் செய்ய அதிக விருப்பமுடையவர். அதுவும் குறிப்பாக அசிசி செல்வதற்கு மிகவும் ஆவலாய் இருப்பார். 

கணினி செய்நிரலாக்கம் (புரோக்ராமிங்), இணையதளத்தில் மிகவும் ஆர்வமும் தேர்ச்சியும் கொண்ட இவர் உலகிலுள்ள அனைத்து நற்கருணைப் புதுமைகளையும் சேகரித்து, வரிசைப்படுத்தி, ஆவணமாக்கத் தொடங்கினார். லுகேமியா நோயினால் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தானே உருவாக்கிய புதிய இணைதளத்தில்  2005ஆம் ஆண்டு  அவற்றை பதிவுசெய்தார். நீங்கள் அவற்றைப் பார்த்தாலே உங்கள் வாழ்வுமாறும்: http://www.carloacutis.com and http://www.miracolieucaristici.org/en/Liste/list.html . இவர் அருளாளர் ஜேம்ஸ் ஆல்பெரியோன் சமூக தொடர்புசாதனங்களை நற்செய்திக்குப் பயன்படுத்திய விதத்தை மிகவும் பாராட்டினார். கார்லோ திரைப்படம், நகைச்சுவை நாடகங்கள் உருவாக்குவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். 

அவருடைய இளம் வயதிலேயே லுகேமியா நோயினால் பாதிக்கப்பட்டபோது, அவருடைய துன்பங்களையும் வேதனைகளையும் ஆண்டவரிடமும், திருத்தந்தை 16ஆம் ஆசிர்வாதப்பருக்காகவும், அகில உலக திருஅவைக்காகவும் ஒப்புக்கொடுத்தார். தன்னுடைய பெற்றோர்களிடம் நற்கருணைப் புதுமைகள் நடைபெற்ற இடங்களுக்கு அவரை திருப்பயணமாக கூட்டிச்செல்ல பணித்தார். அவருடைய நோயின் தீவிரத்தால் அவரை அவருடையப் பெற்றோர்களால் அழைத்துச்செல்ல முடியவில்லை. 

நற்கருணையைப் பற்றிச் சொல்கின்றபோது, “நாம் அதிகமாக நற்கருணையை உட்கொள்கின்றபோது, நாம் அதிமாக இயேசுவைப் போல உருவாகின்றோம். அவ்வாறு செய்கின்றபோது இந்த உலகத்திலேயே விண்ணகத்தின் முன்சுவையை உணரலாம்” என்கிறார். 

அவர் தன்னுடைய இறப்பை இரண்டு மாதங்களுக்கு முன்னரே முன்னறிவித்தார். தான் 70 கிலோ எடை வருகின்றபோது, இறந்துவிடுவதாகவும் சொன்னார். இறக்கும் தருவாயில் அவருடைய மருத்துவர், அவருக்கு வேதனை அதிகமாக இருக்கின்றதா என்று கேட்டார். அதற்கு அவர் “இந்த உலகில் என்னைவிட மிக அதிகமாக துன்பப்படும் மனிதர்கள் ஏராளம் உள்ளார்கள் என்று பதிலளித்தார்.” 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி தன்னுடைய 15 ஆம் வயதில் இறந்தார். அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப அவருடைய உடலை அசிசியில் நல்லடக்கம் செய்தார்கள். 

2018 ஆம் ஆண்டு ஜீலை 5 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவரை வணக்கத்திற்குரிய இறைஊழியர் நிலைக்கு உயர்த்தினார். இறைஊழியர் கார்லோ அக்கூட்டீஸ் பரிந்துரையால் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற நற்கருணைப் புதுமையை மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குட்படுத்தி, அவர்களால் புதுமையாக ஏற்றுக்கொண்டபின், அதனை ஆதாரமாகக் கொண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி புனித அசிசி பிரான்சிஸ் பேராலயத்தில் அவரை அருளாளர் நிலைக்கு உயர்த்த இருக்கின்றார்கள். அவருடைய உடல் அக்டோபர் 1 ஆம் தேதிமுதல் 17 ஆம் தேதிவரை அனைவருடைய பொது வணக்கத்திற்கு கண்ணாடி பெட்டியில் வைத்துள்ளார்கள். 
 
கார்லோ நம்முடைய காலத்து இளைஞன். இன்டர்நெட் பையன் மற்றும் இந்த கணினி உலகத்தில் புனிதத்திற்கு முன்மாதிரி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருக்கு எழுதிய கடித்தில் குறிப்பிடுகிறார். 

இணையதளமும் சமூக வலைதளங்களும் நம்மை முழுவதுமாக கட்டாயப்படுத்தி ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த எதார்த்தமான சூழலில், எந்த நிலையிலும் நாம் புனிதத் தன்மையை வெளிப்படுத்தமுடியும். அவற்றின் வடிவங்கள் மாறலாம் ஆனால் அவை காலத்தின் கட்டாயம் என்பதனை தம்முடைய வாழ்வால் வாழ்ந்துகாட்டியிருக்கிறார் இறைஊழியர் கார்லோ. அதுவும் சிறப்பாக திருஅவை அவரை அருளாளர் நிலைக்கு உயர்த்துவது நம் இளையோருக்கு உந்துசக்தியாக அமையவேண்டும், அமையும் என்பது என் நம்பிக்கை. 

Add new comment

6 + 1 =