ஜப்பான் மக்களுக்கு திருத்தந்தையின்  காணொளி செய்தி 

நவம்பர் 23 வருகிற சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜப்பான் நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, அந்நாட்டிற்கு, காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஜப்பான் நாட்டு மக்களுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியில், 'அனைத்து உயிர்களையும் பாதுகாத்தல்' என்ற திருத்தூதுப் பயணத்தின் மையக்கருத்தைச் சுட்டிக்காட்டி, இனிமேல், எக்காலத்திலும், அணு ஆயுதங்கள் இவ்வுலகில் பயன்படுத்தப்படக் கூடாது என்ற கருத்திற்காக அனைவரும் இணைந்து செபிப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது, அறநெறி விழுமியங்களுக்கு முற்றிலும் புறம்பானது என்பதை, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலந்துரையாடல், உடன்பிறந்த நிலை, மதப் பாரம்பரியங்களிடையே கருத்துப் பரிமாற்றம், மனித உரிமைகளை மதித்தல் போன்றவற்றின் அவசியத்தை, ஜப்பான் மக்கள் உணர்ந்துள்ளது குறித்து, தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

நம் பொதுவான இல்லமான இப்பூமிக்கோளத்தை காப்பதற்கு, ஜப்பான் மக்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கும், தன் திருத்தூதுப் பயணத்திற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதற்கும் இக்காணொளிச் செய்தியில் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

நன்றி: வத்திக்கான் நியூஸ் 

Add new comment

8 + 1 =