Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
குழந்தைகளாய் சிலுவைபாதையில் உரையாடுவோமா? | ரெஜினா | Way of the Cross for Children
இயேசுவே! நீர் எங்களுக்காக சிலுவை சுமந்து பாடுபட்டு மரித்தீர். இதோ உம்முடைய சிலுவை பாடுகளில் பங்கேற்று என் பாவங்களையெல்லாம் விட்டொழிந்து மனம்மாறி உம்முடைய உயிர்ப்பில் பங்கு பெற வேண்டி சிலுவைப் பாதையை பக்தியோடு செய்ய ஆசீர் தாரும்.
முதல் நிலை:
இயேசப்பா! உங்க உடல் முழுக்க அடிபட்டு இரத்தம் ஒழுகி வலி வேதனையோடு இருக்கின்ற உன் நிலையை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன் இயேசப்பா இப்படி ஒரு நிலைமை உங்களுக்கு? பிலாத்துவுக்கு மனசாட்சியே இல்லையா? இந்த வலி எல்லாம் எங்களுக்காக தானே? இந்த பாடுகளை நினைச்சா உங்களுக்கு பயமா இருக்கா? இவ்வளவு கஷ்டமான தீர்ப்பு உங்களுக்கு கொடுத்துட்டாங்க.
இயேசப்பா பிலாத்து வைப் போல நாங்களும் யாருக்கும் இவ்வளவு மோசமா தீர்ப்பு சொல்லாமல் இருக்க நல்ல மனசு தாங்கப்பா.
இரண்டாம் நிலை:
இயேசப்பா! இந்த சிலுவை ரொம்ப கனமாய் இருக்கும் போலிருக்கே! எப்படி நீங்க தூக்க போறீங்க? பயமா இருக்கா? சின்ன பசங்க நாங்க உங்களோட வரட்டுமா? உங்களுக்கு துணையாய் இருக்கும்.
இயேசப்பா இந்த மாதிரியான வலுவான சுமைகளை தூக்க எங்களுக்கு பலம் தாங்கப்பா
மூன்றாம் நிலை:
இயேசப்பா! என்னாச்சு? கனமான சிலுவையை தூக்க முடியலையா? கீழ விழுந்துடீங்க. கால் கல்லுல தடுக்கிடுச்சா இல்ல சிலுவை ரொம்ப கனமா இருக்கா? இயேசப்பா பயப்படாதீங்க. உங்களால முடியும். நீங்க எவ்வளவு சாட்டை அடி வாங்கினாலும் தாங்குகிற சக்தி உங்க அப்பா உங்களுக்கு தருவார். சரியா!
இயேசப்பா இது போல எங்களுக்கும் அடிபட்டா தாங்குகிற சக்தியை கொடுங்கப்பா.
நான்காம் நிலை:
இயேசப்பா நீங்க உங்க அம்மாவ பாத்துட்டீங்களா! அப்போ உங்களுக்கு பலம் கிடைக்கும். ஆனா உங்க அம்மா உங்கள பார்த்து அழறாங்க! பாவம் மாதா. பின்ன இவ்வளவு அடிபட்டா எந்த அம்மாவுக்கு தான் அழுகை வராது. கவலைப்படாதீங்க உங்க அம்மா உங்களை தூக்கி விடுவாங்க.
மாதாவே! நீங்களும் என்னை இந்த மாதிரி கஷ்டத்தில் இயேசுவோடு சேர்ந்து தூக்கி விடுங்க. சரியா!
ஐந்தாம் நிலை:
இயேசப்பா! என்ன ஆச்சு? ரொம்ப களைச்சுப் போயிட்டீங்க. உங்களுக்கு உதவ யாருமே அங்க இல்லையா? உங்க சீடர்கள் எல்லாம் எங்க போனாங்க? ஆனா உங்க அப்பா உங்களுக்கு உதவி செய்ய ஒரு ஆள் அனுப்புவாரு. இதோ! இயேசப்பா, சீமோன் வந்துட்டாரே. உங்க சிலுவையை கொஞ்ச நேரம் தூக்குவார். அந்த சமயத்துல நீங்க ஓய்வு எடுங்க. சரியா?
இயேசப்பா! எனக்கு கூட என் அப்பா அம்மா பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் உதவி செய்ய நல்ல மனசு தாங்கப்பா.
ஆறாம் நிலை:
இயேசப்பா! உங்க தலையிலிருந்து கால் வரை ஒரே இரத்தமாய் இருக்கே. உங்க முகம் கூட சரியாவே தெரியலையே. இயேசப்பா உங்களால உங்க முகத்த துடைக்க முடியலையா?இதோ வெரோனிக்க அக்கா உங்க முகத்தை தொடச்சிட்டாங்க. உங்க முகச்சாயல் கூட துணியில் விழுந்திருச்சு.
இயேசப்பா பெண்பிள்ளைகள் நாங்களும் இந்த சமுதாயத்தில் தைரியமாய் இருக்க அருள்தாரும்.
ஏழாம் நிலை:
இயேசப்பா! என்ன ஆச்சு? மறுபடியும் கீழ விழுந்துடீங்களா? ஐயோ பாவம்.. இத்தனை பேர் உங்களை சூழ்ந்து அடிச்சிட்டே இருந்தா எப்படி உங்களால நடக்க முடியும்? இரண்டு காலுக்கும் வலுவே இல்லையே. இயேசப்பா! நீங்க விழுவதை பார்த்தா எனக்கு அழுகையா வருது. நான் அங்க இருந்திருந்தேனா ஓடி வந்து தூக்கி விட்டுருப்பேன். மன்னிச்சிடுங்க! மெதுவாக எழுந்திருங்க. ரொம்ப தூரம் போகணும். சரியா!
இயேசப்பா! நாங்களும் பாவத்தில் மறுபடியும் மறுபடியும் விழாமல் உதவி செய்யுங்கப்பா.
எட்டாம் நிலை:
இயேசப்பா! இப்போ உங்களோட பேச நெறய அக்காங்க வந்துருக்காங்களே! அவங்களோட கொஞ்சம் பேசுங்கப்பா! நீங்க பேசுனா ஆறுதலா இருக்கும். ஆனா உங்களுக்கு யார் ஆறுதல் தருவா? நான் வந்து பேசினா ரொம்ப ஆறுதலா இருக்கும். வரட்டுமா இயேசப்பா?
இயேசப்பா! எனக்கு ஆறுதலா பேச சொல்லி தருவீங்களா?
ஒன்பதாம் நிலை:
இயேசப்பா! ஏன் மறுபடியும் கீழ விழுந்துடீங்க? ஐயோ! எதுக்கு இந்த வேதனை? தலைல இருக்க முள்முடியும் குத்தி ரொம்ப வலிக்குமே! இயேசப்பா! இயேசப்பா! மெதுவா எழுந்துருங்க. இன்னும் கொஞ்ச தூரம் தான் இந்த கல்வாரி மலை. தைரியமாய் எழுந்துருங்கப்பா! நாங்க உங்க கூடவே வருவோம். சரியா?
இயேசப்பா! எங்களுக்கும் எல்லா துன்பங்களையும் ஏற்பதற்கு தைரியம் பலம் தங்கப்பா.
பத்தாம் நிலை:
இயேசப்பா! இவ்வளவு நேரம் நீங்க சிலுவையை சுமந்து மலை மேலே ஏறி வந்துட்டீங்க. ஆனா, இயேசப்பா! எதுக்கு இவங்க உங்க துணி எல்லாம் கழட்டிட்டாங்க? ஐயோ! எனக்கு ரொம்ப மனசு வலிக்குது. எல்லா வலியையும் விட இது தான் ரொம்ப வலி. எல்லோரும் உங்களை வெறும் உடம்போட பார்க்கிறார்களே. இயேசப்பா! நான் இப்போ என்ன செய்வேன்? யாராச்சும் போய் அவருக்கு துணியை கொடுங்களேன்.
இயேசப்பா! என்கிட்ட நிறைய துணி இருக்கு. ஏழை பிள்ளைகளுக்கு கொடுக்க எனக்கு நல்ல மனசு தாங்கப்பா.
பதினோராம் நிலை:
இயேசப்பா, உங்கள சிலுவை மேல படுக்க வச்சு உங்க இரண்டு கைகளையும் கால்களையும் பெரிய ஆணி வச்சு அடிக்கிறாங்களே. இயேசப்பா! இதெல்லாம் பாக்குறதுக்கு எனக்கு சக்தியே இல்லை. என்னால தாங்க முடியல. இயேசப்பா! நான் என்னோட கண்ணை மூடிக்கிறேன். நீங்க இவ்வளவு பொறுமையாய் எல்லா வலியையும் தாங்கிக்கிறீங்க. எல்லாம் நாங்க செய்த பாவம் தான்.
இயேசப்பா! எங்களுக்கும் பொறுமையை கற்றுக் கொடுங்கப்பா.
பன்னிரெண்டாம் நிலை:
இயேசப்பா! உங்கள சிலுவையில் தொங்க விட்டார்களே தண்ணீர் தாகமா இருக்குதா! முள்முடி வலியினால உங்க தலையை கூட தூக்கமுடியலயா? இயேசப்பா! இவ்ளோ கஷ்டப்படறீங்களே! சிலுவையிலே உயிர் விட்டீர்களா? எல்லாரும் உங்களை சுற்றி வேடிக்கை பார்க்கிறார்களா?
இயேசப்பா! உங்க இறப்பின் மூலம் எங்களுக்கு வாழ்வு தங்கப்பா.
பதிமூன்றாம் நிலை:
இயேசப்பா! நீங்க இறந்து போய்ட்டிங்களே! இனிமே நான் யாரோட பேசுவேன்? என் கஷ்டத்தை எல்லாம் யார்கிட்ட சொல்லுவேன்? மாதா மடியில உங்களை கிடத்தி உங்க அம்மாவும் அழுறாங்களே! அவங்களால உங்களை இப்படி பார்க்க முடியல இயேசப்பா!
இயேசப்பா! அம்மா இல்லாத பிள்ளைகளுக்கு மாதா தான் அம்மா. சரியா!
பதினான்காம் நிலை:
இயேசப்பா! உங்க உடலை எடுத்துக்கொண்டு கல்லறைல வெச்சிட்டாங்களே! ஆனா இயேசப்பா! உங்களுக்காவது ஒரு கல்லறை கெடச்சுது. எங்க அம்மா அப்பா இரண்டு பேருமே கொரோனா நோயினால் இறந்துட்டாங்க. அவங்கள என் கண்ணுல கூட காட்டால. எங்கயோ பொதைச்சிட்டாங்க. இயேசப்பா! எனக்கு யார் இருக்கா?
இயேசப்பா! என்னைப்போன்ற அனாதை பிள்ளைகளுக்கு நீங்கதான் அப்பா, அம்மா, நண்பன்.. எல்லாமே.......
Add new comment