கர்தினால் கிறிஸ்டின் டுமி அவர்களுக்கு நெல்சன் மண்டேலா விருது


Cameroon Concord News

ஆப்ரிக்காவின் காமரூன் நாட்டில் சிறுபான்மை இனத்தவருக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, நாட்டில் அமைதி நிலவ உழைத்துவரும் அந்நாட்டு கர்தினால் கிறிஸ்டின் டுமி அவர்களுக்கு, நெல்சன் மண்டேலா விருது வழங்கப்பட்டுள்ளது. காமரூன் நாட்டின் மொத்த மக்கள் தொகையில், ஏறத்தாழ 20 விழுக்காட்டினராக இருக்கும் ஆங்கில மொழி பேசும் மக்கள், அரசால் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது குறித்து, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன், நாட்டில் அமைதி நிலவ, அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் போராடி வரும் கர்தினால் கிறிஸ்டின் டுமி அவர்களுக்கு வழங்கப்படுள்ள விருதை, அவர் சார்பாக, அருள்பணி மைக்கேல் ட்சோக்கும்போது அவர்கள் பெற்றுக்கொண்டார்.

டெனிஸ்  மற்றும் லெனோரா போரெட்டியா நிறுவனம் வழங்கும் நெல்சன் மண்டேலா விருதை, கர்தினாலின் சார்பாகப் பெற்ற விழாவில் உரையாற்றிய அருள்பணி ட்சோக்கும்போது அவர்கள், கர்தினால் டுமி  அவர்களைப்போல், ஒவ்வொருவரும், அமைதி, நீதி, மற்றும், மனித உரிமைகளுக்காக உழைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

பிரெஞ்ச் மொழி பேசும் மக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட காமரூன் நாட்டில், ஆங்கில மொழி பேசும் மக்கள், அரசு நிர்வாகத்தால், பாகுபாட்டுடன் நடத்தப்படுவதையொட்டி, 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், தெருவில் வந்து போராடத் துவங்கினர். அதிலிருந்து, தொடர்ந்து வரும் மோதல்களைத் தவிர்க்கவும், நாட்டில் அமைதி நிலவவும் குரல் எழுப்பி வருகிறார் 88 வயதான, கர்தினால் கிறிஸ்டின்  டுமி.

பிரெஞ்ச் மொழி ஆதரவு அரசுக்கும், ஆங்கிலம் பேசும் மக்களின் குழுக்களுக்கும்  இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களால், இதுவரை 30,000த்திற்கும் மேற்பட்ட காமரூன் மக்கள், நைஜீரியாவில் அடைக்கலம் தேடியுள்ளனர். நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர், நாட்டிற்குள்ளேயே குடி பெயர்ந்து வாழ்கின்றனர்.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்)

Add new comment

6 + 2 =