இலங்கையில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 முதல் 15 வரை இலங்கைக்கு தனது திருத்தூதுப் பயணத்தை மேற்க்கொண்டார். 13 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கை தலைநகர் கொழும்பு வந்தார். கொழும்புக் கடற்கரையில் திருப்பலி நிறைவேற்றி மறைப்பணியாளர் ஜோசப் வாஸ் அவர்களை புனித நிலைக்கு உயர்த்தினார். இவரே இலங்கையின் முதல் புனிதர் ஆவார். 

சமய பிளவுகளைக் கடந்து, வன்முறையை நாடாமல், எல்லா உயிரின் புனிதத்தன்மையை மதித்துப்போற்றிடும், அமைதிக்கு வழிவகுக்கும் உண்மையான முறையில், எவ்வாறு கடவுளை வழிபடமுடியும் என்பதனை உணர்த்திய, புனித ஜோசப் வாஸ் வழியில் நாமும் செல்லவேண்டும் என திருத்தந்தை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இது 26 ஆண்டுகளாக சிங்களர்-தமிழர்களுக்கு இடையே நடந்து முடிந்த போரின் பின்னணியில் பலருக்கும் தேவையான ஒரு செய்தியாகவே கருதப்பட்டது. அதன்பின்பு திருத்தந்தை அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார்கள். 

பின்னர் அங்குள்ள திருத்தலத்தில் செபத்தில் பங்குகொண்ட அவர்கள், அம்மண்ணில் செய்த பாவங்களுக்கும் தீச்செயல்களுக்கும் பரிகாரம் செய்யவேண்டிய அருளை வேண்டி மன்றாட அழைப்புவிடுத்தார். 

இலங்கையில் உள்ள மக்கள்தொகையில் 7 சதவீதம் கிறிஸ்தவர்கள், 10 சதவீதம் இஸ்லாமியர்கள், 13 சதவீதம் இந்துக்கள், 70 சதவீதம் புத்தர்கள் எனக் கூறுகிறார்கள். கடந்த முறை அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் வந்தபோது புத்தர்கள் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார்கள். இந்த முறை அனைத்து சமயத்தின் பிரதிநிதிகளும் திருத்தந்தையைச் சந்தித்தார்கள். 

இலங்கையில் ஒற்றுமை நிலவ அனைவரும் புனித ஜோசப் வாஸ் அவர்களின் வழியில் சமய வேற்றுமைகளைக் கடந்துசெல்லவேண்டும் எனத் திருத்தந்தை வலியுறுத்தினார்.
 

Add new comment

7 + 6 =