அவசர அவசரமாக அருள்நிறை அன்னையிடம்...


Miraculous medal of our lady of grace By Xhienne - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=2169454

நெருக்கடியான காலங்களில் அன்னையிடம் குடும்பங்களை ஒப்படைப்பது என்பது வரலாற்றின் சிறப்பு. அன்னையின் பரிந்துரை உலக வரலாற்றில் ஆறுதல் தரும், குணம் அளிக்கும், நலம் நல்கும் பரிந்துரையாகவே இருந்திருக்கின்றது.

அருள்நிறை அன்னையின் அதிசய பதக்கம் என்று சொல்லப்படுகின்ற திருப்பதக்கத்தை பலரும் நம்முடைய கழுத்தில் தொங்கவிடுகிறோம். 1830 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி புனித கேத்தரின் லெபோரே அவர்கள் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் அன்னை மரியாவிடமிருந்து பெற்றுக்கொண்டக் காட்சியின் அடிப்படையில் அட்ரியன் வாச்செத் என்பவரால் உருவாக்கப்பட்டது. 

இந்த திருப்பதக்கம் கத்தோலிக்கத் திருஅவையில் ஒரு அருள்குறியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஓ மாசற்ற மரியாவே, உம்மிடம் உதவிதேடிவரும் எங்களுக்காக மன்றாடும்! என இதில் பெறிக்கப்பட்டுள்ளது. இதை அணிந்துகொள்பவர்கள் அனைவரும் கடவுளின் மபெரும் இரக்கத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்று புனித கேத்தரின் அவர்களுக்கு அன்னை அறிவுறுத்தினார்கள்.

அருள்நிறை மரியாவின் திருப்பதக்கம் எப்படி அதிசய திருப்பதக்கமாக மாறியது?

1832 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாரிஸ் நகரில் காலரா தொற்றுநோயால் 20 ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் இறந்தார்கள். அப்பொழுது பிறரன்பு சகோதரிகள் சபையை சார்ந்தவர்கள் 2 ஆயிரம் திருப்பதக்கத்தை மக்களுக்கு கொடுத்தார்கள். மக்கள் அதை அணிந்துகொள்ள ஆரம்பித்தபோது, குணம்பெறுதலும், மனமாற்றமும் நடைபெறத் தொடங்கியது. எனவே பாரிஸ் நகர மக்கள் அருள்நிறை அன்னையின் அதிசயத் திருப்பதக்கம் எனக் கொண்டாடினார்கள். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 முதல் 26 வரை நவநாளும், 27 ஆம் தேதி திருவிழாவும் அருள்நிறை மரியாவுக்குக் கொண்டாடப்படுகிறது. 

இப்படி வரலாறுகள் இருக்க, இந்த ஆண்டினை அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிப்பதாக பிலிப்பைன்ஸ் ஆயர்கள் பேரவை முடிவுசெய்துள்ளது. அதனடிப்படையில் மே மாதம் 13 ஆம் தேதி பாத்திமா அன்னை விழா அன்று சிறப்பாக அறிவிக்கப்படவுள்ளது. 2013 ஆண்டு நம்பிக்கை ஆண்டில் பிலிப்பைன்ஸில் கடினமாக சூழ்நிலையில் அன்னையின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. மீண்டும் இப்பொழுதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அர்ப்பணிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

திருத்தந்தை அவர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிட்டுள்ள தனது மடலில் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில் வலைதளங்களில் உள்ள நல்ல வழிமுறைகளையும் பின்பற்றி அனைவரும் செபமாலை செபிக்க வேண்டும் எனவும், திருத்தந்தையும் ஆன்மீக வழிகளில் இறைமக்களுடன் இணைந்து செபிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல, இத்தாலி, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் திருஅவையின் அன்னை மரியாவுக்கு மே மாதம் 1 முதல் (இன்று) அர்ப்பணிப்பதாக  அந்நாடுகளின் ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளார்கள்.

நாமும் நம்முடைய குடும்பங்களையும், குறிப்பாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களையும் அருள்நிறை அன்னை மரியாவின் ஆறுதல் தரும், குணம் அளிக்கும், நலம் நல்கும் பரிந்துரையில் வைத்து மன்றாடுவோம். 
 

Add new comment

14 + 6 =