Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வெல்லெத்ரி சிறையில் திருத்தந்தையின் புனித வியாழன் திருப்பலி
ஏப்ரல் 18, புனித வியாழனன்று மாலை 4.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகருக்கருகே அமைந்துள்ள வெல்லெத்ரி (Velletri) சிறையில் 'ஆண்டவரின் இறுதி இரவுணவு' திருப்பலியை நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லெத்ரி சிறையில்...
வெல்லெத்ரி சிறையில் உள்ள கைதிகள், காவல்துறையினர் மற்றும் அங்கு ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டிருப்போர் ஆகியோருக்கு திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, 12 கைதிகளின் காலடிகளைக் கழுவுவார்.
சமுதாயத்தின் ஓரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதுபோல் உணரும் கைதிகளுக்கு, திருத்தந்தையின் வருகையும், திருப்பலியும், குணமளிக்கும் மருந்தாக இருக்கும் என்று, இச்சிறையில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணி பிராங்கோ தியமாந்தே (Franco Diamante) அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
சிறையில், ஐந்தாவது முறையாக...
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா நாட்டின் புவனஸ் அயிரஸ் பெருமறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய வேளையில், அங்குள்ள சிறைகளில், புனித வியாழன் திருப்பலிகளை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, உரோமையிலும் அதே பழக்கத்தைத் தொடர்ந்து வந்துள்ளார்.
2013ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, புனித வியாழனன்று, வளர் இளம் கைதிகளின் இல்லமான "Casal del Marmo"விலும், 2015ம் ஆண்டு, Rebibbia சிறையிலும், 2017ம் ஆண்டு, Paliano சிறையிலும், 2018ம் ஆண்டு, Regina Coeli சிறையிலும் ஆண்டவரின் இறுதி இரவுணவு திருப்பலிகளை நிறைவேற்றி, கைதிகளின் காலடிகளைக் கழுவிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, வெல்லெத்ரி சிறையில், ஐந்தாவது முறையாக, சிறைக் கைதிகள் நடுவே, திருப்பலியை நிறைவேற்றச் செல்கிறார்.
நன்றி வத்திக்கான் செய்தி.
Add new comment