Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மனித வர்த்தகத்திற்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவை
மனித வர்த்தகத்தை வளர்ப்பதற்கு, இன்றைய தகவல் தொழில்நுட்பங்கள், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, அதே தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மனித வர்த்தகத்தைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.
ஐரோப்பாவில் பாதுகாப்பையும், கூட்டுறவையும் வளர்க்கும் நிறுவனமான OSCE ஏற்பாடு செய்யும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், மனித வர்த்தகத்தை மையப்படுத்தி, ஏப்ரல் 8, 9 ஆகிய இருநாள்கள், வியன்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
தகவல் தொழில்நுட்பத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியும், அதன் உலகளாவிய பரவலும், பெரும் முன்னேற்றங்களைக் கொணர்ந்துள்ளதைப் போல் தோற்றமளித்தாலும், அதன் பயன்கள் பெரும்பாலும், வசதி படைத்தோரையே சென்றடைந்துள்ளன என்று, அருள்பணி Urbańczyk அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
"தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித வர்த்தகத்திற்கு எதிராகப் போராடுவது" என்பதை, இக்கருத்தரங்கின் மையக்கருத்தாகத் தெரிவு செய்துள்ளதை குறிப்பிட்டுப் பேசிய அருள்பணி Urbańczyk அவர்கள், தொழில் நுட்பங்கள் தன்னிலேயே நல்லவை என்பதை இக்கருத்தரங்கின் மையக்கருத்து உணர்த்துவதாகக் கூறினார்.
அரசு சாராப் பணி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வலுவற்ற மனிதருக்கு உதவிகள் செய்வதையும், குறிப்பாக, மனித வர்த்தகத்திற்கு உள்ளாகும் புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதையும் நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று அருள்பணி Urbańczyk அவர்கள், அழைப்பு விடுத்தார்.
மனித வர்த்தகத்திற்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவை, குறிப்பாக, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை மேற்கொண்டு வரும் முயற்சிகளை தன் உரையில் சுட்டிக்காட்டிய அருள்பணி Urbańczyk அவர்கள், Talitha Kum (https://www.talithakum.info/), Renate (http://www.renateeurope.net/) மற்றும் Coatnet (https://www.coatnet.org/) போன்ற பணி அமைப்புக்களின் முயற்சிகளை பாராட்டிப் பேசினார்.
"அடிமைத்தனம் வேறு ஏதோ ஒரு காலத்தில் நடைபெற்றது அல்ல, அது நம் காலத்திலும் தொடர்ந்து வருகிறது. மனித குலத்திற்கு எதிரான இக்குற்றத்திற்கு நாமும் ஏதோ ஒரு வழியில் உடந்தையாக இருக்கிறோம். எனவே, இக்குற்றத்திற்கும் நமக்கும் தொடர்பில்லை என்று நம்மால் கை கழுவ முடியாது" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி மாத செபக்கருத்தில் கூறிய சொற்களை, அருள்பணி Urbańczyk அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார். (வத்திக்கான் செய்தி)
Add new comment