Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திருத்தந்தையின் இளையோர் பற்றிய அறிவுரை மடல் - "கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்"
இளையோரை மையப்படுத்தி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது அறிவுரை மடலாக, ஏப்ரல் 2, இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் வெளியிடப்பட்டது.
இளவயது புனிதர்களும், இயேசுவின் இளவயதும்
திருஅவையில் தங்கள் முக்கிய இடத்தை உணர்ந்து, இளையோர் செயலாற்றவேண்டும் என்பதை, தன் மடலில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் கொண்டாடப்படும் இளவயது புனிதர்கள், விவிலியத்தில் இடம்பெறும் இளையோரின் எடுத்துக்காட்டுகள், இயேசுவின் இளவயது நிகழ்வுகள் ஆகியவற்றை தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
திருஅவை, இளமையோடு செயல்படவேண்டியதன் அவசியம், இளையோரின் குரலுக்கு செவிமடுக்கவேண்டிய அவசியம், இளையோரை மையப்படுத்திய பணிகளை புதுப்பித்தல், இளையோரை ஈர்த்தல் போன்ற கருத்துக்களையும், திருத்தந்தை இம்மடலில் பதிவு செய்துள்ளார்.
அறிவுரை மடலின் 9 பிரிவுகள்
"கிறிஸ்து உயிரோடு இருக்கிறார், அவர் இளையோரையும் உயிரூட்டம் கொண்டிருக்கும்படி கேட்கிறார்" என்ற விண்ணப்பத்துடன் துவங்கும் இம்மடல், ஒன்பது பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இளையோரைக் குறித்து கூறப்படும் விவிலியப் பகுதிகளை தன் முதல் பிரிவில் எடுத்துக்காட்டுகளுடன் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இயேசு என்றும் இளமையானவர்' என்ற தலைப்பில், இயேசுவின் இளமைப்பருவ நிகழ்வுகள் தரும் படிப்பினைகளை, இரண்டாம் பிரிவில் முன்வைத்துள்ளார்.
இளையோர் இவ்வுலகின் வருங்காலம் மட்டுமல்ல, அவர்களே, இவ்வுலகின் நிகழ்காலம் என்ற தலைப்பில் மூன்றாவது பிரிவைத் துவக்கும் திருத்தந்தை, இளையோருக்குச் செவிமடுக்கவேண்டிய கடமையைக் குறித்து, இப்பிரிவில் வலியுறுத்தியுள்ளார்.
'கடவுளே அன்பு', 'கடவுள் உங்கள் மீது அன்புகூர்கிறார் என்பதில் ஐயம் கொள்ளாதீர்கள்' 'தந்தையாம் இறைவனின் அரவணைப்பில் பாதுகாப்பை கண்டுணருங்கள்' என்ற மூன்று கருத்துக்களை தன் நான்காவது பிரிவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்.
கனவுகள் காண இறைவன் தடைவிதிப்பதில்லை, மாறாக, ஊக்கம் அளிக்கிறார் என்ற கருத்தை, 'இளையோரின் பாதைகள்' என்ற 5வது பிரிவிலும், எவ்வித வரலாற்றுப் பின்னணிகளையும், மூத்தவர்களின் அனுபவங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், வருங்காலத்தைக் கட்டியெழுப்பத் துடிக்கும் இளையோரின் நிலைகுறித்து தான் வருத்தமடைவதாக, 6ம் பிரிவிலும் விவரித்துள்ளார், திருத்தந்தை.
மேலும், இம்மடலின் 7ம் பிரிவு, 'இளையோர் மேற்கொள்ளும் மறைப்பணிகள்' குறித்தும்,
8ம் பிரிவு, 'இறையழைத்தல்' குறித்தும்
9ம் பிரிவு, 'இளையோரின் தேர்ந்து தெளிதல்' குறித்தும், எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கின்றன.
நன்றி வத்திக்கான் செய்தி
Add new comment