இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் – 2020 'வார்த்தையின் ஆண்டு'


இறை வார்த்தையைத் தாங்கியுள்ள விவிலியம்

2020ம் ஆண்டை, 'வார்த்தையின் ஆண்டு' என்று சிறப்பிக்க, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் முடிவு செய்துள்ளனர்.

'பேசுகின்ற கடவுள்' என்ற பெயரில் சிறப்பிக்கப்படவிருக்கும் இவ்வாண்டில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் தரும் ஆண்டாக இதை மாற்றும் என்று ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

2020ம் ஆண்டில், இரு ஆண்டு நிறைவுகள் நினைவுகூரப்படுவதையொட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 'ஆண்டவரின் வார்த்தை' (Verbum Domini) என்ற தலைப்பில், 2010ம் ஆண்டு வெளியிட்ட திருத்தூது அறிவுரை மடலின் 10ம் ஆண்டு நிறைவையும், விவிலிய அறிஞரான புனித ஜெரோம் அவர்கள், 420ம் ஆண்டு இறையடி சேர்ந்ததன் 1600வது ஆண்டு நிறைவையும் சிறப்பிக்கும் வண்ணம் 'வார்த்தையின் ஆண்டு' கொண்டாடப்படவுள்ளது.

தனிப்பட்ட அளவிலும், பங்கு குழுமங்கள் அளவிலும் இறைவார்த்தை ஆற்றக்கூடிய தாக்கங்களைக் குறித்து மக்கள் சிந்திப்பதற்கு உதவியாக பல்வேறு செயல்பாடுகள் இவ்வாண்டில் மேற்கொள்ளப்படும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

2019ம் ஆண்டு, செப்டம்பர் 30ம் தேதி, புனித ஜெரோம் திருநாளன்று, இந்த சிறப்பு ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், டிசம்பர் 1ம் தேதி, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று 'வார்த்தையின் ஆண்டு' ஆரம்பமாகும் என்றும், ஆயர்களின் அறிக்கை தெரிவிக்கிறது.

நன்றி வத்திக்கான் செய்தி

Add new comment

12 + 7 =