Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அறிவியலாளராக மாறிய விவசாயி
இந்தியாவில் இவ்வாண்டு சனவரி 25ம் தேதி, பத்ம விருதுகளுக்கென அறிவிக்கப்பட்ட 112 பேரில், 12 பேர் விவசாயிகள்.
இவர்களில் ஒருவர், குஜராத் மாநிலம், ஜூனாகத் மாவட்டத்தைச் சேர்ந்த, 96 வயது நிரம்பிய, வல்லபபாய் வஸ்ரம்பாய் மார்வானியா அவர்கள்.
நாட்டு ரக கேரட்டைக் கண்டுபிடித்து, அதைப் பரவலாக்கியதற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
வல்லபபாய் அவர்கள், குஜராத் மாநிலத்தில் இருந்த நாட்டு ரக கேரட்டிலிருந்து மாதுவன் காஜர் (Mathuvan Gajar) என்றொரு கேரட் ரகத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
இவர், காம்த்ரோல் என்கிற கிராமத்தில் ஐந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தையோடு சேர்ந்து 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார் வல்லபபாய்.
பயறு வகைகள், தானிய வகைகள், நிலக்கடலை என்று சாகுபடி செய்து வந்துள்ள இவரது குடும்பம், மாட்டுத் தீவனத்துக்காகச் சோளம், மக்காச்சோளம், ராஜ்கோ எனப்படும் ஒருவகைக் கால்நடைத் தீவனம், கேரட் போன்றவற்றை சாகுபடி செய்துவந்துள்ளது.
1943ம் ஆண்டு நாட்டு ரகமாக இருந்த கேரட்டை குஜராத் விவசாயிகள் விளைவித்து மாட்டுக்குத் தீவனமாக மட்டும் பயன்படுத்தி வந்துள்ளனர். கால்நடைகள் சாப்பிடும்போது, மனிதர் ஏன் சாப்பிடக்கூடாது என்று எண்ணி, கேரட்டுகளை மூட்டைப் பிடித்துச் சந்தையில் விற்பனை செய்துள்ளார் வல்லபபாய்.
நகரத்து மக்கள் இதை விரும்பி வாங்கியதைக் கண்ட இவர், தொடர்ந்து கேரட்டுகளைச் சந்தைக்குக் கொண்டு போய் விற்பனை செய்ய, கேரட் மூலம் வருமானம் உயர ஆரம்பித்தது. இதனால், கேரட்டை மட்டுமே இரண்டு ஏக்கருக்கு விதைத்து உற்பத்தியைப் பெருக்கி உள்ளார் அவர்.
தொடர்ந்து தேவை அதிகரிக்க அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கும் கேரட் விதைகளைக் கொடுத்து பயிர் செய்யச் சொல்லியிருக்கிறார். அந்த விவசாயிகளும் கேரட்டில் நன்றாக வருமானம் பார்க்க, அந்தப் பகுதியில் கேரட் சாகுபடி அதிகரித்தது. இப்படி 1943ம் ஆண்டுத் தொடங்கிய முயற்சி, 1950 மற்றும் 60களில் கேரட்டின் உற்பத்தி பெருகியது.
1970களில் அந்தப் பகுதி விவசாயிகளின் நிலங்களுக்கு அது விரிவுப்படுத்தப்பட்டுப் பிரபலமானது. கேரட்டிற்காகத் தன்னுடைய இரண்டரை ஏக்கரில் விடாமல் சாகுபடி செய்துவந்த இவர், மூன்று ஏக்கர் நிலத்தை விதைப் பெருக்கத்துக்காகவே ஒதுக்கி கேரட் சாகுபடி செய்தார். அதில் கிடைத்த விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியும் வந்தார்.
அதிக நீளம் மற்றும் அதிகத் தடிமன் கொண்ட கிழங்கு, அடர்ந்த சிவப்பு நிறம், அதிக இனிப்புச் சுவை, அதிகப் புரதச்சத்து இதுதான் மாதுவன் காஜர் ரக கேரட்டின் தன்மை. இந்த நாட்டு ரகக் கேரட்டைப் பற்றித் தகவல் தெரிந்த ஜூனாகத் பகுதி மூன்றாம் நவாப் முகம்மத் மகாபத் கான் அவர்கள், தனக்கு விளைவித்துக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
மன்னர் குடும்பத்துக்கும் இதை விளைவித்துத் தினந்தோறும் அனுப்பியுள்ளார் வல்லபபாய். 1985ம் ஆண்டு முதல் வளமான கேரட் செடியிலிருந்து விதைகளை எடுத்து அதைப் பயிரிட்டு விதைப்பெருக்கம் செய்துள்ளார்.
ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்படும் வீரிய கேரட் ரகங்களே சில ஆண்டுகளில் தங்களின் தன்மையை இழந்துவரும் நிலையில், இந்த நாட்டு ரகத்தில் ஒரு ஹெக்டேருக்கு 74 டன் மகசூல் கிடைத்தது என்பதை 2017ம் ஆண்டு நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் உறுதி செய்தது.
இதற்காக 2017ம் ஆண்டு, தேசிய கண்டுபிடிப்பாளர் விருது வல்லபபாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது. (நன்றி: விகடன்)
Add new comment