Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அமேசான் பழங்குடியினர் நடுவே பணியாற்றியவர் கொலை
அமேசான் பகுதியில் பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த தெ ல சால் துறவு சபையின் அருள் சகோதரர் Paul McAuley அவர்களின் எரிக்கப்பட்ட உடல், ஏப்ரல் 2, இச்செவ்வாயன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பெரு நாட்டின் ஆயர் பேரவை, இந்த மரணம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென அறிக்கை வெளியிட்டுள்ளது.
71 வயது நிறைந்த சகோதரர் Paul McAuley அவர்கள், அமேசான் மழைக்காடுகளின் Iquitos பகுதியில் கடந்த 19 ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர் என்பதும், அப்பகுதியில் உள்ள இளையோருக்கு கல்வி வசதிகள் செய்து கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கன.
1947ம் ஆண்டு இங்கிலாந்தின் Portsmouthல் பிறந்த Paul McAuley அவர்கள், தெ ல சால் துறவு சபையில் இணைந்து, 1995ம் ஆண்டு பெரு நாட்டில் பணியாற்றத் துவங்கினார்.
கடந்த 24 ஆண்டுகளாக, அமேசான் பழங்குடியினர் நடுவே கல்விப்பணியில் ஈடுபட்டு வந்த சகோதரர் Paul McAuley அவர்கள், அமேசான் காடுகளையும், அங்கு வாழும் பழங்குடியினரையும் பாதுகாப்பதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொண்டவர் என்று சொல்லப்படுகிறது.
பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக துணிவுடன் குரல் கொடுத்து வந்த சகோதரர் Paul McAuley அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று, அமேசான் பகுதியில் இயேசு சபையினரின் பணிகளை ஒருங்கிணைக்கும் அருள்பணி Paul Chitnis அவர்கள் கூறியுள்ளார்.
சகோதரர் Paul McAuley அவர்களின் எரிக்கப்பட்ட உடல், லொரேத்தோ எனுமிடத்தில், அவர், பழங்குடி இளையோருக்கு நடத்தி வந்த விடுதியில், ஏப்ரல் 2ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது என்று செய்திகள் கூறுகின்றன. (ICN / Fides)
நன்றி வத்திக்கான் செய்தி.
Add new comment