அசிசி நகர் ஆலயத்தில் வணக்கத்துக்குரிய Carlo Acutis உடல்


an image of st. carlo axutis in media form. image from vatican news

'கிறிஸ்து வாழ்கிறார்' என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள திருத்தூது அறிவுரை மடலில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ள வணக்கத்துக்குரிய Carlo Acutis என்ற இளையவரின் உடல், ஏப்ரல் 6, இச்சனிக்கிழமை, அசிசி நகரின் புனித மேரி மேஜர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

'கிறிஸ்து வாழ்கிறார்' மடலில், "நீங்களே இறைவனின் இன்றையப் பொழுது" என்ற தலைப்பிட்டுள்ள மூன்றாம் பிரிவில், இன்றைய இளையோரைக் குறித்துப் பேசும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய இளையோருக்கு 15 வயது நிறைந்த கார்லோ தலைசிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் உலகில் வாழும் இளையோர், தொடர்பு சாதன கருவிகளின் அடிமைகளாக மாறாமல், கார்லோவைப்போல், ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று திருத்தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"நாம் ஒவ்வொருவரும் தனித்துவத்தும் கொண்டவர்களாய் பிறக்கிறோம், ஆனால், நம்மில் பலர், நகல்களாக இறக்கிறோம்" என்று, வணக்கத்துக்குரிய கார்லோ அவர்கள் கூறியுள்ள சொற்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மடலில் மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளார்.

1991ம் ஆண்டு இலண்டன் மாநகரில் பிறந்த கார்லோ, தன் 7ம் வயதில் திருநற்கருணையை முதல் முறையாகப் பெற்றதிலிருந்து, நாள் தவறாமல் திருப்பலியில் கலந்துகொண்டார் என்பதும், இவர், உலகில் உள்ள அனைத்து திருநற்கருணை புதுமைகளையும் திரட்டி, வலைத்தளம் ஒன்றை உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இரத்தப் புற்றுநோய் காரணமாக, 2006ம் ஆண்டு, அக்டோபர் 12ம் தேதி, தன் 16வது வயதில் இறையடி சேர்ந்த கார்லோ அவர்களை, 2018ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வணக்கத்துக்குரியவர் என்று அறிவித்தார்.

கணனியின் பல்வேறு நுணுக்கங்களை அறிந்திருந்த கார்லோ அவர்களை, இளையோரின் எடுத்துக்காட்டாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் திருத்தூது அறிவுரை மடலில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி வத்திக்கான் செய்தி

Add new comment

13 + 1 =