Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வேண்டும்! வேண்டும்! EVM வேண்டும்! | ரோஜர் | VOICE
நேற்றைக்கு காலையில், “செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – முதல்வர் நேரில் ஆய்வு” ன்னு, ஒரு வீடியோ பார்த்தேங்க. அந்த வீடியோவுல ‘மக்களின்’ முதல்வரப் பார்த்தேன். அவரோடு கூட இருந்த பலரையும் பார்த்தேன். மக்களுக்காக உழைத்து உழைத்தே ஓடாய் தேய்ந்து போன, அந்த முகங்களைப் பார்க்க பார்க்க, நெஞ்சில் ஏதோ ஒரு பாரம். அந்த கடவுளுக்கு கண்ணில்லையா? இது போன்றவர்கள், எதற்காக மீண்டும் மீண்டும் கடினப்பட்டு, தேர்தலை சந்திக்க வேண்டும்? ‘நிரந்தரமாகவே’ எங்களை ஆளக்கூடிய ‘முதல்வராக’ இருந்து விடக்கூடாதா? என்கிற நினைப்பு தான் ஓடிக்கொண்டு இருந்தது. பாவம், மக்களுக்காக இவ்வளவு மழையிலும் ஓய்வின்றி உழைக்கிறார்களே? ஓடாய் தேய்ந்து போகிறார்களே? என்ன அர்ப்பணம், என்ன ஒரு தியாகம், என்ன ஒரு தர்மயுத்தம்!!! அப்பப்பா, சொல்லி மாளாது… சரி, நம்ம கதைக்கு வருவோம்.
அந்த வீடியோவுக்கு கீழே, ‘மக்களின் தலைவனே! நீயே என்றும் மக்களின் முதல்வர்’ என்று அருமையான செந்தமிழில், பச்சைத்தமிழர் ஒருவரால், நம்ம T.R. பாணியில், அடுக்கு மொழியில் எழுதப்பட்டிருந்த விமர்சனத்தையும் பார்த்தேன். ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்? என்றாலும், சந்தேகத்தில் அடுத்தடுத்த பதிவுகளைப் பார்த்தேன். இன்னும் கீழே பார்த்தேன். எல்லாரும் இதே பாணி தான். ரெண்டு ரூபாய் என்று, அத்தனை பதிவுகளையும் எளிதாக கடந்து விட முடியாதே. உள்ளத்தின் ஆழத்திலிருந்தும் எழுதியிருக்கலாமே? கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, முன்தோன்றிய மூத்தக்குடியின் மக்கள், எவ்வளவு ‘அறிவாளிகளாக’ இருக்கிறார்கள்? என்கிற வியப்பு, என்னை ஆட்கொண்டது. எல்லாம் பெரியாரின் ‘பகுத்தறிவு’ விதைகள். ‘ஆன்மீக’ மண்ணை, பகுத்தறிவு மண்ணாக மாற்றியது இந்த மகான் தானே? உச்சி குளிர்ந்துவிட்டது, தமிழர்களின் அறிவுப்பெருக்கையும், பகுத்தறிவின் வளர்ச்சியையும் கண்டு.
ஆனா, இத விமர்சனம் செய்யுறநான் ஒரு முட்டாப்பயங்க. ஏன்னா, இந்த செய்தியையும், பதிவையும் வாசிச்ச உடனே, எனக்கு பயங்கரமா கோபம் வருது. அடக்க முடியாத ஆத்திரம் வருது. ஆனா கோபப்பட்டு, என்ன செய்யுறது? ஊரோடு ஒத்து வாழனும்னு, எங்க பெரியவங்க சொல்லிக் கொடுத்திருக்காங்களே. அதயும் மீறி கோவப்பட்டாலும், ‘உனக்கு ஏன் இந்த அக்கறை, உலகத்துல யாருக்கும் இல்லாத அக்கறைன்னு’‘ கண்ட’வென்னாலும், அறிவுரை சொல்வானே? அதாங்க, என்னப் ‘பார்த்து’ அறிவுரை சொல்றவங்களைச் சொன்னேன்.. ஆனா, சும்மா இருக்கவும் முடியலயே! பட்டும், படாமல், ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆசை தான். இருந்தாலும், ‘ஆசை தான் துன்பத்திற்கு காரணனும்னு’ புத்தரே சொல்லிவிட்டாரே?அதுக்காக, ஆசைப்படாமலும் இருக்க முடியலியே. ஏன்னா, துன்பப்பட்டா தான் மகிழ்ச்சி கிடைக்கும்னு ‘திருச்சபையும்’ சொல்லிக் கொடுத்ததே! அப்படின்னா என்ன செய்யுறது? எப்படிச் செய்றது? ஏதாவது நாமும் கருத்துச் சொல்லலாமா? கருத்து சொன்னால், ‘பருத்தி வீரன்’ படத்துல, சரவணன் சொல்ற மாதிரி, ‘கண்ட நாயெல்லாம் புத்திமதி சொல்லுது பாரு. சொன்னா கேட்கனும்ல’ன்னு, நாலு பேரு சொல்லத்தான் செய்வான். ஊரு வாய மூட முடியுமா? என்ன செய்யலாம்!!!...
கருத்து சொன்னா, ‘கருத்து கந்தசாமின்னு’ பட்டத்த கொடுத்து, மூலையில உட்கார வெச்சுருவானுங்க. சரி, வழக்கம்போல, வக்கணையா டீக்கடைய உட்காந்து பேசுற, வெட்டி ‘விமர்சனத்தையாவது’ செய்வோம். சரி, யார வச்சு ஆரம்பிக்கலாம்? மக்களின் முதல்வர கேள்வி கேட்க முடியாது. ஏன்னா, ‘உழைத்து உழைத்தே’ இந்த உயர்ந்த நிலைக்கு வந்த உத்தமர் அவர். ‘எட்டு கோடி தமிழர்களின் அன்பர்’, ‘ஆகாயச் சூரியன்’‘ விவசாயிகளின் நண்பன்’. அப்படியே தெரியாம ‘தப்பா’ ஏதாவது எழுதுனா என்னப் பண்ணுறது? வேலியில போற ஓணாண எங்கேயோ விட்ட கதயா, நம்ம கதை ஆகிடும். அதையும் மீறி கொஞ்சம் தைரியம் வந்து அவர, விமர்சனம் செஞ்சா, நம்ம ‘தும்பிகள்’ பக்கவாத்தியத்துக்கு வந்துருவாங்களே? ‘இந்த மண்ணின் மகனைப்பார்த்து, எப்படி விமர்சனம் செய்யலாம்? அவர் தமிழ் இனத்தின் மகன்’ என்று சொல்லி, தமிழ் ‘இனத்தை’ எழுச்சி பெறச் செய்து விடுவார்கள். போதாக்குறைக்கு சாட்டையும் நம்மை ‘வச்சு’ செய்துவிடும். அது தேவையில்லாத பிரச்சனை.அதனால, அவர விட்டுருவோம்.
சரி, நம்மள படிக்க வச்சு, அதிகாரத்தில இருக்கிறவன் ‘எத்தன’ பேரையும் வச்சுக்கலாம்னு, ‘பகுத்தறிவ’ கத்துக்கொடுத்து, ‘திராவிடத்த’ வச்சு செய்யலாம்னு பாத்தா, பகுத்தறிவுப் புலவர்கள், சொம்பைத் தூக்கிடுவாங்களே!!!. அப்ப யாரத்தான் வச்சு செய்றது?ன்னு யோசிச்சு யோசிச்சு பாத்தப்ப, ‘கலகலப்பு’ படத்தில சந்தானத்தோட காமெடி ஒன்னு தான், நியாபகத்திற்கு வந்துச்சு. ‘வாத்தியார, நீங்க அடிச்சு கிழிச்சதெல்லாம் போதும். வழக்கம்போல இளிச்சவாயப் பய எவனாவது ஒருத்தன் மாட்டுவான். அவன வச்சு செய்வோம்’. இது டயலாக் தான், but இந்த டீலிங் எனக்கே ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால, இளிச்சவாயப்பய ‘எவனையாவது’, வச்சு செய்யனும்னு ஆசப்பட்டேன். இந்த கட்டுரைய எழுத ஆரம்பிச்சிட்டேன்…
யார வச்சு செய்யலாம்? நம்ம வச்சு செய்றவன், எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்கனும். நம்ம முதல்வர் ஐயா போன்ற அறிவாளி இருக்கிற உலகத்துல, அவன் கோமாளியாக இருக்கனும். யாராவது தேறுவாங்களா? பார்ப்போம். அட! இங்க ஒருத்தன், அளவெடுத்து செஞ்ச மாதிரி, நாம் வச்ச செய்ய ஒருத்தன் சிக்கியிருக்கானே! யாருண்ணே அதுன்னு நீங்க அவன் பேர கேட்கலாம்? ஆனா,பேர நான் சொல்லவே மாட்டேன்! நீங்களே கண்டுபிடிங்க!!! நம்ம கோமாளிய எப்படி அறிமுகப்படுத்தலாம்? 23 ம் புலிக்கேசி படத்துல வர்ற, அந்த புலவனைப்போல, ரெண்டு வார்த்த எழுதுறேன், நீங்களேஆள கண்டுபிடிங்க…நம்ம கதைக்கு இல்லல்ல…நம்ம கவிதைக்கு வருவோம்.
நான் சொல்ற கோமாளி, ஒரு ‘கூறு கெட்ட குப்பைங்க’. அதாங்க, சும்மா குப்பையா கிடந்த, கிரானைட்ட, கவர்மெண்ட் எடுத்து நடத்துனா ‘கொள்ளை’ இலாபம் பாக்கலாம்னு, ஏற்கெனவே கொள்ளை அடிச்சவனை, லாடம் கட்டிட்டாரு. அத்தோட விட்டிருந்தாலும் பரவாயில்ல, தொல்லையன்டேயே, நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அறிக்கை கொடுக்கிறாரு!!! அடுத்து அவரோடு கோமாளித்தனம் சென்னையில நடந்தது. என்னன்னு கேட்கிறீங்களா? “ஜோசியம் சொல்றான்”. அதாங்க,சென்னையில குடிநீர் பிரச்சனைக்கு இப்படி செஞ்சா, இனி தண்ணிப்பிரச்சனையே வராதுன்னு, பத்து வருசத்துக்கு முன்னாடியே எழுதிக்கொடுக்கிறான். எழுதிக்கொடுத்த அறிக்கை, ஆதாரம் அதெல்லாம் எங்க?ன்னு நீங்க கேக்க மாட்டீங்க. ஏன்னா, நமக்குத்தான் ‘மக்களின் முதல்வர்’ இருக்கிறாரே? நம்ம அறிவாளிங்ககிட்ட கொடுத்த குறிப்பெல்லாம், கருவூலத்தில பத்திரமா இருக்கும். கவலப்படாதீங்க. எத்தனை வருசம் ஆனாலும், அங்க பத்திரமாக இருக்கும். நமக்குத்தான் ‘சூறாவளி’ முதல்வர் இருக்கிறாரே? புயலுக்கே சவால் விடுகிறாரே? கொரோனாவை‘கட்டுக்குள்ளேயே’ வைத்திருந்த, வீரமகான் ஆயிற்றே? நமக்கெதுக்கு அது. விடுங்க. நம்ம விடுகதைக்கு வருவோம்.
அடுத்து, “அவன் ஒரு பிழைக்கத் தெரியாத பரதேசிங்க”…. அதாங்க, ஊர் ஊரா டிரான்ஸ்பெர் வாங்கிட்டு அலையுற பரதேசி. உங்க வாயில இருந்து, நல்ல வார்த்தையே வராதான்னு நீங்க கேட்கிறது எனக்கு கேக்கலயே!!! அது மட்டும் இல்லங்க, “அவன் ஒரு பொறுக்கிப் பய”. அதாங்க, சுடுகாட்டில படுத்துகிட்டு, குப்பய பொறுக்கிட்டு திரிஞ்ச பய. முழிச்சிருந்து சுடுகாட்டுலயே வேலய காட்டுறான். என்னா தைரியங்க அவனுக்கு? அத்தோட அவன் ஒரு‘மொடாக் குடிகாரன்’. அதாங்க, ஏதோ ‘காலா’ கம்பெனியாம், அவன் ஏதோ ‘சின்ன தப்பு’ பன்னுனானாம். கம்பெனிய சீல் வைக்கிறான் முட்டாப்பய. விடுவோமா “நாங்க”.இப்ப நம்ம கதை விமர்சனத்தில, சின்ன ட்விஸ்ட். அதாங்க, நம்ம “நாங்க” நுழைஞ்சிருக்காங்க….“நாங்க”அப்படிங்கிறது யாரு?ன்னு நீங்க கேக்க மாட்டீங்க. கேட்டாலும் நான் சொல்ல மாட்டேனே? நீங்களே கண்டுபிடிங்க. ஆனா, கண்டவனையும் கற்பனை பண்ணிட்டு, என்ன கோர்த்து விட்டுறாதீங்க. நான் பொறுப்பு கிடையாதுங்கோ!!!நானும் சொல்ல மாட்டேங்கோ!!!
நாங்க சொல்ற கோமாளி, கடைசியில ‘உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டாங்க’. அதாங்க, நட்டத்தில இயங்கிக்கிட்டு இருந்த நம்ம ‘நாட்டு’ கம்பெனிய ‘லாபத்துக்கு’ கொண்டு போய்ட்டடான். கிராதகன். எவ்வளவு பெரிய குற்றம்!!! வச்சோம் பாருங்க, ஆப்பு. தூக்கி அடிச்சோம்லா? எங்க அடிச்சோம் தெரியுமா? கற்பனைக்கே எட்டாத இடங்க. அதாங்க, இடத்த மாத்திப்போறதுக்குல்ல, ஒரே ராத்திரியில ரெண்டு இடத்துக்கு மாத்துனோம். ஒரு மூலையில உட்கார்ந்து ‘அறிவியல்’ ஆராய்ச்சி பன்னட்டும்னு விட்டுட்டோம். அங்கயும் பயபுள்ள சும்மா கிடக்க மாட்டேங்குது. விடுவோமா நாங்க! ஆத்தாவின் வாரிசுகள் ஆயிற்றே!!! அச்சு அசலா ‘ஆத்தா’ செய்ய வேண்டிய சீர் வரிசைகளை, பிள்ளைகள் நாங்கள் செய்யணுமே! சித்தியையே உண்டு இல்லையென்று செய்தவர்கள் நாங்கள்!!! இல்லையென்றால், அம்மாவின் வளர்ப்புக்கு என்ன மரியாதை?
கொஞ்ச நாளா சந்தேகம். வேறென்ன? அந்த கோமாளிக்கு, அரசியல் மேல கொஞ்சம் ஆர்வமோ?ன்னு சந்தேகம். வேற எதுக்கு? பணம் சம்பாதிக்கத்தான். நாங்கள்ளாம் இங்க உட்கார்ந்து, எங்க உடல், பொருள், ஆவி அத்தனையையும் மக்களுக்குக் கொடுத்து, மக்களுக்காகவே உழச்சிகிட்டு இருக்கோம். இவன் வந்து, தமிழ்நாட்டுப் ‘பணம்’ அத்தனையையும் ஆட்டயப் போடுவான். அத வெளிநாட்டுக்கார மிஷினரிங்க கிட்ட கொடுப்பான், நாங்க பாத்துகிட்டு சும்மா இருப்போமா? அதாங்க, நம்ம தலைமையில இருக்கிற ஆறுமுகத்தோட சேர்ந்து,‘ராஜதந்திரம்’ செஞ்சிட்டோம். என்னன்னு கேட்கிறீங்களா? அந்த பயலுக்கு, இன்னும் வருசம், பதவி முடிய இருக்கு. ஆனா, அவன் இப்பவே அடுத்த வருச எலெக்சனுக்கு தயாராகுறானோன்னு, ஒரு சந்தேகம்…
இங்க இருக்கிற அறிவாளிக ஓட்டுப்போட மாட்டான். பகுத்தறிவாதிக்கு ‘சொம்பு’ தூக்கவே நேரம் சரியா இருக்கும். ஆனா, முட்டாப்பயக ஓட்டப் போட்டுறுவானுங்களே??? அதான், பயமா இருக்கு… பாம்புக்கு பால் வார்க்க முடியாதுல்ல. அதனால, வச்சு, வச்சு இப்போதைக்கு ‘இழுத்தடித்து’செஞ்சிகிட்டு இருக்கோம். வேண்ணா, நீதிமன்றத்துக்கு போகட்டும். அதுக்குள்ள எலக்சன முடிச்சி, மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடிப்பது,ஈசி தானே? இலட்சத்திற்குத்தானே மதிப்பு? பின்பு என்ன எங்களுக்குப் பிரச்சனை? ஆனாலும்,எவ்வளவு நாடகங்கள்? எவ்வளவு பணம் விரயம்? கவலையில்லை. விடுவது எடுக்கத்தானே? இப்ப நாங்க உங்ககிட்ட கேட்கிற, அந்த கோமாளிக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க….நீங்க என்ன சொல்லனும்னு, நாங்களே எழுதித்தர்றோம். சொல்லுங்க. “நீயெல்லாம் ‘பத்தரை மாத்து தங்கமடா’. உன்ன விட்டா, எங்களுக்கெல்லாம் ஏழரையக் கொண்டு வந்துரவ. அதனால, வாய்ப்பு கொடுக்க முடியாது ராசா”. இத மட்டும் அந்த கோமாளியிடம் சொல்லுங்க. அது போதும்.
கடைசியா நாங்க ஒன்னு சொல்றோம், கேளுங்க! இந்த கோமாளிய, நீங்கள் நினைக்கிற இடத்தில் வச்சால் என்ன செய்வான் தெரியுமா? உதாரணத்திற்குச் சொல்கிறேனே? ஜிஎஸ்டியில், நமக்குக் கிடைக்க வேண்டிய பணம், மேலே உள்ளவன் ஏமாற்றி பறித்துக்கொள்கிறான்??? (அது பரம ரகசியம்!!!).இவன் இருந்தால் என்ன சொல்வான் தெரியுமா? நமக்கு கிடைக்கிற ஜிஎஸ்டி பணத்தை,‘கொரோனா’ காலத்தை முன்னிட்டு, சிறப்புச் சட்டம் இயற்றி, ‘தள்ளுபடி’ செய்யச் சொல்வான். அதாவது, ஒரு பொருளுக்கு 18% GST என்று வைத்துக்கொள்வோம். அதில், மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய, 9% SGST பணத்தைத் தள்ளுபடி செய்யச் சொல்லி விட்டு, ஜிஎஸ்டி கழித்த விலையில் மக்களுக்கு,பொருளை விற்கச் சொல்வான். ஏனென்றால்,எப்படியும் மேலே உள்ளவன் நமக்கான 9% SGST தர மாட்டானே?எனவே, நம் மக்களே ‘நேரடியாக’ அனுபவித்துக் கொள்ளட்டுமே. அதனால் நமக்கு அது நட்டம் இல்லையே. நம் மக்கள் தானே பயன் பெறுவது? எப்படியும் அது நமக்குக் கிடைக்காது என்பது தெரிந்தது தானே? அருமையான யோசனை தான். ஆனா, மக்கள் நாளைக்கு எங்களை மதிக்க மாட்டானே? இப்படியெல்லாம்‘விரைந்து’ பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லிவிட்டால், எங்கள் ‘அரசியலுக்கு’ என்ன வேலை?
அத்தனை மக்களும், ஒற்றை நாளில், இந்த‘கோமாளியின்’ பக்கம் சாய்ந்து விடுவார்களே? மேலே இருக்கிறவர்களுக்கும், எங்களுக்கும் உள்ள ‘ரகசிய உறவு’ கசிந்து விடுமே? (இப்ப மட்டும் என்ன வாழுதாம்? என்று நீங்கள் நினைப்பது, எனக்குக் கேட்கவில்லை). ‘புள்ளியை அழிக்காமலேயே,புள்ளிகளைஇணைத்து, கோலம் போடும்“வித்தை” தெரிந்த சதிகாரன் அல்லவா இந்த கோமாளி? விட்டு விட முடியுமா? அவனை நாங்கள் எப்படி அங்கீகரிக்க முடியும்? இப்போது, எங்கள் தரப்பு நியாயம் உங்களுக்குப் புரியுமே? மக்களுக்கு நல்லது செய்யவா நாங்கள் இருக்கிறோம்?நல்லது செய்ய நாங்கள் என்ன புனிதர்களா? அவ்வளவுதாங்க…முடிந்தது கட்டுரை.
அது சரி, தலைப்பிற்கும், கட்டுரைக்கும் சம்பந்தமேயில்லையே? அதைப்பற்றியெல்லாம் யார் கவலைப்பட போகிறார்கள்? மக்களின் முதல்வர் காலத்தில், மும்மாரி பொழிகிறதே. அது போதாதா? சரி, அந்த கோமாளி யார்? மற்றும் நம்ம ‘ராஜதந்திரிகள்’ யார்? கேள்வி என்னுடையது. பதில் உங்களுடையது…
அருட்பணி. ஜெ.தாமஸ் ரோஜர்
Add new comment