Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
விழுமிய அரசியல் சாத்தியமா! | ரோஜர்
இயற்கையின் முன் மனித அறிவியலின் வளர்ச்சி, ஒரு தூசு என்பதை கொரோனா காலம் உணர்த்தியதைக் காட்டிலும், தமிழக ஆட்சியாளர்களின் இயலாமையை, சுகாதாரத்துறையின் தரத்தை, நமக்கு வெட்ட வெளிச்சமாகக் காட்டிக் கொடுத்துவிட்டது. உலகம் முழுமையும் இருக்கிற வளர்ந்த நாடுகளே இந்த புதிய வைரஸ் நோய்த் தொற்றினால் திணறியது உண்மை தான்என்றாலும், அவர்கள் தடுமாறவில்லை. அவர்களின் தரமான மருத்துவ கட்டமைப்பு மக்களுக்குத் தடையில்லாமல் மருத்துவத்தை வழங்கிக்கொண்டிருந்தது. பதற்றமில்லாமல் அதனை நிர்வாகம் செய்யும் பணியை மட்டுமே அவர்கள் செய்ய வேண்டியிருந்தது.
மக்களாட்சி மலர்ந்து கிட்டத்தட்ட 75 ஆண்டுகளை நெருங்கினாலும், எட்டு கோடி மக்களின் வரிப்பணத்தையும், தமிழகத்தின் இயற்கை வளத்தையும் கொண்டு, ஏன் அரசால் இன்னும் உலகத்தரத்திற்கு, பொதுமக்களுக்கு மருத்துவம் கொடுக்க முடியவில்லை? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் ‘உலகத்தரத்தில் இருக்கிறது’ என்று ஒவ்வொரு நாளும் அரசின் அறிக்கையில் திரும்ப திரும்பச் சொல்லப்பட்டாலும், ஆட்சியாளர்களுக்கு தொற்று ஏற்படுகிறபோது, தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கிற ஒரு நிகழ்வே, சுகாரத்துறையின் உண்மையான தரத்தை, அறிக்கைகளின் நம்பகமில்லாத்தன்மையை சந்தேகமில்லாமல் சுட்டிக்காட்டிவிடுகிறது.
இந்த நேரத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் வழக்கம்போல மாறி மாறி குற்றச்சாட்டுக்களை வீசிக்கொண்டிருந்தாலும், கடந்த முப்பதாண்டு காலத்தில், இந்த இருபெரும் கட்சிகள் தான் ஆட்சியில் இருந்திருக்கின்றன என்பது வரலாறு. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதிய மருத்துமனைகளை கட்ட வேண்டும் என்றில்லை. இதற்கான கட்டமைப்புகளுக்குத் தான், ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒரு நோய்த்தொற்றைத் தாங்கக்கூடிய அளவுக்குக்கூட, இத்தனை ஆண்டுகாலத்தில் இவைகளின் எதிர்கொள்ளும் திறன் மற்றும் தரம் ஏன் வலுப்படுத்தவில்லை என்பது தான் இங்கு வைக்கப்படுகிற கேள்வி.
அப்படியென்றால், இந்த வரிப்பணத்திற்கான பயன்பாடு என்ன?என்று ஆட்சியாளர்கள் மீது கேள்விகள் எழும்தானே? ஆனால், கேள்வி கேட்கிறவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிற அரசு, பதில் சொல்லத்தெரியாமல், அல்லது முடியாமல், உண்மையில் பதிலே இல்லாமல், அடக்குமுறைகளையும், பொய் வழக்குகளையும் இதைக் கேள்விக்குட்படுத்துவோர் மீது புனைந்து, ‘நாம் மட்டுமல்ல உலகமே இதற்காக திண்டாடிக் கொண்டிருக்கிறது’ என்று பழைய பல்லவியையே இன்னும் பாடிக்கொண்டிருக்கிறது. எந்த நாடு இப்போது திணறிக்கொண்டிருக்கிறது? தடுப்பு மருந்து இல்லையென்றாலும், ஐரோப்பா முழுமையும் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பியாயிற்று. தோ்தல் நேரத்தில் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல, வழக்கம்போல, எதையாவது கொடுத்து விடலாம் என்று நினைத்திருப்பார்கள் போலும்.
இத்தகைய மோசமான நோய்க்காலத்திற்கு நடுவில்,சாத்தான்குளம் படுகொலைகள் போல தொடர் கொடுமைகள் நடந்து கொண்டிருந்தாலும், ‘வாக்குவங்கி’ அரசியலைக் கொண்டு, வெகு எளிதாக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் வாய்ப்புகள் நிலவும் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்நிலையில், நம் முன் எழும்கேள்விகள்: மோசமான கொரோனா தொற்றுமேலாண்மை, மாற்று அரசியலுக்கான தாக்கத்தை ஏற்படுத்துமா? ஸ்டொ்லைட் படுகொலைகளும், சாத்தான்குளம் போன்ற தொடரும் காவல்துறையின் அடாவடித்தனமான செயல்பாடுகளும், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தோ்தலை தமிழகம் எதிர்கொள்ள இருக்கிற, இந்த முக்கியமான நேரத்தில், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில், அரசின் இயலாமையை அனுபவித்துக் கொண்டிருக்கிற மக்கள், திராவிட கட்சிகளைத் தவிர்த்து, மாற்று அரசியலை ஏற்க தயாராக இருப்பார்களா? உண்மையிலேயே, தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான நேரம் வந்து விட்டதா? அப்படி வந்தால், மாற்று அரசியலுக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள்?
மாற்று அரசியலுக்கான விதையை இன்று நேற்று அல்ல, சில ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சில அரசியல் கட்சிகள் முன்னெடுத்து விட்டன. ஆட்சி அமைக்கும் அதிகாரத்துக்கான வாக்குகளைப் பெறவில்லை என்றாலும், திராவிடக் கட்சிகளுக்கான வாக்கு வங்கிகளைத் தவிர, புதிய வாக்காளர்கள் பெரும்பாலானோர், மாற்று அரசியலை முன்னிறுத்தியவர்களுக்கே வழங்கினர். ஆனால், மாற்று அரசியல் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் ஒரே தோ்தலில், யாருக்கு எதிராக அரசியல் செய்தார்களோ, அவர்களோடு கரைந்துபோனதோடு, அடுத்த தோ்தலில் காணாமலேயே போய்விட்டனர்.
குறிப்பிட்ட பிரச்சனைகளுக்காகப் போராடிய சமூகப் போராளிகள் சிலர், இதற்காக எடுத்த முயற்சிகளும், அவர்களின் கருத்தியல், பொதுவானதாக மக்களுக்கானதாக இல்லாமல், குறிப்பிட் பிரச்சனையின் அடிப்படையிலே இருந்ததால், தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ஒருவேளை திராவிடக் கட்சிகள் ஆட்சியில் தொடர்வதற்கு, அன்றைய கட்சித்தலைமைகளின் ஆளுமையும் முக்கியக் காரணம்.என்றாலும், அந்த ஆளுமைகளின் மறைவு இப்போது வெற்றிட மாயையை உருவாக்கியிருக்கிறது. இந்த வெற்றிடத்திற்கான இடத்தை நிரப்ப, இப்போது, முன்பை விட அதிக அழுத்தத்தில், மாற்று அரசியலாக, தமிழ் தேசியம் முன்வைக்கப்படுகிறது. தமிழ் தேசியம் மாற்றாக இருக்குமா?
தமிழக அரசியல் களத்தை திரும்பிப்பார்த்தால், அதன் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை, அதன் அரசியலை ‘ஆரியம், திராவிடம், தமிழ் தேசியம்’ என்கிற மூன்றே வார்த்தைகளுக்குள் சுருக்கி விடலாம். சுதந்திரத்திற்கு முன், தந்தை பெரியார் பார்ப்பனீய ஆதிக்கத்தை, ஆங்கிலேயர்களின் துணைகொண்டு மட்டுமே தகர்த்ததெறிய முடியுமென்று நம்பினார். எனவே, அவர்களை ஆதரித்தார். உலக மொழியாக பார்க்கப்பட்ட ஆங்கில மொழி தமிழர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்பது அவரது எண்ணம். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிவந்தது.
சுதந்திர காலப் போராட்டத்தில் பொதுமக்கள் நடுவில் பிரபலமாகியிருந்த காங்கிரஸ்கட்சி, அதனைப் பயன்படுத்தி, எதிர்ப்பில்லாமல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல்வராக இருந்த திரு. ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த கல்விக்கொள்கை, குலக்கல்வியை முன்னிறுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். காங்கிரசுக்கு இந்த பிரச்சனை சிக்கலாக அமைந்தாலும், அவருக்குப் பின் வந்த காமராசர், நோ்மையான தலைவராக பாமர மக்களிடத்தில் நற்பெயர் பெற்றதால், காங்கிரஸ் கட்சி தாக்குப்பிடித்தது.
ஆனாலும் ஒருகட்டத்தில், தன்னுடைய கட்சி நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டதால், ஆட்சியை திரு.பக்தவச்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, கர்ம வீரர் அவர்கள் தேசிய அரசியலுக்குச் சென்றுவிட்டார். விளைவு: திரும்பி வருகிறபோது, ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி மக்களிடம் தன் செல்வாக்கையும், திராவிடத்திடம் ஆட்சியையும் இழந்துவிட்டது.
அதன் பிறகு, ஏறக்குறைய ஐம்பதாண்டுகள் இந்த இருபெரும் திராவிடக்கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியைப் பிடித்தன. இன்றைய மருத்துவக் கட்டமைப்புகளுக்கும், அதன் செயல்படும் திறனுக்கும், மோசமான தரத்திற்கும், தர்க்க அடிப்படையில், அவர்களே முழுப்பொறுப்பாக இருக்க முடியும். திராவிடக் கொள்கைகளை, குறிப்பாக பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்களை, அதிகார பலம் கொண்டு நிறைவேற்றியதில்திராவிடக் கட்சிகளின் பங்களிப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற உதவியது என்றாலும், சுயநலம், ஆணவம், அதிகாரவர்க்க மனநிலையினால், மக்கள் எதிர்பார்த்த ஆட்சியை அவர்களால் தொடர்ந்து கொடுக்க முடியவில்லை என்பது தான், மாற்று அரசியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இலங்கை இனப்படுகொலையில் ஒன்றும் செய்ய இயலாத குற்ற உணர்வு, தமிழ் தேசியச் சிந்தனை, இளைஞர்கள் மத்தியில் வலுப்பெற வாய்ப்பாக அமைந்து விட்டது. இந்த தமிழ் தேசியம் புதிய அரசியல் மாற்றத்திற்கான எழுச்சியாக அமையுமா? மக்களின் வாக்குகளைப் பெற்று, அதிகார வலிமையைப் பெறுமா? மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான கட்சியாக உருவெடுக்க முடியுமா?
தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தப்படும் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் காலத்திற்கான தேவை என்று ஏற்றுக்கொண்டாலும்,இன்றைய திராவிட அரசியலின் மோசமான இருண்ட பக்கத்தைப் பற்றி அவர்கள் பேசுவது, அனைத்தும் உண்மை என்பதை பெரும்பாலோனார், ஒத்துக்கொண்டாலும், சாதி, மத அரசியலைப்போல மற்றுமொரு பிரிவினைவாத கட்சியாகவே பெரும்பான்மையானவர்களால் இது பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாது, தாய் மொழியாக தமிழைக் கொண்டிருந்தாலும், புவியியல் மற்றும் தொழில் அடிப்படையில் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற ஓரளவு கணிசமான வாக்குவங்கியாக விளங்கும் தெலுங்கு இன மக்கள், இவர்களின் இனவெறி தூண்டும் பேச்சுக்களால், இவர்களை எதிரிகளாகவேப் பார்க்கிறார்கள்.
பிராமண சமூகத்தின் நடுவிலும் இவர்கள் ஆதரவைப் பெற முடியாது. தெலுங்கு பேசும் மக்களை ‘நாயுடு’ என்றுகேவலமாக முகநூல்களில் விமர்சிப்பதும், வட இந்தியர்களை ‘பான்பராக்’ என்று, பொதுப்படையான வெறுப்பு மொழிகளில் பேசுவதும் ஆரோக்கியமான அரசியலைத் தர முடியாது. வெறுப்பு உணர்வையே வளர்க்கும். ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள அரசு, ஆதிக்கம் செலுத்தியது அடக்குமுறை என்றால், மொழிவாரியாக தமிழகத்தில் பரந்து காணப்படும் தெலுங்கு பேசும் மக்களை எதிர்ப்பதை எப்படிப்பார்ப்பது? இது ஆதிக்க மனப்பான்மை. யாரோ ஒரு சிலர் செய்த தவறுக்காக, ஒட்டுமொத்த இனத்தையும் ‘பொதுமைப்படுத்திப்’ பேசுவது சரியான பார்வையா இருக்க முடியாது. தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணா என்கிற தனியொருவர்‘துரோகி’ என்று விமர்சிக்கப்பட்டால், ஒட்டுமொத்த தமிழர்களையும் ‘துரோகி’ என்று முத்திரை குத்துவதை, ஏற்றுக்கொள்ள முடியாதே?முன்னோர் செய்த தவறுகளைச் சொல்லி, அலலது யாரோ அதிகாரத்தில் இருக்கும் ஆதிக்கச் சிந்தனை கொண்ட ஒருவர் செய்யும் தவறுக்கு, ஒட்டுமொத்த சாதியை, மதத்தை, இனத்தை எதிரிப் பிம்பமாக காட்ட முனைவதை, அறிவார்ந்த சமூகம் ஏற்றுக்கொள்ளாது.
மாறிவரும் உலகச் சூழலில், உலகம் முழுவதும் பரவிக்காணப்படும் தமிழர்கள், தாங்கள் வாழ்கிற இடங்களில் அரசியலின் உயர்ந்த பதவிகளை அலங்கரிக்கிறபோது, நாம் மட்டும் நம் நிலத்தில், எப்படி இத்தகைய நிலைப்பாடு எடுக்க முடியும்? அரசியல் சாசனமே அந்த அதிகாரத்தை வழங்கியிருக்கிறபோது, அதற்குள்ளாக முண்டிக்கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று. அவசியமில்லாதது, அறத்திற்கே எதிரானதும் கூட. ஒருவேளைஎதிர்காலத்தில் வாக்குவங்கியை அதிகப்படுத்தினாலும், ஆட்சி அமைக்கும் பலம் பெறுகிற வாய்ப்பு அரிதாகவே தோன்றுகிறது. ஆக, தமிழ் தேசிய அரசியல், சாதி, மத வரிசையில், மற்றுமொரு எதிர்ப்பு அரசியலாகவே முந்தைய தலைமுறை மக்களால் பார்க்கப்படும் என்பது தான் இன்றைய யதாத்தம். இவர்களோடு, புதிதாக உருவெடுத்திருக்கிற நடிகர்களின் அரசியலும், அவர்களின் வயது மூப்பைப்போல தள்ளாட்டத்தில் தான் இருக்கிறது.
ஆக, இவர்களும் நிச்சயம் மாற்று அரசியலில் வாக்குகளைக் கணிசமாகப் பெற முடியுமே தவிர, ஆட்சி அமைக்கும் ‘அதிகார வெற்றி’ பெற முடியாது. வேண்டுமென்றால், திராவிடக் கட்சிகளோடு இவர்கள் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவார்கள். ‘ஆதிக்க மனநிலை’ அடிப்படையில் சமத்துவத்திற்கு எதிரானது. சமத்துவம் என்பது ஆதிக்கச் சக்தியை அடிமைப்படுத்த நினைக்காது. அடக்கி ஆள முற்படாது. வேறுபாடுகளை பாகுபாடுகளாப் பிரித்துக்காட்டும் அரசியல், ஆரோக்கியமானது அல்ல. வேறுபாடுகள் இயற்கையானது. பாகுபாடுத்துதல் மனித ஆதிக்கத்தின் வெளிப்பாடு. இயற்கையே சமத்துவத்தின் விழுமியம் தானே. அப்படியென்றால், மாற்று அரசியல் சாத்தியமே இல்லையா? முடங்கிப் போயிருக்கிற, இந்த கட்டமைப்பை, மாற்றியமைக்கவே முடியாதா? மாற்றம் என்பது நிறைவேறாத கனவாகவே இருக்குமா?
மாற்று அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நம் மக்களிடம் இருக்கிற அறியாமையைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, கொரோனா காலத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகள், பொதுமக்கள் நடுவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினாலும், இதுவும் வழக்கம் போலவே, பொதுமக்களால் கடந்து செல்லப்படும். முட்டினாலும், மோதினாலும், மிதித்தாலும், உதைத்தாலும், ஏமாற்றமே மிஞ்சும். வேண்டுமென்றால், ஆறுதலுக்கு, முகநூலில் உச்சநீதிமன்றத்திற்கு கையெழுத்துப் பதிவிடும் போராட்டம் செய்வதோ, நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்வதோ, ‘ஏதொ செய்தோம்’ என்கிற ஆறுதலைக் கொடுக்கலாமே தவிர, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
‘அதிகாரத்திற்கு’ முன்னால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது, அனுபவம்.கூடங்குளம், ஸ்டொ்லைட் என்று அனைத்தையும் நாம் மறந்து கடந்து சென்றது போல,இதனையும் கடந்து சென்று விடுவோம். அரசுக்கும் இது நன்றாகவே தெரியும். வழக்கம்போல, சூடு தணிய ஆறப்போடுவார்கள். எனவே, புதிதாக எப்படி அணுகலாம்? என்பதைச் சிந்தித்துப் பார்க்கலாம். சோதித்துப் பார்க்கலாம். ஏனென்றால், அறிவே ஆயுதம். அனுபவமே ஆசான். சிந்தனைகளே புதிய தீர்வுகளை நமக்குக் காட்டும். சிந்திக்கிற சமூகமே முன்னேற்றத்தை நோக்கி தடையின்றி செல்ல முடியும்.
நாம் எதிர்த்துப் போராடுவது, சாதி, மத, இன, மொழி அரசியலுக்குள்ளாக தன்னை நுழைத்துக்கொண்டு,பாமரர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அதிகாரவர்க்கத்தில் ஆக்டோபசாக, நம் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கும் எதிரி. அது கண்ணுக்குத் தெரியாதது. நம் கண்களை கட்டி விட்டு, நம்மிடம் கண்ணாமூச்சு ஆடும் எதிரி. முதலில், மக்களுக்கு கட்டப்பட்டிருக்கிற கண்கட்டை நாம் அவிழ்க்க வேண்டும். அது தான், இதற்கான தீர்வு. எப்படி அவிழ்ப்பது? அது சிக்கலானது அல்ல, ஆனால், சவாலானது. ஏனென்றால், சாதி, மத, இன, மொழி அடிப்படையில் பலராக பிரிந்து கிடக்கிற நம் பாமர மக்களை, ஆதிக்கவர்க்கத்தினருக்கு எதிராக ஒற்றை நேர்கோட்டில் நிறுத்துவது மிகப்பெரிய சவால். அதிகார பலம்மற்றும் அறியாமை, அதனை இன்னும் கடினமாக்குகிறது.
திராவிட வரலாற்றிலிருந்தே, அதற்கான தீர்வினை நாம் கற்றுக்கொள்ளலாம். திராவிட எழுச்சியின் தொடக்கம் தந்தை பெரியார். அவரே அதற்கான ஆணிவோ். அரசியல் பலம் கொடுத்தது மட்டுமே திராவிடக் கட்சிகள். ஆனால், அவருடைய கொள்கையால் மட்டுமே, ஆரிய சாம்ராஜ்ஜியத்தைத் தவிடுபொடியாக்க முடிந்தது, இந்தி எதிர்ப்புச் சூழ்நிலைகளைச் சரியாகப் பயன்படுத்தியதால், திராவிடக் கட்சிகளால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
இந்த போராட்டத்தில், பெரியாரோடு இணைந்து பலர் உழைத்திருந்தாலும், பெரியாரின் கருத்தியல் மற்றும் அவருடைய பேச்சுக்களே,அதன் முழுமையான பலம். ‘சமத்துவமே’ திராவிடக் கொள்கையின் ஆன்மா. அது தான், மக்களின் ஈர்ப்புக்கு காரணமாகியது. உண்மையில், பெரியாரின் சித்தாந்தம்,பிராமண எதிர்ப்பு அல்ல. சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான எதிர்ப்பு. சமத்துவமே அதன் அடித்தளம். ஏனென்றால், ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக ‘அதிகாரம்’ செய்வது அவரது நோக்கமல்ல.
சமத்துவத்தைக் கொண்டு வருவதே அவருடைய எண்ணம். எனவே தான், இந்து மக்களை அதிகமாகக் கொண்டிருந்த தமிழகத்தில், மத நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் செய்த பிரச்சாரங்கள், மத நம்பிக்கையுடைய பாமர மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் முரண்பாடானது, பெரியார் எதனை எதிர்த்துப் போரிட்டாரோ, அந்த ஆதிக்க மனிநிலையையேக் கொண்டே, இன்றைக்கு திராவிடக் கட்சிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, ‘சமத்துவச்’ சிந்தனையை முன்மொழியும் கட்சிகள் மட்டுமே, நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளால் புழுங்கிக் கொண்டிருக்கிற மக்கள் நடுவில், நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். இதனை திராவிடக் கட்சிகளோ, தமிழ் தேசிய பேசுகிறவர்களோ, சாதிக்க முடியாது. ஏனென்றால், சாதி, இன, மத, மொழி அடிப்படையில் தங்கள் கொள்கைகளைச் சுருக்கிக் கொண்டிருக்கிற கட்சிகளால், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களையும் நோ்கோட்டில் நிற்க வைக்க முடியாது. ஆங்காங்கே நடந்த போராட்டங்களினால், புதிதாகக் தோன்றிய கட்சிகளும், குறிப்பிட்ட பகுதிகளில் வேண்டுமானால் கணிசமான வாக்குகளைப் பெற முடியுமே தவிர, ஒட்டுமொத்த மக்களின் ஆதரவைப் பெற முடியாது. காரணம், அவர்களின் எல்கை குறுகியது.
விழுமிய அடிப்படையிலான ‘சமத்துவ’ சித்தாந்தமும், அதனை முன்னெடுக்கும் புதியவர்களும் மட்டுமே, வருகின்ற தேர்தலில் ‘ஒரு விரல்’ புரட்சியை ஏற்படுத்த முடியும். இல்லையென்றால், மீண்டும் ஆட்சி மாற்றம் இருக்கும். காட்சிகள் மாறவே மாறாது. இதனை இளைய சமுதாயம் கண்டிப்பாக செய்து முடிக்க முடியும். அடிப்படையில், மக்களை ஈர்க்கும் தலைமை அவர்களுக்குத் தேவையில்லை. புதியவர்களே ஈர்ப்பு தான். ஆனால், வழிநடத்துகிற தலைமை, இந்த ‘சமத்துவ’ சித்தாந்தத்தை ஆழமாக புரிந்து கொண்ட, தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை வலிகளை உணர்ந்து கொண்டதாக இருக்க வேண்டும்.
தேர்தல் களத்தில் மக்கள் முன்வைக்கும், அழுத்தமான வாதங்கள், விடிவுக்காக காத்திருக்கிற மக்களிடம் கண்டிப்பாக நம்பிக்கையை உண்டாக்கும். இளைய தலைமுறையினர்க்கு, முன்பை விட இப்போது, அரசியல் மீது ஈடுபாடு இருக்கிறது. நடக்கிற நிகழ்வுகள் அவர்களை அதிகமாகப் பாதிக்கின்றன, என்பது முகநூல்களில் வெளிப்படும் பதிவுகளில் தெளிவாகிறது.
கூடங்குளம், ஸ்டொ்லைட், மீத்தேன், காவிரி பிரச்சனைகளில் அவர்களின் பங்களிப்பு களத்தில் அதிகம். அவர்களால் மட்டுமே, ‘அனைவரையும்’ அரவணைத்துச் செல்கிற, வெறுப்பு அரசியல் இல்லாத, நீண்ட கால மாற்று அரசியலை வலுவாக மக்களின் உள்ளத்தில் ஊன்றச்செய்ய முடியும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பது தானே, நம் தமிழ் மண்ணின் ஆன்மா. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தானே நம் திருமறை. ஆதிக்க அரசியலோ, வெறுப்பு அரசியலோ நம் இனத்தின் அடையாளம் அல்ல. இலங்கையில் சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான தொடக்க கால அறவழிப்போராட்டங்கள்,சிங்களர்களுக்கு எதிரானது அல்ல, சிங்கள பேரினவாதம் என்கிற அடக்குமுறைக்கு எதிரானது. வேறுபாடுகளைப் பாகுபாடாக பிரித்துக் காட்டும், அநீதிக்கு எதிரானது. அடக்குமுறை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல, சமத்துவம் பெறவே, போராடினார்கள். முடியாது என்கிற நிலை வந்தபோது தான், தனி ஈழத்திற்கு ஆயுதப்புரட்சி மேற்கொண்டார்கள்.
அமெரிக்காவில், கடந்த மாதம் ‘ஜார்ஜ்’ என்கிற கருப்பு நிறத்தவர் கொலைக்கு, வெள்ளையர், கருப்பர் என அனைவரும் ஒற்றை நேர்கோட்டில் நிற்க வைத்தது, ஆதிக்க மனநிலையைக் எதிரான சமத்துவத்தை உணர்த்துவதற்காகவே. ‘பாகுபாடுகளை’ ஒழித்து, வேறுபாடுகளை ‘கொண்டாடுவதே’, இதன் அடிநாதம். வேற்றுமையில் ஒற்றுமை’ காண்போம் என்கிற எண்ணத்தை, இயல்பாகவே கொண்டிருக்கிற நம் மண்ணின் மக்கள், இதற்கு நிச்சயம், பேராதரவை நல்குவார்கள். எங்கெல்லாம், மனிதம் சூறையாடப்பட்டதோ, அப்போதெல்லாம், தமிழகம் ஒற்றுமையாக சாதி, மதம், இனம், மொழி கடந்து, அநீதிக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறதே!
ஆளுவதற்கு அறிவாளிகள் தேவை இல்லை. இங்கு தன்னலமில்லாமல் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிற பல மனிதநேயமிக்க அறிவார்ந்த மனிதர்கள், அதிகாரிகளாக இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு என்கிற போராட்டத்தை எந்த தலைமையும் இல்லாமல் சாதி, மதம், இனம், மொழி கடந்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே ஒரே நோ்கோட்டில் நிற்கவைத்து, வெற்றி காணவைத்த, இந்த ‘இளைய’தலைமுறையினரால் இது நிச்சயம் முடியும். நோ்மையான அதிகாரிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை. ஆனால், அவர்களில் ஒருவர், இந்த புதிய தலைமுறையை சத்தமில்லாமல், வழிகாட்டினாலே போதும். ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிற, ‘சமத்துவ’ விழுமியமே மக்களை இணைக்கிற பாலம்.
தமிழகம், கால தாமதமில்லாமல் புதிய தலைமுறையினரின் அரசியலுக்கு வித்திடுவது தான் காலத்தின் கட்டாயம். ஏனென்றால், மதவாத அரசியல் தன்னுடைய ஆக்டோபஸ் போல, அதிகார பலத்திலிருந்து, இந்திய ஒன்றியத்தை இராட்சச பலம் கொண்டு இருக்கிக்கொண்டிருக்கிறது. இப்போதிருக்கிற திராவிடம் அதற்குத் துணைபோகத்தான் முடியுமே தவிர, எதிர்த்து நிற்க முடியாது. ஏற்கெனவே, பல உரிமைகள் பறிபோய் விட்டன. இந்த மதவாத அரசியலின் விளைவுகளை, ஏற்கெனவே ஐரோப்பா கண்டம் பார்த்தது தான். பிரான்ஸ் நாட்டில், திருச்சபை அதிகார பீடத்தோடு கைகோர்த்தபோது, மத அரசியலை முன்னெடுத்தபோது, விண்ணைத்தொடும் ஆலயங்களும், பளிங்குகளால் மின்னும் மத அடையாளங்களும், தங்கத்தால் ஜொலிக்கும் அரண்மனைகளும் நிறைந்திருந்தன. ஆனால், பாமர மக்கள் ரொட்டிக்காக தெருக்களில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தார்கள். அதுதான் கி.பி. 1789 இல் பிரெஞ்சுப் புரட்சியாக வெடித்து, ஆதிக்கவர்க்கத்தின் பிடியிலிருந்து‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’சிந்தனை பிறக்க காரணமானது.
மதவெறியின் விஷம் கக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தியாவிலும் கண்டிப்பாக இந்த புரட்சி நடக்கும். மத அரசியலில், மக்கள் பசியாலும், பட்டினியாலும் மடிந்து கொண்டிருக்க, விண்ணைத்தொடும் சிலைகளுக்கும், கோயில்களும் தொடர்ந்து எழும்பிக் கொண்டிருக்கும். புரட்சி என்பது ஆதிக்கசக்திகளுக்கு எதிராக ‘மானிடத்தை’ நேசிக்கும், ஒட்டுமொத்த நாடும் கிளர்ந்தெழுந்து, சமத்துவம் மலரச் செய்வது ஆகும். அதனை மக்களாட்சியில், இரத்தம் சிந்தாமல், ‘ஒற்றை விரல்’ புரட்சியால், ஒரே நாளில் வெகு எளிதாக செய்து முடிக்கலாம். மொழியால், மதத்தால், இனத்தால் பிரிக்கப்பட்டு கிடக்கிறவர்களை, ‘சமத்துவம்’ பேசும் கருத்தியலில், இன்றைய இளைய தலைமுறையினரால் மட்டுமே, நம்பிக்கையோடு மீட்டெடுக்க முடியும்.
ரோஜர்
Add new comment