மற்றவர்களின் தேவை!


நான் என் ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். எனது அருகில் ஒரு பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனும் அவருடைய தந்தையும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தனர்.  அந்த சிறுவன் தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த மழலைமொழி  என்னைக் கவர்ந்தது.  சற்று காது கொடுத்து அவர்களுடைய உரையாடலைக் கேட்க ஆரம்பித்தேன். 

அதுவரை அங்கு சுவரில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்களைப் பற்றி தன் தந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறுவன்,  தண்டவாளங்களின் ஓரமாக பெரிய சாக்குகளை தூக்கிக்கொண்டு அழுக்குச் சட்டைகளுடன் கையில்  ஒரு கம்போடு சென்று கொண்டிருந்த இரண்டு மூன்று பேரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.  ‘அப்பா இவங்கல்லாம் யாருப்பா’ என்று கேட்க, அவனுடைய தந்தை, ‘இவங்க எல்லாம்  குப்பை பொறுக்கிறவங்க’ என்று விளக்கினார்.  ‘தண்டவாளத்தை கிளீன் பண்றவங்களா’ என்று அவன் திருப்பிக் கேட்டான்.  ‘இல்ல தம்பி, இவங்க கீழே கிடக்கிற பிளாஸ்டிக், அட்டை, பேப்பர்லாம் பொறுக்கிட்டு போயி பழைய பேப்பர் கடையில் போய்  குடுப்பாங்க’ என்று சொன்னார்.  ‘எதுக்குப்பா’ என்று அவன் கேட்டான்.  ‘அப்பதான் அங்களுக்கு சாப்பாட்டுக்கு காசு கிடைக்கும்’ என்று காரணத்தை விளக்கினார்  தந்தை.  அவர்கள் அங்கு கிடந்த பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை பொறுக்குவதை  மிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த சிறுவன்,  பின் தந்தையிடம் திரும்பி, ‘நாம வேண்டாம்னு தூக்கி போடுற குப்பை இவங்களுக்கு சாப்பாட்டுக்கு உதவுவதுனா நாம   ஏன்  அதை  குப்பையில போடணும் அவங்க கையில கொடுக்கலாம் தானே’, என்று கேட்டான்.  இதைக் கேட்டவுடன் ஒரு சில வினாடிகள் நான் பிரமித்துப் போனேன், ஏனெனில் சற்று நிமிடத்திற்கு முன்பாக ஒரு பாட்டிலில் தண்ணீரை குடித்துவிட்டு அதை அவர்கள் பொறுக்கிக் கொள்வார்கள் என அதை தண்டவாளத்தில் தூக்கி எறிந்தேன். 

நான் செய்த தவற்றை  எண்ணி சற்று குற்ற உணர்வோடு மீண்டுமாக அந்த சிறுவனின் பக்கம் திரும்பிப் பார்க்கையில்,  அந்த தந்தை அந்த சிறுவனுடைய கையை பிடித்து அழைத்துசென்று, தன் கையில் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை, குப்பையை பொறுக்கிக் கொண்டிருந்தவர்கள் கையில் கொடுப்பதை கண்டேன்.

  இந்த நிகழ்ச்சிக்கு பின்பு,  இன்றும் எனது அறையில், வேண்டாதவைகள் என நான் எந்த பொருளையும் எடுத்து குப்பையில் போடுவதற்கு முன்பு இது வேறு யாருக்காவது தேவைப்படுமா என்று பலமுறை  என்னை யோசிக்க வைக்கிறது.  நமக்கு தேவையில்லை என்று எதையும் தூக்கி எரியும் முன்பு அது நாலு பேருக்கு பயன்படுமா என்று யோசிப்பது நல்லது தானே!

அருட்தந்தை பால் தினகரன் sdc

 

 

Add new comment

12 + 7 =