நான் தனியொரு தலைவ(ன்)னா


Leader

நான் எந்த பக்கத்தில் நிற்கிறேன் என்பது தான், நான் எப்படிப்படட தலைவன் என்பதை, அடையாளம் காட்டுகிறது (I TAKE SIDE THEREFORE I AM)

தமிழகம் ஒரு ‘நல்ல’ தலைவனுக்காக காத்திருக்கிறது. ஒரு தலைவனைத் தேடிக்கொண்டிருக்கிறது. ‘நானே நீங்கள் தேடுகிற தலைவன்’ என்று, அரிதாரம் பூசிக்கொண்டு, ஒய்யாரமாக ஒவ்வொருவரும் அவ்வப்போது நடந்து வந்து, இந்த போட்டியில் வெற்றி பெற வலம் கொண்டிருக்கிறார்கள். யார் தலைவன்? யார் நல்ல தலைவன்? யார் தமிழகம் தேடுகிற தலைவராக இருக்க முடியும்? எவன் ஒருவன் சாதி, மத, இன, மொழி வேற்றுமைகள் களைந்து, விழுமியங்களோடு சமரசம் செய்து கொள்ளாமல், நீதி மறுக்கப்படுகிறபோததெல்லாம், அநீதிக்கு எதிரான பக்கத்தில் நிற்கிறானோ, அநீதி இழைக்கப்பட்டவரோடு நிற்கிறானோ, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று ‘சமத்துவம்’ என்கிற விழுமியத்தைத் தூக்கிப்பிடிக்கிறானோ, அவனே தலைவன், மக்களுக்கான தலைவன். சுருங்கக்கூறின், I TAKE SIDE THEREFORE I AM. நான் எந்த பக்கத்தில் நிற்கிறேன் என்பது தான், நான் எப்படிப்பட்ட தலைவன் என்பதை, அடையாளம் காட்டுகிறது. அதிகாரத்தில் இருக்கிறவன் மற்றும் கட்சியின் தலைவன்,  தலைமையில் இருப்பதால் தலைவனாக இருக்கலாம். ஆனால், நல்ல தலைவனாக இருக்க முடியாது. அவன் ஒருபோதும், மக்களுக்கான தலைவனாக இருக்க முடியாது. அவன் அதிகாரவர்க்கத்தின் கைக்கூலி.  

இலங்கையில் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்டு ஏழைமக்கள் இன வெறிக்கு பலியாகிக்கொண்டிருந்தபோது, கேட்க வேண்டிய அதிகாரத்தில் இருந்தவர், கடற்கரை மணலில் உண்ணாவிரத நாடகம் நடத்திக் கொண்டிருந்தாரே? அவர் எப்படி தமிழினத்தின் தலைவராக இருக்க முடியும்?

‘மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்’ என்று ஏமாற்று வார்த்தைகளால் பாமர மக்களை மயக்கி, ஒட்டிய கன்னமும், காய்ந்த வயிறுமாய் கோடிக்கணக்கான மக்கள் ‘அம்மா, அம்மா’ என்று ஏக்கத்தோடு பார்த்தும், பரிதாபம் வராமல், ஒய்யாரமாக இருந்துவிட்டு, இறக்கும்போது கூட, கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்தும், பட்டினியால் ஆயிரம் போ் இருக்க, ஏழை ஒருவனுக்கு கூட உதவ மனமில்லாமல் இருந்தாரே! அவர் எப்படி எப்படி தமிழினத்தின் தலைவியாக இருக்க முடியும்? 

நடிகையின் இறப்பிற்கு ட்வீட் போடுகிறவர், வீராட் கோலியிடம் ‘பிட்னஸ் சேலஞ்ச்’ செய்கிறவர், எத்தனையோ, கொலைகளும், கொடுபாதகச் செயல்களும் இந்தியா முழுவதும் அரங்கேறிக்கொண்டிருக்கிற நேரத்தில், தேசமே பொங்கி எழுந்து கொண்டிருந்தபோதும்,  ‘மௌனமாக’ இருக்க முடிகிற ஒருவரால் எப்படி நல்ல தலைவனாக இருக்க முடியும்? வார்த்தைகள் மட்டுமே மொழி அல்ல, மௌனமும் ஒரு மொழி பேசுகிறது, அநீதியோடு கைகோர்த்துக்கொண்டு. உணவுக்கே வழியில்லாத நாட்டில், ‘மங்கள்யானில்’ ஆராய்ச்சி செய்து என்ன கிழிக்கப்போகிறார்கள், இந்த அதிகாரவர்க்கம்?

அதிகாரத்தில் இருந்தபோது செய்த கொடுமையினால், வெறிகொண்ட சிலர் நடத்திய கொலை வெறித்தாக்குதலில், உயிரிழந்த ஒற்றை உயிருக்காக, இலட்சக்கணக்கான மக்களைக் கொல்லத் துணைபோகும் ஓர் அரசு, அதனை வழிநடத்தும் கட்சி எப்படி மக்களுக்கானதாக இருக்க முடியும்?  உயிர் மதிப்பு எல்லாருக்கும் ஒன்று தானே. வலி எல்லாருக்கும் வலி தானே? எத்தனை மக்களை அதிகாரத்தில் இருக்கிறபோதெல்லாம் கொன்றுவிட்டு, இலட்சங்களைக் கொண்டு அவர்கள் வாயை அடைத்தீர்கள்! அப்போதெல்லாம் உங்களுக்கு உயிரின் மதிப்பு தெரியவில்லையா? உயிரிழப்பு வலியை நீங்கள் உணரவில்லையா? அதிகாரத்தில் இருக்கிறபோது, இவர்கள் செய்த கொலைகளுக்கு எல்லாம் பழிதீர்க்க வேண்டுமென்றால், உலகமே கொள்ளாதே!

‘மண்ணெண்ணெய் விலை மரண அடிகொடுக்கிறது’ என்று அடுக்குமொழியில், முந்தைய ஆட்சியில் பெட்ரோல் விலை ஏறியபோதெல்லாம், வானத்திற்கு, பூமிக்கும் குதித்த கட்சிகளின் தலைமை எல்லாம், இப்போது இலட்சக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தைச் சம்பளமாக பெற்றுக்கொண்டு, மாநிலத்தின் உயர்ந்த பொதுப்பதவி வகித்துக்குக் கொண்டு, இன்னும் ‘நமோ’ புகழ் பாடுகிறவரெல்லாம், எப்படி நல்ல தலைவராக இருந்திருக்க முடியும்?

ஸ்டொ்லைட்டில் தன் மக்களை, தானே கொன்றுவிட்டு, ‘தொலைக்காட்சியின் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்’ என்று வெட்கமில்லாமல் சொல்கிறவரும், ‘மக்களை ஏன் சந்திக்கவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘144 தடை உத்திரவு இருக்கிறது’ என்று அடிப்படை அறிவே இல்லாமல் சொல்கிறவரும், ‘நிதி’ கொடுத்து, ‘நீதியை’ நிலைநாட்டுகிற அயோக்கியவர்களும், எப்படி நல்ல தலைவர்களாக இருக்க முடியும்? இவர்கள் அடிமைகள் என்று அவ்வளவு எளிதாக கடந்து சென்று விட முடியாது. பாதகர்கள். இரத்த வெறிபிடித்த மிருகங்கள்.

‘நாங்கள் செய்வதை மன்னித்து விடுங்கள். இனி நாங்கள் நல்ல தலைவர்களாக இருப்போம்’ என்கிறார்கள். அழிவுத்திட்டங்களுக்குக் கையெழுத்திட்ட, தாமிரபரணியில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு மன்னிப்பு வழங்கலாம். ஆனால், மறக்க முடியாதே! நியாயப்படுத்த முடியாதே! அதிகாரத்தை மீண்டும் கொடுக்க முடியாதே! குற்ற உணர்ச்சி இருக்கிறவர்கள், மீண்டும் அதிகாரப்பிச்சை கேட்டு வர மாட்டார்களே! உண்மையில் திருந்தியவர்களாக இருந்திருந்தால், குற்ற உணர்ச்சியினால், இனி அதிகாரமே வேண்டாம், அதுவே நாங்கள் செய்த செயல்களுக்குத் தண்டனை’ என்கிற நிலைப்பாடு தானே, எடுத்திருப்பார்கள்? இவர்கள்  எல்லாம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘நிதி’ கொடுப்பது நீதிக்காக அல்ல, அரசியல் ஆதாயம் பெறுவதற்காக. பாமரர்களை ஏமாற்றுவதற்காக.

அடக்குமுறை அநீயால், துப்பாக்கியால் சுடப்பட்டவன் வலியால் துடித்துக்கொண்டிருந்தபோது, ‘வலியும் தெரியாமல், வேதனையும் புரியாமல்’ ‘வன்முறை பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது’ என்று நடுநிலை என்கிற பெயரில் ‘அநியாயம்’ பேசிய அரிதாரம் பூசுகிறவர் எப்படி, தமிழகத்தின் தலைவராக முடியும்? பொழுதுபோக்கிற்கு கட்சி, மற்ற நேரங்களில் பணத்திற்காக அறமே இல்லாத, கலாச்சாரச் சீரழிவுக்குக் காரணமான, மக்களின் அறிவை மழுங்கடிக்கும், இளையோரை போதைப்படுத்தும் அந்தரங்க ‘பிக் பாஸ்’ எப்படி, நல்ல தலைவராக இருக்க முடியும்?

ஊடகங்கள் ‘நடுநிலைமை’ என்பதனால், முடிவு எடுக்க முடியாது என்கிறார்கள். ‘நடுநிலை’ என்கிற சித்தாந்தமே பாதிப்பு நடப்பதில் கிடையாதே? சமத்துவம் தானே நடுநிலை. ‘நடுநிலை’ என்கிற மாயைப்போர்வைக்குள் ஒளிந்து கொண்டு, அதிகாரவர்க்கம் கொடுக்கிற அறிக்கைகளை, ‘கிளிப்பிள்ளைகள்’ போல, ஒப்பித்துக்கொண்டிருக்கிற, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களே தவிர, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களல்ல.

மதம் விமரர்சிக்கப்படுகிறபோது முன்வரிசையில் வருகிறவர்களும், சாதியின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் தங்களை ஒரு குறுகிய எல்லைகளுக்காக சுருக்கிக் கொள்கிறவர்களும், அந்த எல்லைக்குள் மட்டுமே குரல் கொடுக்க முடியும். காரணம், அவர்களும் மதம், இனம், மொழி பெயரால், ஆதிக்கம் செலுத்த விரும்புகிறவர்களே. கருத்தியல் வலுவானதாக இருக்கலாம். ஆனால், அது எப்போதுமே, சமத்துவத்திற்கு எதிரானது. நீதிக்கு எதிரானது. வேறுபாடுகளைப் பாகுபாடாக்கிப் பார்க்கும் மனநிலையே நீதிக்கு எதிரானது. சமத்துவம் என்பது ஆதிக்கம் செலுத்துவது அல்ல, ஆதிக்கம் செலுத்துகிறவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது. சமத்துவ விழுமியத்திற்காக நிற்பது. சமத்துவத்தை ஏற்படுத்தத் துடிப்பது. ஆனால், இந்த அடையாளங்களோடு வருகிறவர்கள், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல், நீதிக்காக குரல் கொடுக்கமுடியாது. மொளனமாகவே நிற்க வேண்டி வரும். மற்றவர்களை முகம்கொடுத்துப் பார்க்க துணிவே இல்லாமல், கைபிசைந்து நிற்க வேண்டியதே வரும்.

சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், இதனை இவர்களுடைய ‘குற்றமாக’  சுருக்கிவிட விரும்பவில்லை. அறியாமையும், அதிகாரமும் தான், இந்த நிலைக்குக் காரணம். சாதியால், மதத்தால், இனத்தால், மொழியால் பிரிந்து, இணைந்து வந்தால் மட்டுமே ‘நீதி’ பெற முடியும் என்கிற நிலையை உருவாக்கி வைத்திருக்கிற நம்மை ஆளும் அதிகாரவர்க்கமே, ஆட்சியின் அதிகாரத்தில் இரு்ககிறவர்களே நாம் ‘பிளவுபட்டு’ சிந்திப்பதற்கு மூலக்காரணம். இதனை ஏற்றுக்கொண்டு, இது தான் யதார்த்தத் என்று சமத்துவத்திற்கு எதிராக சமரசம் செய்து கொள்கிறவர்கள் தான், இந்த அடையாத்தோடு வருகிறவர்கள். சமத்துவ நிலை எடுக்காத, அநீதி இழைக்கப்படுகிற போது, நீதியை நிலை நாட்டாத அரசே இந்த எல்லாப்பிரச்சனைகளுக்குமான முதல் குற்றவாளி. ஏனெனில், சாதி, மதம், இனம், மொழி பிரிவுகளை உருவாக்கிக் குளிர் காய்ந்து கொண்டு, அந்த அதிகாரங்களைத் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, இந்த அடையாளங்களுக்கு வேண்டுமென்றே துணைபோகும் கைக்கூலிகளுக்கு, தேவைக்கு ஏற்ப காசுகளை வீசியெறிந்து பயன்படுத்திக் கொள்வார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சூழ்நிலை மற்றும் அறியாமையினால், இதனை விழுமியமாகத் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கிவர்கள். ஆனால், இவர்களின் இந்த உணர்வுகளையே, அதிகாரவர்க்கம், தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள்.  இதில், அதிகாரத் தலைமையே இதில் குற்றவாளி. மற்றவர்கள் இது புரியாமல், அறியாமல் அதற்குத் துணைபோகிறவர்கள்.

சாத்தான்குளம் படுகொலையில் யார் குற்றவாளி? வெட்டிவிவாதம் நடத்திக் கொண்டிருக்கிறோம்? தேவையில்லாமல் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்? யாருக்குமே விடை தெரியாது என்பது போல, பாசாங்கு பாடிக்கொண்டிருக்கிறோம். சாத்தான்குளம் வழக்கில் முதல் குற்றவாளி இந்த மண்ணின் முதல்வர். நேரடிக் குற்றவாளிகள் அந்த காவலர்கள். மூன்றாம் குற்றவாளிகள்,  அநீதி நிலைப்பாட்டை எடுத்த, பதவிக்காக, பணத்திற்காக, மனச்சான்று இல்லாமல் வேலை செய்த, அதிகாரிகள். சட்டப்பூர்வமாக நிருபிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், மனச்சான்று உள்ள ஒவ்வொருவரும் இதை ஏற்றுக்கொள்வார்கள்.  

இதற்கு தண்டனை? வார்த்தைகளால் நம் உணர்வுகளின் குமுறைல்களைத் தணிப்பது அல்ல. அதிகாரம் மூர்க்கமானது. வளைந்து கொடுக்காது. மாறாக ஒற்றை உறுதி ஏற்பது! இடர்வரினும், எதுவரினும், இனிமேல் கனவில் இவர்கள் நினைத்தாலும், அதிகாரத்திற்கு வர முடியாது என்கிற நிலைப்பாட்டை, ‘தனிமனிதனாக’ ஒவ்வொருவரும் எடுப்பதே நம்மால் ‘இயன்ற’ நாம் இறந்தவர்களுக்குக் கொடுக்கிற நீதியாக இருக்க முடியும். எந்த அரிதாரம் பூசிக்கொண்டு வந்தாலும், இவர்கள் நீதி தேவதை முன்பாக என்றோ ஒருநாள் மண்டியிட வேண்டியிருந்தாலும், அது நீதி தேவன் முடிவு செய்யட்டும். ஆனால், இந்த மண்ணில், மக்களாட்சியில் நாமே நீதிபதிகள். நாமே இந்த படுகொலைகளுக்கு நீதி வழங்குவோம். இனி இந்த மண்ணில், அதிகாரத்தைக் கொண்டு, ஒரு உயிரைக் கொன்று விட்டு, பணத்தைக் கொடுத்து மழுப்பிவிடலாம் என்று நினைக்கிற, எந்த கயவனும் அதிகாரத்தைப் பற்றி கனவில் கூட, நினைத்துப் பார்க்கக் கூடாது என்று உறுதி ஏற்போம். அவன், இவன் என்றல்ல, ‘நான் முடிவு எடுக்கிறேன்’. வாழ்க்கையின் கடைசி மூச்சு இருக்கிற வரையில், ஒற்றை மனிதனாக இருந்து, இந்த கட்சிகளுக்கு நான் என் வாக்குகளைச் செலுத்த மாட்டேன் என்கிற ஓர் உறுதி போதும். அதிகாரவர்க்கம் ஆட்டம் கண்டுவிடும். எவன் சமரசம் செய்து கொண்டாலும், நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்கிற ‘தனி மனித நிலைப்பாடு’ தான், சமத்துவம், உண்மைக்கான குரல், மனச்சான்றுக்கான குரல். அது போல, இந்த அநீதிகளுக்கு எதிராக எவ்வளவு உறுதியாக சமூக ஊடகங்களிலும், ஆங்காங்கே மனச்சான்றோடு போராடுகிறவர்களுக்கும் உளப்பூர்வ அளவில் ஆதரவு கொடுப்பது. இதுவே நாம் செய்ய முடிகிற இரண்டு செயல்பாடுகள்.

அப்படியென்றால், நல்ல தலைவர்களே தமிழகத்தில் இல்லையா? தமிழகத்தில் மக்களுக்கானவர்களே இல்லையா?

சுடுகாட்டில் நடு இரவில் படுக்க நோ்ந்தாலும், ‘இது என் சொத்து, இது என் மண்’ இதை அநீதியாக எவரும் பறித்துக்கொள்ள விட மாட்டேன்’ எனக்கு அந்த கடமையிருக்கிறது என்று, பதவி பாராமல், நோ்மைக்காக அந்த நள்ளிரவில் அந்த இடத்தில், படுத்து உறங்கினாரே? அவர் நல்ல தலைவர். மக்களுக்கானவர்.

பைத்தியக்கார நிலையிலும், அநீதி இழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட போதும், ‘நீதி கொடு, நீதி கொடு, ஸ்டொ்லைட் படுகொலைக்கு நீதி கொடு’ என்று, தண்டவாளத்தின் முன், கத்திக்கொண்டிருந்தாரே, அவர் தலைவர். மக்களுக்கானவர்.

ஆதிக்கவர்க்கத்தால் சூழ்ச்சியால் நிறுத்தப்பட்ட அணுஉலைகளின் பாதுகாப்பை அறியாமையில் இருந்த மக்களிடம் விளக்கி, தன் வேலை, தன் பணம் எல்லாவற்றையும் இழந்து, நின்ற விழுமியங்களுக்காக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறாரே! அவர் தலைவர். மக்களுக்கானவர்.

தவறான கல்விக்கொள்கைக்காக தன் அரசுப்பணியையும் துறந்தவர், தனியொரு நபர் என்றாலும், தன் தந்தை தன் கண்முன் அவமானப்படுத்தப்பட்டாலும், தன் மனஉறுதியை ஆதிக்கவர்க்கம் குலைக்க நினைத்தாலும், அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் குரல் கொடுக்கும் மதுவிலக்குப் போராளி, அதிகாரவர்க்கத்திற்கு துணிந்து ‘வயது மூப்பு அநீதிக்கு எதிரான போராட்டத்திற்குத் தடையல்ல என்று, தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பு இளைஞனாய் சுற்றி வரும் ராமசாமிக்கள், குண்டர் தடுப்புக்கும் அஞ்சாத வீர மங்கை வளர்மதி, அடிமட்டக் குரலாய் ஓங்கி ஒலிக்கும் கோவன்கள், விழுமியங்களுக்காக நிற்கிற திருமுருகன்கள் என்று, இந்த பட்டியல் நீண்டு கொண்டு தான் சென்று கொண்டிருக்கிறது.

கேவலம் பதவிக்காக, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, மாபாதக படுகொலைகளை மனச்சான்றின்றி மூடிமறைக்கும் செயலையும், பாதிக்கப்பட்டவர்களை குற்ற உணர்வே இல்லாமல் சந்தித்து, ‘நீதி வழங்கப்படும்’ என்கிற பொய் வார்த்தைகளை நயவஞ்சகமாகப் பேசி, நிதியின் மூலம் நீதியை விலைபேசும்  துரோகத்தை செய்யும் தந்தூரிக்களும்,  ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்கிற அரசியல் சாசனத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு அதிகாரவர்க்கத்திற்கு ஏவகம் செய்யும் அருணன்களும், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அவமானச்சின்னங்கள். துரோகியாக வெளியேறிய கருணாவை விட கேவலமானவர்கள். மனிதத்தின் எதிரிகள்.

நீதி தேவதையின் முன் ஒருநாள், கண்டிப்பாக ‘இயற்கை அறத்தின்பால்’ மண்டியிட வைக்கப்படுவார்கள் என்பது, இயற்கையின் தத்துவம். ஏனென்றால், சமத்துவமே நீதி. ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்பது நம் இறையியல். தன் துறையே தவறு செய்தது என்றாலும், அதற்குத் துணைபோகாமல், எதிர்ப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பது தெரிந்தும் ‘குற்றம் குற்றமே’ என்று ஓங்கி உரைக்கும் சரவண்கள் போன்றவர்கள், எந்த நிலையில் இருந்தாலும் என்றுமே மனித்திற்காக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிற சமத்துவவாதிகள் தான். சாதி, மத, இன, மொழி கடந்து சமத்துவத்திற்கான ஆதிக்கச் சக்திகளின் அநீதிகளுக்கு, வேறுபாடுகளைப் பாகுபாடுகளாக்கிப் பிளவுபடுத்தும், ஆதிக்க மனநிலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம். உண்மை வெல்லும் என்பதே நல்லோர் வாக்கு.

ஜெ. தாமஸ் ரோஜர்

Add new comment

4 + 8 =