நவீன ஊடகங்களில் இன்றைய நாம் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 16

இன்றைய நவீன தொடர்புசாதனங்கள் நமக்கு நன்மையானதாகவும், தீமையானதாகவும் அமைவது நம் கையில்தான் இருக்கிறது. அது நமது கட்டுப்பாட்டில் இருக்கும்போது நன்மைகளை விளைவிக்கிறது. ஆனால் எப்பொழுது அதைப் பயன்படுத்தாமல் நம்முடைய வாழ்வு இல்லை என்ற நிலைக்கு அது நம்மை நிர்பந்திக்கிறதோ அப்பொழுது அது தீமையானதாக மாறுகிறது. 

பில் கிராஸ் என்பவர் பிம்கோ (PIMCO) நிறுவனத்தில் நிலையான வருமான நிதி மற்றும் பத்திரங்களை நிர்ணயிக்கும் பொறுப்பில் 600 பில்லியன் டாலர் பணத்தைக் கையாளுகிறார். ஆனால் அவர் தன்னுடைய அலைபேசியை எல்லா நேரங்களிலும் பயன்படுத்துவதில்லை. அவர் உடற்பயிற்சி செய்யும்போதும், தன்னை ஒருமுகப்படுத்தும் தியானம் செய்யும்போதும் அலைபேசியைப் பயன்படுத்துவதில்லை. இதனால் இதுவரை அவருக்கு எந்தவொரு இழப்பீடும் ஏற்படவில்லை.

எலிசபெத் சாக்ரன் என்பவர் பெரிய நிறுவனங்களின் 35 மேலாளர்களை மெராக்கோ தீவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களுடன் 5 நரம்பியல் அறிஞர்கள், உளவியல் மருத்துவர்கள் இருந்தார்கள். முதல் நாள் ஒரு விடுதியில் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்டது. அடுத்த 4 நாட்கள் எந்த தொடர்பும் அற்ற இடத்தில் அமர்ந்திருந்தார்கள். எந்த தொழில்நுட்ப தொடர்பு சாதனங்கள் இல்லாதபோது அவர்களுடைய நினைவாற்றல், ஆழமான உறவுகள், நல்ல உறக்கம், நல்ல முடிவுகள் எடுக்கும் தன்மை, அவர்களின் அமரும் விதத்தில்கூட மாற்றம் ஏற்பட்டது (பாஸ்ட் கம்பெனி, ஜுலை 30, 2015). 

பல நிலைகளிலும் நம்மில் பலரும் அடிமையாக மாறிவிட்டோம். காலையில் எழுந்தவுடன் நம்முடைய அலைபேசியைப் பார்க்கிறோம், காலைக் கடன்களை நிறைவுசெய்யும்போதும் அதனுடன் செல்கிறோம், இரவு நேரங்களில் அவற்றைப் பார்த்தவண்ணமே உறங்குகிறோம். இந்தியர்கள் ஒரு நாளுக்கு 150 முறை பார்க்கிறார்கள் என்றும், 4-7 மணிநேரம் அலைபேசியில் இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள் என்றும் ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது (நியூஸ் 18, ஏப்ரல் 17, 2018).

இன்று பேருந்துகளில், கல்லூரிகளிலும், ஆலயங்களிலும், வகுப்பறைகளிலும் நம்முடைய குழந்தைகள் தங்கள் அலைபேசியைப் பார்க்கிறார்கள். படிக்கின்ற நம் பிள்ளைகள் எப்பொழுது நாம் செய்தியைப் பகிர்ந்துகொண்டாலும் பார்க்கிறார்கள், அதற்கு உடனடிப் பதிலும் கொடுக்கிறார்கள். இதை நாம் நமக்கு அவர்கள் உடனடியாகப் பதில் கொடுத்தார்கள் என்றுதான் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் படிப்பிலே, பாடத்திலே கவனம் செலுத்தாமல் ஏன் அலைபேசியைக் கையில் வைத்திருந்தார்கள், என்று யோசிப்பதில்லை. அவர்களுடைய செயல்களைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை. 

அதிக நேரம் தங்கள் கவனத்தை இ-மெயில்களுக்குப் பதில்போடுவதிலும், கனிணியில் வேலைபார்ப்பதிலும் செலவழித்து, முக்கியமான வேலைகளை மறப்பவர்கள் 80/20 விதியைப் பின்பற்றலாம். எப்படி என்றால் நமக்கு வருகின்ற செய்தியில் 20 சதவீதம் தான் நம்முடைய வாழ்வின் 80 சதவீதம் பகுதியை ஆக்கிரமிக்கக்கூடியது. எனவே அந்த 20 சதவீதம் உள்ளவற்றிற்கு பதில் கொடுப்போம். 80 சதவீதத்தை அழித்துவிடுவோம். அந்த 20 சதவீதத்திலும் 4 சதவீதத்திற்குத்தான் உடனடிக் கவனம் தேவை. ஆக அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். 
 

Add new comment

2 + 3 =