Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
த பெஸ்ட்
The Best
இன்று எல்லா விளம்பரங்களிலும் நாம் தவறாமல் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான வார்த்தை த பெஸ்ட். த பெஸ்ட் ஆஃபர், த பெஸ்ட் சேல், த பெஸ்ட் போன் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த த பெஸ்ட் என்கிற ஆங்கில வார்த்தையின் உண்மையான அர்த்தம், இதற்கு மேல் வேறு எதுவும் இல்லை என்பதுதான். ஆனால், இந்த வார்த்தையை திரும்பத் திரும்ப நாம் எல்லா விளம்பரங்களிலும் பார்க்க முடியும். இதில் இன்னும் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், ஒரே கம்பெனி கூட தன்னுடைய அடுத்தடுத்த பொருட்களின் விளம்பரங்களுக்காக இதே வார்த்தையை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது தான். தி பெஸ்ட் என்று சொன்னால் என்னிடம் இதற்கு மேல் தரமான, சிறந்த, புதிதான வேறொரு பொருள் இல்லை, இதற்கு மேல் வேறு யாராலும் நல்ல ஒரு பொருளை உங்களுக்கு விற்பனைக்கு கொடுக்க முடியாது என்பதுதான் பொருள்.
ஆனால் இன்று இதன் அர்த்தம் நிறையவே மாறி விட்டது. இன்றைய தலைமுறையை பொருத்தவரை எதுவெல்லாம் புதியதாக தெரிகிறததோ, எதுவெல்லாம் சந்தைக்கு புதியதாக விற்பனைக்கு வருகிறதோ அதற்கு அவர்கள் கொடுக்கின்ற பெயர் த பெஸ்ட். இதற்கு மிகச் சரியான உதாரணம் இன்றைய கால மொபைல் போன்கள். புது மாடல் போன் ஒன்று சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது என்றால், அதுதான் இந்த உலகிலேயே த பெஸ்ட் அதாவது மிகச் சிறந்த போன். ஆனால் எவ்வளவு காலம்? மற்றொரு புது மாடல் போன் விற்பனைக்கு வரும் வரை மட்டுமே. அதன்பின்பு அந்த போன் மிகச்சிறந்த போன் என்ற பெயரை அது பெற்று விடுகிறது. இது போல த பெஸ்ட் என்ற வார்த்தையை ஒவ்வொரு நாளும் புதுவிதமான பொருட்களுக்கு, நபர்களுக்கு, ஸ்டைலுக்கு மாற்றிக்கொண்டே இருப்பது தான் ஃபேஷன் என்கிற நிலை ஆகிவிட்டது.
இந்த ஃபேஷன் தான், இன்றைய சமுதாயத்தை புதியதாக வெளிவருகிற ஒவ்வொரு பொருளையும் தவறாமல் வாங்கி விட வேண்டும் இல்லையேல் நாம் ஒவ்வொரு சிறந்த பொருளையும் வாழ்க்கையில் தவறவிடுகிறோம் என்கிற மனநிலை உருவாகிவிட்டது.
ஆனால் உண்மையில் இந்த பெஸ்ட் என்கிற வார்த்தையின் முறையான அர்த்தத்தை பார்க்கிற போது, ஒருநாள் நாம் எல்லா தரமும் இருக்கிற ஒரு பொருளை தயாரித்து விட்டு, இதற்குமேல் யாராலும் வேறு எந்த ஒரு விதமான புது மாடலை தயாரிக்க முடியாது, சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வர முடியாது என்கிற நிலை வருகிறதோ அன்றுதான் அந்த பொருளை கடைசி சிறந்த பொருளாக அதாவது த பெஸ்ட் ஆக நாம் சொல்லிக் கொள்ள முடியும். ஆனாலும், அது எல்லா வித தரமும் கொண்டதாக இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். பொருட்கள் விஷயத்தில் மட்டுமல்ல மனிதர்களாகிய நம் வாழ்க்கையிலும் கூட இந்த த பெஸ்ட் என்கிற மனநிலை அதிகமாகவே நுழைந்து நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. நான்தான் எங்கள் பள்ளியில் த பெஸ்ட் எங்கள் மேனேஜருக்கு என்னைவிட பெஸ்ட் சப்போர்ட் யாருமே கிடையாது என்கிற மனநிலை நம் வளர்ச்சியை தடுக்குமே அன்றி நம்மை ஒருநாளும் முன்னேற விடாது. நான் தான் பெஸ்ட் என்கிற மனநிலை பிறருடைய வளர்ச்சியை பாராட்டாது ஏன் சகிக்க கூட செய்யாது.
இந்த த பெஸ்ட் என்பது நமக்கு ஒரு பெரிய குறிக்கோளாக இருக்க வேண்டுமே அன்றி, நம்மை ஆட்சி செய்கின்ற அல்லது ஆட்டிப் படைக்கின்ற அரக்கனாக மாறிவிடக்கூடாது. எனவே, த பெஸ்ட் என்கிற வாசகத்தை விளம்பரங்களில் பார்க்கிற போதும், நம் உள்ளத்தில் தோன்றுகின்ற போதும் பலமுறை யோசிப்போம், நிதானமாய் செயல்படுவோம்.
அருட்தந்தை மரிய அந்தோணி ராஜன் sdc
உரோம்,இத்தாலி ...
Add new comment