Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தினசரி கத்தோலிக்க சிந்தனை
''இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்' என்றார்'' (மாற்கு 12:25). இயேசுவை அணுகிக் கேள்வி கேட்டு அவரிடம் குறைகாண முயன்றவர்களுள் பரிசேயரும் இருந்தனர், சதுசேயரும் இருந்தனர். இறப்புக்குப் பின் மனிதர் உயிர்பெறுவர் என்பது பரிசேயர் கொள்கை. ஆனால் சதுசேயர் இதை மறுத்தனர். இயேசு யாருக்குச் சார்பாகப் பேசுவார் என்றறிய இரு கட்சியினரும் முனைகின்றனர். ஆனால் வழக்கம்போல இயேசு அவர்களுடைய கேள்விக்கு நேரடியான பதில் கூறாமல் அவர்களுக்குக் கடவுளின் போதனையை எடுத்துக் கூறுகிறார். கடவுளை நாம் நம்முடைய குறுகிய அறிவுக்குள் கொண்டுவர இயலாது. நமது குறுகிய சிந்தனைப்படி கடவுள் செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கவும் கூடாது.
எனவேதான் இயேசு இவ்வுலகப் பாணிக்கும் மறுவுலகப் பாணிக்கும் இடையே வேறுபாடு உண்டு என்பதைக் குறிப்பிடுகிறார். இவ்வுலக முறைப்படி மனிதர் திருமணம் செய்கின்றனர்; குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, குடும்பத்தை நிறுவுகின்றனர். மறுவுலகில் இத்தகைய முறை இராது. அங்கே திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றுக்கும் இடம் இல்லை. ஏனென்றால் ''அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்'' (மாற் 12:25).
விண்ணகத் தூதர் எப்படி இருப்பார்கள் என்னும் கேள்வி எழுகிறது. இதற்கும் இயேசு நேரடியான பதில் தரவில்லை; மாறாக, மனிதருக்கும் விண்ணகத் தூதருக்கும் இடையே வேறுபாடு உண்டு என நாம் அறிகிறோம். இதை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் இயேசு கடவுளின் உண்மைத் தன்மையை நமக்குக் காட்டுகிறார். அதாவது கடவுள் ''இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள்'' (மாற் 12:27). மனிதருக்கு வாழ்வு வழங்குவதே கடவுளின் திட்டம்; மனிதர் மடிந்து ஒழிய வேண்டும் என்பதல்ல அவருடைய பார்வை. எனவே, கடவுள் மனிதருக்கு உயிர் வழங்குவதையே தம் நோக்கமாகக் கொண்டிருப்பதால் அவர் மனிதரை சாவுக்குக் கையளித்துவிடமாட்டார்.
மாறாக, அவர்களுக்குத் தம் வாழ்வில் பங்களிப்பார். ஆனால் இத்தகைய பங்கேற்பு மனித சிந்தனைக்கு ஏற்ப நிகழும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மாறாக, கடவுளுக்கே தெரிந்த விதத்தில் நாம் எல்லோரும் வாழ்வு பெற்று நிறைவடைய அழைக்கப்படுகிறோம். கடவுளே நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பார். எனவே நாம் நம்பிக்கையோடு கடவுளை நாடிச் செல்ல வேண்டும். இந்த உண்மையை இயேசு நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இயேசுவையும் அவர் நம்பிய கடவுளையும் நாம் நம்பி ஏற்கும்போது நாமும் உயிர்த்தெழுதலில் பங்கேற்போம். நம் வாழ்வு ஒரு நாளும் அழியாது.
மன்றாட்டு: இறைவா, நீர் எங்களுக்கு வழங்குகின்ற வாழ்வை நாங்கள் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.