கிணற்று தவளைகளா நாம்!


அறிவியல்  வகுப்பறையில் ஒரு நாள் ஆசிரியர்  மாணவர்களிடம், “பூமியிலிருந்து நிலாவிற்கு எவ்வளவு தூரம்  தெரியுமா?”  என்று கேட்டார்.  ஒருவருக்கும் பதில் தெரியவில்லை.  “சரி,   இந்தியாவிலிருந்து  அமெரிக்காவிற்கு எவ்வளவு தூரம் என்று தெரியுமா?”  என்று கேட்டார்.  யாரிடமிருந்தும் பதில் இல்லை.  சிறிது அமைதிக்கு பின் ஒரே ஒரு மாணவன் எழுந்தான்.  “சார், எவ்வளவு தூரம் என்றெல்லாம் எனக்கு தெரியாது.  ஆனால் கண்டிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு போகும் தூரத்தை விட நிலாவிற்கு போகும் தூரம் குறைவாகத்தான் இருக்கும்,” என்று சொன்னான்.  பதிலைக் கேட்டு வியந்து  போன  ஆசிரியர், “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார்.  “ஏனென்றால் அமெரிக்கா எங்கு இருக்கிறது என்று எனக்கு தெரியாது நான் அதை பார்த்ததும் இல்லை ஆனால்    நிலாவை நான் தினமும் பார்க்கிறேன் எனவே அமெரிக்காவை விட நிலா கண்டிப்பாக நமக்கு அருகில் தான் இருக்க வேண்டும்,” என்று சொல்லி முடித்தான். 

 

 “நான் யார்?” மிகவும் பிரபலமான கேள்வி ஆனால் யாராலும் மிகச்சரியாக பதில் சொல்ல முடியாத கேள்வி. பலரும் இந்த கேள்விக்கு தான் இன்னும் பதில்  தேடிக்கொண்டிருக்கிறார்கள்.   சமீபத்தில் என்னுடைய கல்லூரி பேராசிரியர் ஒருவர் வகுப்பறையில் இந்த கேள்வியை எழுப்பினார்.  மாணவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாச வித்தியாசமான பதில்களை சொல்ல முயற்சி செய்தோம்.  ஒருவர் நான் மனிதன் என்றார். மற்றொருவர் தனது பெயரைச் சொன்னார். வேறு சிலர் நான் என் பெற்றோரின் மகன்,  ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவன்,  இந்த ஊர்க்காரன்,  தமிழன்,  இந்தியன்   என்று பலவிதமான  பதில்கள்  வந்தன.  இறுதியில் , கல்லூரி பேராசிரியர் ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார்.  அது நான் யார் என்கிற கேள்விக்கு  

 பதிலாகஇல்லாவிட்டாலும் கூட அனைவரையுமே அதிகமாக  சிந்திக்கத் தூண்டியது.  “நாம் அனைவருமே நான் யார் என்று கேள்வி  கேட்டவுடன்  நம்மை பற்றி  சிந்திப்பதை விட நம்மோடு தொடர்புடையவர்களை அல்லது தொடர்புடைய இடங்களை,பொருட்களை  பற்றி தான் அதிகமாக சிந்திக்கிறோம்.

 இதிலிருந்து என்ன தெரிகிறது.  ஒரு தனி மனிதன் நான் இவன் தான் அல்லது இவள் தான் என  தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேறொரு  மனிதர் அல்லது சமூகம் அல்லது இடம் தேவைப்படுகிறது.  நான் இவருடைய மகன் அல்லது மகள் என்று சொல்லிக்கொள்ள எனக்குத் தாய் அல்லது தந்தை  தேவைப்படுகிறார்.  எனது பெயர் தான் நான் என்று சொல்லிக்கொள்ள எனக்கு பேர் வைக்கவும், என்னை பெயர் சொல்லி  அழைத்து எனக்கே என் என் பெயரை அறிமுகம் செய்யவும் சிலர் தேவைப்படுகிறார்கள்.  நான் தமிழன் என்று சொல்ல  தமிழினம் எனக்குத் தேவைப்படுகிறது.  நான் இந்தியன் என்று  சொல்லிக் கொள்ள வேண்டுமானால் இந்தியா என்று ஒரு நாடு தேவைப்படுகிறது. 

எனவே  மற்றவர்களின் உடன்பாடு இல்லாமல் இந்த பூமியில் நம்முடைய   இருத்தலே  கேள்விக்குறியாகிவிடுகிறது, என்று விளக்கினார்.

 

கிணற்றுத் தவளைக்கு கிணறுதான் உலகம்.  கூண்டு   பறவைக்கு   கூண்டு தான் உலகம்.   குளத்து மீனுக்கு  குளம் தான் உலகம்.  இப்படி  தான்வாழும் இடத்தை மட்டும்   உலகமாக கற்பனை செய்து வாழும் உயிரினங்களைப் போல மனிதர்களாகிய நாமும்  மாறிவிடுவோம். 

 நான் உண்டு,  என் வேலை  உண்டு, அது போதும்.  என் குடும்பம் சுகமாய் இருந்தால் போதும். என் சமூகம் மட்டும் சந்தோசமாய் இருந்தால் போதும் என நமக்கென தனி உலகம் அமைத்துக்கொண்டால்  நீங்களும் நானும் கிணற்று  தவளைகள் தான்!

 அருட்பணி. பால் தினகரன்,அன்பின் பணியாளர் சபை

Add new comment

2 + 2 =