எது சரி? எது தவறு?


விவேகமான ஆசிரியரின் பரிச்சை

ஒரு காலத்தில் ஜப்பானில் ஒரு பெரிய நகரத்தின் புறநகரில் ஒரு பழைய கோவில் இருந்தது. அது ஜப்பான் மொழியில் "பகோடா" என்று அழைக்கப்படும். புத்த மதத்தை படிக்க விரும்பும் மாணவர்கள் சிறுவயதிலிருந்தே கோவிலில் வந்து தங்கி குருவிடமிருந்து பயிலுவார்கள்.

      ஒரு நாள் அந்த குரு தனது இளம் மாணவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார். அவர் அவர்களை தன்னை சுற்றி வைத்துக் கொண்டு கூறியதாவது,  "என் அன்பான மாணவர்களே, நீங்கள் பார்க்கிறபடி எனக்கு வயதாகிவிட்டது, உடல் ஆரோக்கியமும் தளர்ந்து விட்டது. நான் இதுவரை பணி செய்தது போல கோவிலின் தேவைகளை தொடர்ந்து ஆற்ற முடியவில்லை. உங்கள் பிழைப்பின் வருமானத்திற்காக உழைக்கவும் இன்னும் கற்றுத் தரவில்லை என்பதையும் அறிவேன். உங்கள் பிழைப்பிற்காக நீங்கள் உழைத்தும், கோயில் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் எனில் ஒரே ஒரு வழிதான் தென்படுகிறது" என்றார்.

     இதைக்கேட்டு குழப்பமடைந்த மாணவர்கள் தங்கள் கண்களை அகல விரித்துக் கொண்டு குருவை நெருங்கினர். குருவோ தொடர்ந்து, "நம் அருகில் உள்ள நகரம் செல்வந்தர்களால் நிரம்பியுள்ளது. அவர்களுக்கு எப்போதும் தேவைப்படுவதை விட அதிகமான பண பைகள் நிரம்பியுள்ளன. நீங்கள் நகரத்திற்குள் சென்று அந்த பணக்காரர்களை நெரிசலான  தெருக்களிலோ அல்லது வெறிச்சோடிய பாதைகளிலோ நடந்து செல்லும்போது அவர்களை பின் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். யாரும் பார்க்காத போது, யாரும் பார்க்காத போது மட்டுமே, நீங்கள் திருட வேண்டும். அப்பொழுதுதான் நம் பள்ளியை நடத்துவதற்கான நிதி நம்மிடம் இருக்கும்." என்று கூறினார். அதுக்கு அம்மாணவர்கள், "ஆனால் குருவே, எங்களுக்கு சொந்தமில்லாத எதையும் எடுத்துக் கொள்வது தவறு என்று நீங்கள் தானே எங்களுக்கு கற்பித்தார்கள்?" என்று ஒரே குரலில் கூறினர்.

   "ஆம் நான்தான் உங்களுக்கு கற்பித்தேன்" என்றார் குரு. "நமக்கு தேவை இல்லாத போது மற்றவர்களிடமிருந்து திருடினால் அது தவறாகும். ஆனால், ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள். யாருடைய பார்வையிலும் படாத படிக்கு திருட வேண்டும், யாராவது பார்க்கும் வண்ணம் திருடக்கூடாது. புரிகிறதா?. என்றார்.

   மாணவர்கள் ஒருவரை ஒருவர் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டனர். தன்னுடைய மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ? மேலும் அவருடைய கண்கள் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றனவே என்று நினைத்த வண்ணம், "சரி குருவே" என்று அமைதியாக பதிலளித்தனர். "நன்று, செல்லுங்கள், நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் யார் பார்வையிலும் படக்கூடாது", என்றார் குரு.

    மாணவர்கள் எழுந்து அமைதியாக கோவில் கட்டிடத்தில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். குரு மெதுவாக எழுந்து அவர்கள் செல்வதைப் பார்த்தார். அவர் உள்ளே திரும்பி சென்ற போது, ஒரு மாணவன் மட்டும் அறையின் மூலையில் அமைதியாக நின்று கொண்டிருப்பதை கண்டார். "நீ ஏன் மற்றவர்களோடு செல்லவில்லை? நம் பள்ளியை நிரந்தரமாக நடத்த உனக்கு விருப்பம் இல்லையா?" என்று மாணவனிடம் கேட்டார் குரு. அதற்கு அந்த மாணவன், "எனக்கு விருப்பம் தான், ஆனால் யார் பார்வையிலும் படாமல் திருட வேண்டும் என்று கூறினீர்கள் அல்லவா?. யார் பார்வையிலும் நான் படாத படிக்கு இவ்வுலகில் ஓர் இடமும் இல்லை. ஏனெனில் எப்பொழுதும் நான் என்னையே பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்." என்றான் அந்த மாணவன் அமைதியாக.

     "அருமை" என்று கூச்சலிட்டார் குரு. "இந்த உண்மையை எனது மாணவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் நீ மட்டும் இந்த உண்மையை கற்றுக் கொண்டுள்ளார். ஓடு, ஓடிப்போய் உன்னுடைய சகமாணவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கு முன்பு அழைத்து வந்து விடு" என்றார். கோயிலுக்கு வெளியே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த மற்ற நண்பர்களை சென்று அழைத்தான்,  அந்த ஒரு மாணவன். அவர்கள் திரும்பி வந்தபோது குரு அந்த ஒரு மாணவன் எடுத்துரைத்த கருத்தை மற்ற மாணவர்களிடம் எடுத்து இயம்பினார். மற்றவர்களும் அந்த உண்மையை அறிந்து கொண்டார்கள்.

நீதி: நாம் செய்வது எந்த காரியமானாலும் வேறு யாரும் பார்ப்பதில்லை என்று நாம் நினைக்கலாம். நம்மை வேறு யாரும்  பார்க்காவிட்டாலும் நம்முள்ளே உள்ள பகுத்தறிவு நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது. அதுவே நமது மனசாட்சி. எது சரி எது தவறு என்பதை சுட்டிக்காட்டி நம்மை வழிநடத்தும் ஒரு பேர் உபகாரியாய் நமது மனசாட்சி உள்ளது. அந்த மனசாட்சிக்கு நாம் கீழ்படிந்தால் நம் வாழ்வு வளமாக அமையும். மனசாட்சி என்பது நமக்குள் இருக்கும் அறிவு. எது சரி, எது தவறு என்பதைத் தெரிந்துகொள்ள இந்த மனசாட்சி நமக்கு உதவி செய்யும். மனசாட்சியை சரியான விதத்தில் பயன்படுத்தும்போது, நாம் கெட்ட விஷயங்களை செய்ய மாட்டோம்,  அதோடு நாம் நல்ல விஷயங்களை செய்ய வேண்டும், சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மனசாட்சியால் நம் கற்றுக்கொள்ளும் பாடம்.

 

-அருட்சகோதரி ப்ரேமிலா.S. இருதயநாதன் SAP

Add new comment

19 + 1 =