எதற்காக? | மரிய அந்தோணி ராஜன் SdC


காலை முதல் மாலை வரை வயலில் வேலைமுடித்து களைப்பாய் வீடு வந்து சேர்ந்தார் அம்மா. வழக்கமாய், குப்பையாய் கிடக்கும் வீட்டின் முற்றம் அன்று பெருக்கப்பட்டு தூய்மையாய் இருந்தது. களைப்பில் வீட்டு திண்ணையில் அமர்ந்தவர் எதிர்ப்புறம் இருந்த மாட்டுக் கொட்டகையை எட்டிப்பார்த்தார். மாட்டுச்சாணம் எல்லாம் அள்ளப்பட்டு தூய்மையாய் இருந்தது. மாடுகளுக்கு வைக்கோல் தீவனங்களும் போடப்பட்டிருந்தது. அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். வழக்கமாக பள்ளி முடிந்து வந்து புத்தகப்பையை திண்ணையிலேயே தூக்கி எறிந்துவிட்டு விளையாட சென்று இரவு எட்டு மணிக்குப் பிறகு வீட்டுக்கு வரும் மகனா இன்று அக்கறையாய் இவ்வளவு வேலைகள் செய்தது! என்று சுதாரிப்பதற்குள் களைப்பாய் வந்த அம்மாவிற்கு கையில் ஒரு சொம்பு தண்ணீர் உடன் வந்தான் மகன். இந்தாங்கம்மா! என்றான். தண்ணீர் தாகம் என்பதால் தண்ணீரை வேகமாய் வாங்கி குடித்துவிட்டு கேட்டார் அம்மா, " தம்பி இதெல்லாம் நீயா செய்த? ". "ஆமாம்மா" என்று சொன்னான் அந்த மகன். கேட்டுக் கொண்டே எழுந்து வீட்டிற்குள் வந்த அம்மாவிற்கு இன்னும் ஆச்சரியம்.

வீடெல்லாம் சுத்தமாக இருந்தது. சிதறிக்கிடந்த பொருட்களெல்லாம் அதற்குரிய இடத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "இன்னைக்கு என்ன வேலைமா? ரொம்ப களைப்பா? கொஞ்சநேரம் உட்காருங்க அம்மா" மிகவும் பாசமாக விசாரித்தான் மகன். நீங்க குளிக்க ஏற்கனவே வெந்நீர் ரெடி பண்ணிட்டேன். இன்னைக்கு சமையலுக்கு நானும் உங்களுக்கு உதவி செய்கிறேன் அம்மா. எந்தெந்த காய்கறிகளை நறுக்கனும்னு மட்டும் சொல்லுங்க". இன்னும் அக்கறை காட்டினான் மகன். ஆச்சரியத்தோடு மகிழ்ச்சியிலும் உறைந்துபோனாள் அம்மா.

என் மகன் எவ்வளவு வேலை செய்கிறான், எனக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறான்! மிகவும் பொறுப்பாக அல்லவா இருக்கிறான்! இதைத்தானே இவனிடம் எதிர்பார்த்தேன் என மகனை மெச்சிக் கொள்கிறார், அம்மா.

இரவு சாப்பாடு வேளை வீட்டில். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, "அம்மா" என்று அழைத்தான் மகன். "சொல்லுப்பா" என்றார் அம்மா. "அடுத்த வாரம் எங்க ஸ்கூலில் இருந்து டூர் போறாங்க. அதற்கு 500 ரூபாய்........" என்று இழுத்தான்.

இப்போது நம் சிந்தனைக்கு:

நம் தெருக்கள் எல்லாம் வேகவேகமாக சுத்தமாகிறது.... புது சாலைகள், பாலங்கள் என எல்லாம் புதுமையாக்கப்படுகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் வேகமாய் நிறைவேறுகின்றன. பல புது திட்டங்கள் வாக்களிக்கப்படுகின்றன. தேடித் தேடி அலைந்தவர்களெல்லாம் வீடு தேடி வருகிறார்கள். "இதைத் தானே எதிர்பார்த்தேன்" என எல்லாம் நிறைவேற்றப்பட்டதாய் தோற்றம் காட்டப்படுகிறது. கடைசியில் இதற்கெல்லாம் ஒரு விலை கேட்பார்கள் நம் அரசியல்வாதிகள். மறுக்கச் சொல்லவில்லை. அதற்கு தகுதியுடையவர்களா என பார்த்து அளிக்கச் சொல்கிறேன்....

அருட்தந்தை மரிய  அந்தோணி ராஜன் SdC

உரோம்,இத்தாலி ...

   

Comments

Very nice

Add new comment

1 + 0 =