Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திமிரி எழும் இளைஞனா நீ? (உலக இளைஞர் திறன் தினம்)
சேலத்தை சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர், நம் நாட்டில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகளை அழிக்க தன் திறன் மற்றும் திறமையும் கொண்டு வெட்டுக்கிளிகளை அழிக்கும் சாதனத்தை உருவாக்கியுள்ளார். இது போல கண்டுபிடிப்புகள் நம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இவரை போல இளைஞர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
இளைஞர்கள், சாதரண நாட்களை விட இந்த ஊரடங்கு காலத்தில் அதிகமாக வேலையில்லாமல் இருப்பதோடு, குறைந்த தரம் வாய்ந்த வேலைகள், அதிக தொழிலாளர் சந்தை ஏற்றத்தாழ்வுகள் போன்ற மாற்றங்களுக்கு தொடர்ந்து ஆளாகின்றனர். கூடுதலாக, பெண்கள் வேலையில்லாமல் இருப்பதற்கும், அவ்வாறே வேலை கிடைத்தாலும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சவால்களும் எண்ணில் அடங்காதவை.
திறமை மேம்பாடு என்பது இளைஞர்களை வேலைக்கு சுமூகமாக மாற்றுவதற்கான முதன்மை வழிமுறையாகும். உலக இளைஞர் திறன் தினம் 15 ஜூலை 2020 அன்று ஒரு சவாலான சூழலில் கொண்டாடப்படுகிறது.COVID-19 தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகள் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (டி.வி.இ.டி) நிறுவனங்களை உலகளவில் மூடுவதற்கு வழிவகுக்கின்றன, திறன் மேம்பாட்டின் தொடர்ச்சியை அச்சுறுத்துகின்றன. தற்போது கல்வி நிலையங்களில் பள்ளி மூடல்களால் உலக கற்றவர்களில் கிட்டத்தட்ட 70% பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு முன்னர், பெரியவர்களை விட மூன்று மடங்கு வேலையில்லாமல் 15-24 வயதுடைய இளைஞர்கள் அதிகமாக இருந்தனர். தொற்றுநோயின் தாக்கம் குறைந்த பின்பு வரும் நாட்களில்,இளைஞர்கள் தங்கள் முயற்சிகளை வெளிகொணர்ந்து,வளர்ந்து வரும் சவால்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கான திறன்களையும், எதிர்கால இடையூறுகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான திறன்களையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
நம் தமிழகத்திலும் இதுபோன்ற திறன் மிகுந்த இளைஞர்கள் உள்ளார்கள். அவர்களின் திறன்களை அறிந்து அவர்களுக்கான வாய்ப்பினை அளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு இளைஞரான சத்திய சுரூபன், தான் படித்த படிப்பிற்கான வேலையை பார்க்காமல் தன் சொந்த முயற்சியால் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். அரசாங்க வேலையையோ அல்லது தனியார் வேலையையோ நம்பி உழன்றுக்கொண்டிருக்கும் இந்த இளைஞர் கூட்டத்திற்கு நடுவில், தன் திறன் கொண்டு தனக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வோரின் செயல்கள் பாராட்டுதலுக்கு உரியதே.
இதுபோன்ற மற்ற இளைஞர்களின் திறன் வெளியில் வராமல் இருக்க காரணம், நம்மில் பல பேர் அவர்களை ஊக்குவிக்க மறந்து விடுகிறோம். பல தடைகளை அவர்கள் முன் வைக்கிறோம். இளைஞர்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை மனதில் கொண்டு, அவர்களின் திறன்களை மேம்படுத்த அவர்களுக்கு உதவுவோம்.
Add new comment