Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உறவுகள் மேம்பட - (தன்னைக் ஏற்றுக்கொள்ளுதல் பகுதி)
தாழ்வு மனம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருப்போரை எப்படி அடையாளம் காண்பது? அவர்களிடம் காணப்படும் அடையாளங்கள் தான் என்ன?
1. இவர்கள் அளவுக்கு மீறி வெட்கப்படுபவர்களாக, கூச்சப்படுபவர்களாக இருப்பார்கள் (shyness). கூட்டத்தில் வாயைத் திறக்கவே அஞ்சுவார்கள். பெரிய அதிகாரிகளிடமோ அல்லது சக ஊழியர்களிடமோ அல்லது தனக்குக் கீழ் பணிபுரிந்து வருபவர்களிடமோ கூட இவர்களால் தைரியமாகவும் அழுத்தமாகவும் பேசமுடியாது. தான் சந்திக்கும் அனைவரும் தங்களைவிட திறமைசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பதாக இவர்களுக்குப்படும்.
தங்களிடம் நல்ல யோசனைகள் இருந்தாலும், தங்களுடைய யோசனைகள் ஒருவேளை மடத்தனமாகவோ அல்லது மற்றவர்களால் ஏற்கத் தகாததாகவோ அல்லது மற்றவர்களின் நகைப்புக்கு உரியதாகவோ இருந்துவிடுமோ என்று பயந்துக்கொண்டு தானாக முன்வந்து வாய்திறந்து தங்களுடைய யோசனைகளைக் கூற மாட்டார்கள். இவர்களிடம் அவை அச்சம் (stage fear) அதிகமாக இருக்கும், மேடைக்கு ஏறி மைக்கைப் பிடித்தாலே கைகால் உதற ஆரம்பித்துவிடும். வேர்த்து விறுவிறுத்துப் போய்விடும். நன்கு தயாரித்திருந்தாலும், நல்ல ஆழமான கருத்துக்கள் இருந்தாலும் பயத்தின் காரணமாக மறந்து விடுவார்கள். பாதியிலேயே பேச்சை முடித்துக்கொள்வார்கள்.
2. எளிதாக எல்லோரிடமும் பழகமாட்டார்கள். எப்போதும் தனித்திருக்க, ஒதுங்கியிருக்க விரும்புவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். கூட்டம் நிறைந்த இடங்களை இவர்கள் வெறுப்பார்கள். மற்றவர்களுடன் சேர்ந்து, சிரித்து, மகிழ்ச்சியுடன் வாழ இவர்களுக்குத் தெரியாது. இனிய நிகழ்ச்சிகளை, சிரிப்பைத் தரும் (சினிமா) திரைப்படம், நாடகம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளை ரசிக்கும் மனநிலை இவர்களிடம் இருக்காது. இவர்கள் பெரும்பாலும் புத்தகப்புழுக்களாக (Book Worms) மாறிவிடுவார்கள்.
3. இவர்களிடம் தோல்வி மனப்பான்மை அதிகமாக தலைநிமிர்ந்து நிற்கும். ஆனால் வெற்றி மனப்பான்மை சிறிதளவும் இருக்காது. இவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பே தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவார்கள். சொல்லப்போனால், ஒருவிதத்தில் தேர்வுக்கு முன்பே தோற்றுப் போய்விடுவார்கள்.
4. இவர்களுக்கு தற்கொலை எண்ணம் அடிக்கடி வரும். வாழ்க்கை இவர்களுக்கு நரகமாக காட்சியளிப்பதால், இவர்கள் தனிமையில் இருக்கும்போது அடிக்கடி தற்கொலையைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பார்கள். தன்னம்பிக்கைக் குறைவாக இருப்பதால் முயற்சிகள் அதிகம் எடுக்கமாட்டார்கள். ஒரு தடவை தோல்வியைச் சந்தித்தால் வாழ்வே தோல்வி என நினைப்பார்கள். சீக்கிரத்தில் விரக்தியடைவார்கள்.
5. எதிலும் முன்னுக்கு வரமாட்டார்கள் மாறாக, பின்னுக்கு இருப்பார்கள். ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்தால் அதனை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுப்பார்கள். இதற்குக் காரணம் இவர்களது தாராள மனம் அல்ல மாறக இவர்களிடம் இருக்கும் தாழ்வு மனம். இவர்களிடம் போட்டி போடும் மனப்பான்மை பெரும்பாலும் இருக்காது.
6. இவர்களிடம் எல்லாவற்றிலுமே ஒரு தயக்கம் இருக்கும். இவர்களால் சீக்கிரம் முடிவு எடுக்க இயலாது. ஒரு சிறியக் காரியத்தைக் குறித்து முடிவு எடுப்பதற்கும் மிகவும் யோசிப்பார்கள், அளவுக்கு அதிகமாக தயங்குவார்கள்.
7. எதற்கெடுத்தாலும் அறிவார்ந்த விளக்கம் தர முயற்சி செய்வார்கள் (Rationalization). நீ ஏன் கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாய் என்று கேட்டால், ஆசிரியர் சரிவர சொல்லித்தரவில்லை. தேர்வு எழுதுவதற்க்கான பென்ஞ் சரியாக அமையவில்லை என்று, ஏதாவது சப்பைக்கட்டு கட்ட முயலுவர். தங்களது தவற்றை ஒப்புக்கொள்ள மறுப்பர்.
8. இவர்கள் தங்களை பிறரோடு ஓப்பிடவோ, திறனாய்வு செய்யவோ அனுமதிக்கமாட்டார்கள். அப்படியே திறனாய்வு செய்து அவர்களது குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
9. இவர்கள் பிறருடைய குற்றங்களையும், குறைகளையும் கண்டுபிடிப்பதிலேயே காலத்தைக் கழிப்பர் (self projection), தங்களதுக் குற்றங்களை மற்றவர்கள்மேல் சுமத்திப் பார்க்கும் மனப்பான்மையுடையவர்கள். இதனால், எல்லாவற்றிலும், எல்லாரிலும் இருக்கும் குறைகளையேச் சுட்டிக்காட்டுவர்,ஆனால் நிறைகள் அவர்களது கண்களுக்குத் தெரியாது.
10. இவர்கள் எல்லாவற்றிலும் "ஆமா சாமி" போடுபவர்களாக இருப்பார்கள். பெரியவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள், எதைச் சொன்னாலும் அது தங்களுக்குப் பிடிக்காத, ஏற்றுக்கொள்ளவியலாதக் கருத்தாக இருந்தாலும், பெரியவர்களை திருப்திப்படுத்துவதற்காக சரி, ஆமாம், நன்றி என்று தலையாட்டுவார்கள். தங்களதுக் கருத்தை துணிந்து, வெளிப்படையாக பெரியவர்களிடமோ, அதிகாரிகளிடமோ சொல்ல முன்வரமாட்டார்கள். நமக்கு ஏன் வம்பு என்று இருந்து விடுவார்கள் அல்லது பெரியவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் அப்படி நடந்துக்கொள்ளுவார்கள்.
11. இவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வதோடு, தங்களைப்பற்றி மிகைப்படுத்தியும் காட்டிக்கொள்வார்கள். தங்களுக்கு தெரியவில்லையென்றால் தெரியவில்லை என்று சொல்லமாட்டார்கள். தாங்கள் படித்தது வெறும் BA-வாக இருக்கும் ஆனால் MA படித்ததாகப் பெருமையடித்துக் கொள்வர். கடன் வாங்கியாவது கல்யாணத்தை மிகப்பெரிய டாம்பீகமாக நடத்தி, தாங்கள் பெரியவர்கள் என்றுக் காட்டிக் கொள்வர்.
12. பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, இவர்கள் பல உளவியல் விளையாட்டுகளை விளையாடுவார்கள். அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று படுத்துக்கொள்வார்கள். சில சமயங்களில் உண்மையிலேயே நோய்வாய்பட்டிருப்பார்கள். ஆனால் அநேக சமயங்களில் தனது பெற்றோர்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கவோ, தமது மனைவியின் கவனத்தை தம்பக்கம் ஈர்க்கவோ, தமது சக ஊழியர்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கவோ இவ்வாறு செய்வார்கள். சில சமயங்களில் பல முகமூடிகளை அணிந்துக் கொள்வார்கள். மிக நல்லவர்களாக, நேர்மையானவர்களாக, பொதுத்தொண்டர்களாக, தியாகிகளாக நடிப்பார்கள். இவர்களிடம் போலித்தன்மை அதிகம் தலைத்தூக்கும்.
13. இவர்கள் பகல் கனவு காண்பவர்களாக இருப்பார்கள். எனக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரி சீட்டிலே விழுந்தால், எனது வாழ்க்கை எப்படி இருக்கும். எனக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்தால் எப்படி இருக்கும். சினிமாவிலே நடிக்க வாய்ப்புக்கு கிடைச்சா எப்படி இருக்கும். இவ்வாறாக தங்களது நிஜ வாழ்க்கைக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத கனவுகளைக் கண்டுகொண்டு காலத்தை வீணடிப்பர்.
14. இவர்களிடம் அதிகமாக தலைமை வழிபாடு இருக்கும். இவர்கள் யாரவது ஒரு தலைவரையோ, நடிகரையோ, விளையாட்டு வீரனையோ தங்களை அறியாமலேயே பின்பற்றுவர். இவர்கள் எப்போதுமே யாரையாவது சார்ந்த்திருப்பர். சுயமாகச் சிந்திக்கத் தெரியாது, திட்டமிட தெரியாது, முடிவு எடுக்கத் தெரியாது.
தாழ்வு மனப்பான்மை தேவையற்றது. அது அருவருக்கத்தக்கது. இந்த நோயை ஒருவன் தன் அறியாமையின் காரணமாக வரவழைத்துக்கொண்டு வருகிறான். ஒருவன் சாதனைகளைப் படைக்க வேண்டுமென்றால், அவன் இந்த நோயைக் கட்டாயம் தம்மிடமிருந்து விரட்டியடிக்க வேண்டும். இந்த நோய் ஒருவனை தொற்றிக்கொண்டுவிட்டாலும், முயற்சி செய்தால் கட்டாயம் இதிலிருந்து விடுதலைப் பெற்று, வாழ்க்கையை வெற்றியோடு, மகிழ்ச்சியோடு அனுபவித்து வாழ முடியும்.
-அருட்பணி. அ.சிங்கராயன்