Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மனிதம் போற்றியதன் பரிசு
அமீரக பிரமுகர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். துபாயில் வசித்து வருபவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன். இவருக்கு இலண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக மனிதாபிமான அமைப்பு, சமூக மற்றும் தொழில் துறையில் சிறப்பான பங்களிப்பினை வழங்கி வருவதற்காக சர்வதேச அளவிலான மனிதாபிமான விருதை ஆன்லைன் மூலம் வழங்கி கவுரவித்துள்ளது. இவர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர். ராசல் கைமா, துபாய் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். கொரானா பயத்தால் மனச்சோர்வடைந்தோருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக உரையாற்றி வருகிறார். மேலும் தேவையுடையோருக்கு உதவிகளை வழங்கியும் வருபவர். குறிப்பாக கொரோனா பாதிப்பு உள்ள நேரத்தில் அமீரகத்திலும், தமிழகத்திலும் உதவியை செய்பவர். இது மட்டுமல்லாது இவரது மனைவி தில்ஷாத் பேகம் உள்ளிட்ட குடும்பத்தினர் நிர்வகித்து வரும் திருநெல்வேலியில் உள்ள தேசிய கல்வி அறக்கட்டளைக்கு ஸ்டார்ஸ் ஆப் கோவிட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டுப் பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
துபாயில் பணிபுரிந்து வருபவர் முதுவை ஹிதாயத். பத்திரிகையாளரான இவர் துபாய் ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளராக இருந்து வருகிறார். ரத்ததான முகாம், மருத்துவ முகாம், அமீரகத்தில் எதிர்பாராத விதமாக இறப்பவர்களது உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு எடுத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறார். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக சமூகப் பணிக்கான சர்வதேச மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் சார்ஜாவில் மதுரையைச் சேர்ந்த ஜாஸ்மின் அபுபக்கர் நிர்வாகியாக இருந்து கிரீன் குளோப் என்ற தன்னார்வ அமைப்பினை நடத்தி வருகிறார். இந்த அமைப்புக்கும் சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள், மரம் நடுவது, தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.
சென்னையை சேர்ந்தவர் மன்சூர் அலி கான். எம் ஆட்டோ எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவர் மின்சாரத்தால் இயக்கப்படும் ஆட்டோக்களை தமிழகத்தில் அறிமுகம் செய்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் செய்ல்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது வழங்கப்பட்டுள்ளார்.
Stars of Covid “ஸ்டார்ஸ் ஆப் கோவிட்” என்ற நிகழ்ச்சியை "World Humanitarian Drive“ வேர்ல்ட் ஹுமானிட்டேரியென் டிரைவ் (WHD)" என்ற சர்வதேச தொண்டு அமைப்பின் நிறுவனர் திரு. அப்துல் பாசித் சையத் மற்றும் அவரின் அமைப்பை சேர்ந்தவர்களால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள் அறிவிக்கப்பட்ட மனிதம் போற்றும் நிகழ்ச்சியாகும். மனிதம் போற்றும் உயரியவர்களை கௌரவித்தல் என்ற உயரிய நோக்கே இதன் குறிக்கோளாகும்.
ஆன்லைன் மூலம் விருதுக்கு தேர்ச்சி பெற்றோரின் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை 2020 ஜுன் 28 அன்று மதியம் 2 மணி (லண்டன் நேரம்) இவ்விழாவை தலைமையேற்ற உயர் திரு. மாதவ் குமார் நேபாள் - நேபாள் நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் உயர் திரு ஃபத்மீர் சேஜ்டியூ - கொசோவோ நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் அறிவித்தனர்.
அரசியல்வாதிகள், பத்திரிகையாளர் மற்றும் ஊடகங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நிர்வாக சேவைகள், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம், மருத்துவத்துறை, அறக்கட்டளை/தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர் /தன்னார்வலர், நிறுவனர்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி, சமூக நல அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பன்னிரண்டு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
முதுவை ஹிதாயத், துபாய்
Add new comment