Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
All Souls Day
மரித்த அனைத்து ஆத்மாக்கள் நாள்
இறப்புக்குப் பின் மறு வாழ்வு பற்றிய கொள்கையுடைய எல்லா மதங்களும் மரித்த மக்களுக்காக ஜெபிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.
கிறிஸ்தவர்களால், மரித்த அனைத்து ஆத்மாக்களை பெரும் மரியாதையோடு நினைவுகூற ஏற்படுத்தப்பட்ட தூய நாளே அனைத்து ஆத்மாக்களின் நாள்.
கத்தோலிக்க திருச்சபையில் இன்னாள் விமரிசையாக நினைவு கூறுகின்ற அதேவேளையில் கீழைத் திருச்சபையிலும் இன்னாள் அனுசரிக்கப்பட்டது, இன்னும் சில பிரிவினை சபைகளிலும் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் உரோமை வழிபாட்டு கால அட்டவணையில் இன்றைக்கு என்ன பெயரிடப்பட்டு இருக்கிறது தெரியுமா? நம்பிக்கையில் மரித்த எல்லா ஆத்மாக்களோடு சுமூக உறவு.
இந்த நாளானது கத்தோலிக்க திருச்சபையில் நவம்பர் மாதம் இரண்டாம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்னாள் அனைத்துப் புனிதர்களுடைய நாளுக்கு அடுத்த நாளாக வருகின்றது.
இந்நாள் திருச்சபையின் படிப்பினையோடு ஒத்துபோகின்றது. திருச்சபையின் படிப்பினை என்னவென்றால் மரித்த ஆத்மாக்கள் மரிக்கும் தருவாயில் அவர்களுடைய அற்ப பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பது ஆனால் அவர்களுடைய சாவான பாவங்கள் உத்தரித்தளத்திலே மன்னிக்கப்பட்டு கழுவப்பட்டு பின்புதான் அவர்களுக்கு விண்ணகம் கிடைக்கும் என்பது. அவர்களுக்காக அவர்களின் ஈடேற்றத்திற்காக ஜெபிப்பதே இந்த நாளுக்கான போதனையாக திருச்சபை அறிவித்திருக்கிறது.
வரலாறு
இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில் (12: 42-46) மரித்தவருக்காக ஜெபிக்க அழைப்பதை பார்க்கின்றோம். அன்று தொட்டே இவ்வழக்கம் மேற்கத்திய திருச்சபையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேற்கத்திய திருச்சபையில் நவம்பர் மாதம் இரண்டாம் நாள் இந்த காரணத்திற்காக ஒதுக்கப்பட்டது.
முதன்முதலாக நவம்பர் மாதம் இரண்டாம் நாளை மரித்த அனைத்து ஆத்மாக்களின் நாளாக கொண்டாடியவர் க்ளூனி மடத்தை சார்ந்த மடாதிபதி புனித ஒடிலோ. இவர் கிபி 998 ஆவது ஆண்டு நவம்பர் இரண்டாம் நாளிலிருந்து இதை தன்னுடைய மடத்தில் மரித்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
வெகு விரைவில் இந்த வழக்கமானது பல மறைமாவட்டங்களில் பரவியது. குறிப்பாக பிரான்ஸ் தேசத்தில் இது இன்னும் அதிகமாக பரவியது. பின்பு ஒட்டுமொத்த மேற்கத்திய திருச்சபையிலும் இது பரவியது.
ரோமன் கத்தோலிக்க சபையில் இந்த நாள் 14 ஆவது நூற்றாண்டில் இருந்தே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளாக இந்த நாளானது நவம்பர் இரண்டாம் தேதி அனுசரிக்கப்பட்டு வந்தது. எனவே உரோமை திருச்சபை வழிபாட்டு கால அட்டவணையில் நவம்பர் மாதம் இரண்டாவது நாள் ஒதுக்கப்பட்டது.
இந்நாளிலே மரித்த அனைத்து ஆத்துமாக்களுக்காக செபங்கள் ஒப்புக் கொடுக்கப்பட்டன.
மரித்த ஆத்மாகளுக்காக நம்மால் இயன்ற முன்னெடுப்புகள்
மரித்த அனைத்து ஆத்மாக்கள் நாளிலே நாம் அவர்களை நினைப்பது மட்டுமல்லாது ஒரு சில காரியங்களையும் செய்கின்றோம் முதலாவதாக ஜெபிப்பது, நம்மால் இயன்ற இரக்க செயல்களை செய்வது, திருப்பலியில் பங்கெடுப்பது இதன் வழியாக இந்த ஆத்மாக்கள் உத்தரித்தளத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு விண்ணகத்தை அடைய வேண்டுவது.
பாவ மன்னிப்பு அருள் பலன்
இந்நாளிலே நாம் பாவ மன்னிப்பு அருள் பலன்களாக இரண்டு செயல்களை செய்ய வேண்டும் ஒன்று கோவிலுக்கு செல்வது மற்றொன்று கல்லறைத் தோட்டத்தை சந்திப்பது.
கல்லறைத் தோட்டத்தை சந்திப்பது நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து எட்டாம் தேதி வரை பாவமன்னிப்பு அருள் பலனாகவும் அதற்குமேல் சந்திப்பது சற்று குறைந்த பாவமன்னிப்பு அருள் பலன் ஆகவும் வழங்கப்படுகிறது.
பாவமன்னிப்பு அருள் பலன் என்பது
கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண் 1471, 1479 மற்றும் 1498ல் இவ்வாறாக கூறப்படுகிறது.
" கடவுள் முன்னிலையில் ஏற்கனவே குற்றங்கள் மன்னிக்கப்பட்டவர் பாவங்களுக்குரிய தற்காலிக தண்டனையை இவை நீக்குகின்றன. தகுந்த மனநிலையில் உள்ள இறைமக்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தமக்காகவோ இறந்தோருக்காக பாவமன்னிப்பு அருள் பலன்களை பெறுகின்றனர். இவை திருச்சபையின் பணி வழியாக வழங்கப்படுகின்றன. அதாவது திருச்சபை மீட்பின் அருளை வழங்கும் கருவி என்பதால் கிறிஸ்து புனிதர்கள் ஆகியோருடைய பேறுபலன்களின் கருவூலத்திலிருந்து இதனை வழங்குகிறது."
Fr. அ. சிங்கராயன்.
RVA, Program Director,
Philippines.
Add new comment