உடன்பிறந்த ஒருமைப்பாட்டின் சாட்சிகளாக, துணிவுடன் செயலாற்ற....


L'Aquila நிலநடுக்கத்தின் பத்தாம் ஆண்டு நினைவு (ANSA)

இத்தாலியின் L'Aquila பகுதியில், 2009ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பத்தாம் ஆண்டு நினைவையொட்டி, அப்பகுதி மக்களுடன் தன் ஒருமைப்பாட்டையும், அவர்களுக்கு தன் செப உறுதியையும் வெளியிட்டு, செய்தியொன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

L'Aquilaவின் பேராயர், கர்தினால் ஜியுசெப்பே பெத்ரோக்கி அவர்களை தான் அண்மையில் சந்தித்தபோது, அவர் வழியே தனக்கு வாழ்த்துக்களையும், செபங்களையும் அனுப்பியிருந்த மக்களுக்காக திருத்தந்தை தன் நன்றியை வெளியிட்டுள்ளார்.

பெரும் அழிவையும், மரணங்களையும், உருவாக்கிய நில நடுக்கத்தின் பத்தாம் ஆண்டு நினைவுக்கூரப்படும் இவ்வேளையில், இம்மக்கள், தங்கள் பகுதியை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் தானும் அவர்களுடன் பயணம் செய்வதாக திருத்தந்தை கூறியுள்ளார்.

உடன்பிறந்த ஒருமைப்பாட்டின் சாட்சிகளாக, துணிவுடன் செயலாற்றுமாறு, L'Aquila மக்களுக்கு, சிறப்பான அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் வெளியிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி, மத்திய இத்தாலியின் L'Aquila பகுதியில், அதிகாலை 3.32 மணிக்கு, ஏற்பட்ட நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் அமைந்திருந்தது என்பதும், இதில் 308 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

நன்றி வத்திக்கான் செய்தி. 

Add new comment

9 + 1 =