அருள்பணி Van der Lugt மரணமடைந்ததன் 5ம் ஆண்டு நிறைவு


இயேசு சபை அருள்பணியாளர் Frans Van der Lugt

2014ம் ஆண்டு, ஏப்ரல் 7ம் தேதி, சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கடத்திச் செல்லப்பட்டு, கொலையுண்ட இயேசு சபை அருள்பணியாளர் Frans Van der Lugt அவர்கள் இறையடி சேர்ந்ததன் 5ம் ஆண்டு நிறைவையொட்டி, ஒரு குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்து மற்றும் பிளாண்டர்ஸ் (Flanders) பகுதிகளில் பணியாற்றும் இயேசு சபையினர் உருவாக்கியுள்ள இந்த 7 நிமிடக் குறும்படம், ஆங்கிலம், அரேபியம், பிரெஞ்சு, ஜெர்மன், இஸ்பானியம், போலந்து, போர்த்துகீசியம், இத்தாலியம் மற்றும் டச் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

"வெறுப்பை இறுதியில் வெல்ல விடாதீர்கள்" என்ற விண்ணப்பத்தை அருள்பணி Van der Lugt அவர்கள் விடுப்பதைப்போல், இந்தக் குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

1938ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி நெதர்லாந்தில் பிறந்த Van der Lugt அவர்கள், தன் 19வது வயதில் இயேசு சபையில் இணைந்து, 33வது வயதில் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

தன் 76வது வயதை நிறைவு செய்வதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாகக் கொல்லப்பட்ட அருள்பணி Van der Lugt அவர்கள், தன் வாழ்வின் 50 ஆண்டுகளை, சிரியாவில் கழித்தார்.

2011ம் ஆண்டு, சிரியாவில் உள்நாட்டு போர் ஆரம்பமானதிலிருந்து, ஹோம்ஸ் நகரில் இருந்த இயேசு சபையினரின் இல்லத்தில், வன்முறைகளால் தங்கள் இல்லங்களை இழந்த கிறிஸ்தவர், இஸ்லாமியர் அனைவருக்கும் அருள்பணி Van der Lugt அவர்கள் புகலிடம் தந்து, பணியாற்றிவந்தார்.

2014ம் ஆண்டு, 75 வயது நிறைந்த அருள்பணி Van der Lugt அவர்களை, ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் கடத்திச் சென்று, அவரது தலையில் சுட்டுக் கொன்றனர். (AsiaNews)

நன்றி வத்திக்கான் செய்தி

Add new comment

1 + 16 =