மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இணைந்து நில்லுங்கள்


image of Paolo Ruffini from cna

மதத்தின் அடிப்படையில் இவ்வுலகில் வளர்ந்துவரும் வன்முறைகள் குறித்தும், மத உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும், நாம் அக்கறையற்று இருக்க இயலாது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

“அகில உலக மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இணைந்து நில்லுங்கள்” என்ற தலைப்பில், ஏப்ரல் 3, இப்புதனன்று உரோம் நகரின், அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர் - முனைவர் பவுலோ ருஃபீனி அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

நன்மைகளை நோக்கி வரலாறு நடைபோடுவதாக நாம் கற்பனை செய்துகொண்டிருக்கும் வேளையில், அது, வன்முறை, வெறுப்பு, தீவிரவாதம், அடிப்படைவாதம் ஆகிய தீமைகளை நோக்கி சமுதாயத்தை இழுத்துச் செல்கிறது என்று, ருஃபீனி அவர்கள் வருத்தம் தெரிவித்தார்.

இன்றைய உலகில் பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அடைந்துவரும் துன்பங்கள் மிக அதிகம் என்பதையும், இப்பிரச்சனையைத் தீர்க்க, நாம் அனைவரும் மன உறுதியுடன் முன்னேற வேண்டும் என்பதையும் திருத்தந்தை தன் உரைகளில் குறிப்பிடுள்ளதை, முனைவர் ருஃபீனி அவர்கள், சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உண்மைப் பேசுவதில், சலிக்காமல் உரையாடல் மேற்கொள்வதில், மனம் தளராமல் பாலங்கள் எழுப்புவதில், சிறுபான்மையினருக்கு சார்பாக துணை நிற்பதில் நாம் காட்டவேண்டிய மன உறுதி அடங்கியுள்ளது என்று, ருஃபீனி அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

நன்றி வத்திக்கான் செய்தி

Add new comment

7 + 11 =