திருத்தந்தையின் மொராக்கோ நாட்டு பயணத் தொகுப்பு


pope concluding morocco visit

தன் 28வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, இஸ்லாமிய நாடான மொராக்கோவில், மார்ச் 30, இச்சனிக்கிழமை காலை துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேம் நகர், மும்மதங்களுக்கும் பொதுவான புனித நகரம் என்ற தனித்துவம் காப்பாற்றப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தில், மன்னர் 6ம் முகம்மது அவர்களுடன் இணைந்து கையெழுத்திட்டது உட்பட, பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு, இஞ்ஞாயிறு இரவு, வத்திக்கான் திரும்பினார்.

மொராக்கோ நாட்டின் வளத்திற்காகவும், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே உடன்பிறந்த உணர்வும், ஒருமைப்பாடும் வளரவேண்டும் எனவும் இறைவனை நோக்கி வேண்டுகிறேன், என தன் திருப்பயணத்தின்போது ஆவலை வெளியிட்டிருந்தார், திருத்தந்தை பிரானசிஸ்.

அந்த இஸ்லாமிய நாட்டின் அனைத்து மக்களுக்காக, பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பணிகளை ஆற்றிவரும் தலத்திருஅவையின் சமூகப்பணி மையத்திற்குச் சென்று, அங்கு பராமரிக்கப்படும் நோயுற்ற குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரையும், திருத்தந்தை சந்தித்து, ஆறுதல் கூறியது, மனதை தொடுவதாக இருந்தது என, சமூகத்தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மொராக்கோ நாட்டில் புகலிடம் தேடிய அண்டை நாட்டு மக்களுள் 80 பேரை சந்தித்து உரையாடியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னேற்றம் என்றால், குடிமக்களும், குடிபெயர்ந்தோரும் இணையாக வாழும் ஒரு சூழலை உருவாக்கித் தருவதேயாகும் என்பதை வலியுறுத்தினார்.

ரபாட் நகரின் மையத்திலுள்ள புனித பேதுரு பேராலயத்தில் அந்நாட்டு அருள்பணியாளர்களையும் துறவியரையும் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் ஒரே தந்தையின் மக்கள், நாமனைவரும் உடன்பிறந்தோர் என்ற உணர்வை சமூகத்தில் வலியுறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த அருள்பணியாளர்கள் சந்திப்பின்போது அல்ஜீரியா துறவு மடத்திலிருந்து அருள்பணி Jean Pierre Schumacher என்பவரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 95 வயதுடைய இவர், 1996ம் ஆண்டு அல்ஜீரியாவில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட 7 Trappist துறவிகளோடு வாழ்ந்து, அந்த ஆபத்திலிருந்து அதிசயமான முறையில் தப்பித்தவர்.

தன் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நிகழ்வான திருப்பலியின் இறுதியில், மன்னருக்கும் மொராக்கோ நாட்டு மக்களுக்கும் தன் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஞாயிறு இரவு உள்ளூர் நேரம் 9.30 மணியளவில், அதாவது, இந்திய நேரம் நள்ளிரவு ஒரு மணியளவில் உரோம் விமான நிலையம் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து நேராக புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் சென்று, அன்னை மரி திருவுருவத்தின் முன் சிறிது நேரம் செபித்து நன்றி கூறியபின், வத்திக்கான் வந்தடைந்தார். இத்துடன், அவரது 28வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது.

நன்றி: வத்திக்கான் செய்தி

Add new comment

5 + 1 =