Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
எருசலேம் நகரைக் குறித்த விண்ணப்பத்தில் திருத்தந்தையும் மன்னர் 6ம் முகம்மதும் தெரிவித்த கருத்து
மன்னரின் மாளிகைக்குள் திருத்தந்தை நுழைந்ததும், அவருக்கு, அரச மெய்க்காப்பாளர் படை, அணிவகுப்பு மரியாதை செலுத்தியது. இதைத் தொடர்ந்து, அரச குடும்பத்தினர், திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். திருத்தந்தையும், மன்னரும் ஒருவருக்கொருவர் நினைவுப் பரிசுகளைப் பகிர்ந்துகொண்ட பின்னர், இருவருக்கும் இடையே, தனி அறையில் சந்திப்பு நிகழ்ந்தது. இச்சந்திப்பில், ஒரு முக்கிய நிகழ்வு இடம்பெற்றது. ஆம், மன்னர் 6ம் முகம்மது அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இணைந்து, எருசலேம் நகரைக் குறித்த ஓர் அறிக்கையை விண்ணப்பமாக வெளியிட்டனர்.
"எருசலேம் நகரின் தனித்துவம், அதன் ஆன்மீக முக்கியத்துவம், அமைதியின் நகரம் என்ற அதன் தனித்துவமான அடையாளம் போன்றவற்றை மனதில் கொண்டு, அந்நகரைக் குறித்து இந்த விண்ணப்பத்தை வெளியிடுகிறோம். மனித குலத்தின், குறிப்பாக, கடவுள் ஒருவர்தான் என்ற மத நம்பிக்கை கொண்ட மும்மதங்களின் பாரம்பரியக் கருவூலமாக விளங்கும் இந்நகர், கருத்துப் பரிமாற்றம், மற்றும், அமைதி உடன் வாழ்வு ஆகியவற்றின் இடமாக விளங்கி, ஒருவருக்கொருவர் மதிப்பையும், உரையாடலையும் வளர்க்கும் தலமாக தொடரவேண்டும் என்று ஆவல் கொள்கிறோம். இதன் காரணமாக, இந்நகரின் பல்சமயப் பண்பும், ஆன்மீகப் பரிமாணமும், கலாச்சாரத் தனித்துவமும் பாதுகாக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படவேண்டும். கடவுள் ஒருவர்தான் என்ற மத நம்பிக்கை கொண்ட மும்மதங்களைப் பின்பற்றுவோரும் எருசலேம் வழிபாட்டுத் தலங்களை தரிசித்து, உலகில் அமைதியும், உடன்பிறந்த உணர்வும் நிலவ, இறைவனை நோக்கி செபங்களை எழுப்பும் சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம்" என்ற சொற்கள் அடங்கிய இந்த விண்ணப்பத்தில், மொராக்கோவின் மன்னர் 6ம் முகம்மது அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இணைந்து கையெழுத்திட்டு, வெளியிட்டனர்.
ஆதாரம் வத்திக்கான் செய்தி
Add new comment