Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயற்கை இறைவனின் கொடை
இறைவன் இம்மண்ணுலகத்திற்கு அளித்த மாபொரும் கொடை இயற்கை. விவிலியத்தின் தொடக்க நூலில், இறைவன் மூன்றாம் நாளில் நீரையும் நிலத்தையும் பிரித்து அவற்றில் உயிரினங்கள் தோன்றுமாறு கட்டளையிட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. நிலம், அதன் தன்மைக்கேற்ப உயிரினங்களை உருவாக்கட்டும் என இறைவன் உரைத்தார். இதன் மூலம் இறைவனின் படைப்புத் தொழிலில் இயற்கையும் பங்கு கொண்டது என்பதை அறியலாம்.
மனிதனைப் படைக்கும் முன்பே இயற்கையைப் படைத்து அதனை மனிதனுக்கு கொடையாகக் கொடுத்து தன்னிச்சையாக செயல்படவும் செய்கிறார் இறைவன். ஆனால் கொடையாகப் பெற்ற அவ் வளங்களை மனிதன் தன் சுயநலன்களுக்காக அழித்தொழிக்க நினைக்கிறான். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழவே இறைவன் நம்மை அழைக்கிறார். முதல் பெற்றோருக்கு ஏதேன் தோட்டத்தை அளித்த இறைவன் காட்டு மரங்களுடனும், வானத்துப் பறவைகளுடனும், விலங்குகளுடனுமேயே அவர்களை வாழச் செய்தார். நாகரீக மனிதன் இயற்கையை அழித்துச் செயற்கையுடன் வாழ்வதையே நவீன வாழ்க்கையாக கருதுகிறான். இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழவே அனைத்து மதங்களும் அழைப்பு விடுக்கின்றன் அவற்றுள் கிறிஸ்துவ மதம் மிக சிறப்பான அழைப்பை விடுக்கின்றது.
பழைய ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் இறைவன் தனக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை வெளிக்காட்டியுள்ளார். மோசேவிடம் நெருப்புப் புதரின் வழியே பேசினார். இஸ்ராயேல் மக்களிடையே மலையின் வழிநின்று பேசினார். செங்கடலைப் பிளக்கச் செய்தார். மன்னா என்னும் உணவை தந்து, காட்டுப் பறவைகளை இறைச்சியாக கொடுத்தார். இவையனைத்தும் இயற்கைக்கும் இறைவனுக்குமான தொடர்பையும், இறைவன் இயற்கையை எவ்வாறு தனது பேசும் பொருளாக பயன்படுத்தினார் என்பதற்கும் சான்றுகள் ஆகும்.
புதிய ஏற்பாட்டில் இயேசுவும் இயற்கையை சார்ந்தே வாழ்ந்தார். பெரும்பாலும், கடற்புறங்களிலும் மலைகளிலுமே தமது போதனைகளை மேற்கொண்டார். விதைப்பவர் உவமை போன்ற தனது உவமைகளிலும் கூட இயற்கை சார்ந்த பொருட்களையே பயன்படுத்தினார். இயேசு காற்றையும் கடலையும் அடக்கியதும், கடல் மீத நடந்து சென்றதும் இயற்கையும் இறைவனுக்கு பணிந்ததே என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இயற்கையை பேணுவதன் முக்கியதுவம் பற்றி அதிகமாக பேசியுள்ளார். 80 பக்கங்களையும் 45,000 வார்த்தைகளையும் கொண்ட அவரது சுற்றுமடல் ‘லௌதாதேசி’ யில் (டுநரனயவளi) சுற்றுச்சூழல் சீரழிவுகள் பற்றியும் அதை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் எழுதியுள்ளார். உலகத் தலைவர்கள் தங்களது போலி உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பச் செய்கிறது அம்மடல். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்யும் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை, கார்பன் வெளியீட்டை குறைத்துக்கொள்ளச் சொல்கின்றன. வளர்ச்சி அத்தியாவசியம் தான்;; ஆனால் அவ்வளர்ச்சி, இயற்கையோடு இணைந்ததாகவே இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்த வளர்ச்சியையே திருத்தந்தையும் முன் வைக்கிறார்.
புவி வெப்பம் அடைதல், காடுகள் அழிக்கப்படுதல், கார்பன் வெளியேற்றம் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையே. மாசுக் கட்டுப்பாடு என்பது இக்காலச் சமூதாயம் எதிர்கொள்ளும் மாபெரும் பிரச்சனை ஆகும். ஆண்டொன்றுக்கு 1000 டாண்ணுக்;கு அதிகமான மின்னணுக் கழிவுகள் இவ்வுலகம் முழவதும் வெளியேற்றப்படுகின்றன. இவை யாவும், முற்றிலும் கீழ் நிலைக்கு மாற்றப்பட முடியாத கழிவுகள். ஆண்டுதோறும் கடலில் கொட்டப்படும் கழிவுகளில் பெரும்பான்மை இத்தகையானவையே. உலகம் முழுவதும் அனைத்துப் பெருநகரங்களும் மாசு கட்டுப்பாடு என்ற பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றன. 2050 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் நகரங்களுக்கு குடிபெயர்வர் என்கிறது ஓர் ஆய்வு. நகரங்களில் வாழ்க்கை என்றுமே இயற்கையுடன் ஒன்றியதாக இருந்ததில்லை. பெய்ஜிங், டோக்கியோ போன்ற பெருநகரங்களில் வாழும் ஒரு மனிதர், தன் வாழ்நாளில் பூமியில் கால்வைக்காமலேயே வாழ இயலும் என்கின்றனர். இவையனைத்தும் நகரங்களில் மனிதன் எவ்வாறு இயற்கையை விட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டான் என்பதைக் காட்டுகின்றன.
இயற்கை மனித குலத்திற்கு இறைவன் அளித்த மாபெரும் தாலந்து. எவ்வாறு நாம் ஒவ்வொருவருடைய தாலந்திற்கும் இறைவனுக்கு கணக்குக் கொடுக்க வேண்டுமோ அவ்வாறே இயற்கை தாலந்திற்கும், நம்மால் இயற்கைக்கு விளைந்த நன்மைத் தீமைகளுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும். இறைவன் அளித்தக் கொடையான இயற்கையைப் பேணி பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் தலையாயக் கடமையாகும்.
மனித உயிர் வாழ்க்கைக்கு இயற்கை சூழலும் அதில் உள்ள உயிரினங்களும் இன்றியமையாதவை. மனிதன் இன்றியும் இயற்கைத் தனித்து இயங்கும். ஆனால் இயற்கையின்றி மனிதனால் தனித்து இயங்க இயலாது. மானுடம் இவ்வுலகில் தழைத்தோங்க இறைவன் அளித்த இயற்கை இன்றியமையாதது. அதைப் பேணி பாதுகாப்பதன் மூலம் மனிதனின் வாழ்க்கையை இப்பூமியில் நீண்ட நாட்களுக்கு உறுதிபடுத்த இயலும்.
- ஜேசு ஆண்டனி ஜோஸ்
நன்றி;: சலேசிய செய்தி மலர்
Add new comment