Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பே நம் வாழ்வின் பொருளாகட்டும்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 20 ஆம் வெள்ளி (25.08.2023)
I: ரூத்: 1: 1,3-6, 14b-16, 22
II: திபா: 146: 5-6. 7. 8-9. 9-10
III: மத்: 22: 34-40
அன்று ஞாயிறு திருப்பலி முடிந்த உடன் மறைக்கல்வி வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.பங்குப்பணியாளர் மறைக்கல்வி வகுப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஆறாம் வகுப்பு மாணவர்களைச் சந்திக்கும் போது ஒரு மாணவர் எழுந்து குருவானவரிடம் " பாதர் கண்முன் தெரிகின்ற மனிதர்களை அன்பு செய்வது எவ்வாறு காணமுடியாத கடவுளை அன்பு செய்வதற்கு சமமாகும்? அப்படி என்றால் கடவுளும் மனிதரும் சமமா?" எனக் கேட்டான். அதற்கு குருவானவர் "அம்மா வயிற்றுக்குள் குழந்தை இருக்கும் போது, அம்மா சாப்பிடும் சாப்பாடுதான் குழந்தைக்கு ஊட்டமளிக்கிறது. அதுபோலத்தான் கடவுள் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வாழ்கிறார். மனிதர்களில் வாழும் கடவுளை நாம் கண்டறிந்து அவரை அன்பு செய்யும் போது அவ்வன்பு மனிதருக்கும் கடவுளுக்கும் ஒரு சேர கிடைக்கிறது. இதைத் தான் கிறிஸ்து வாழ்வாக்கினார் " என்று கூறினார்.
இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு தன்னை சோதிக்கும் நோக்கோடு வந்த பரிசேயரிடம் முதன்மைக் கட்டளை என்ன என்ற அவர்களுடைய கேள்விக்கு பதிலளிக்கின்றார்.
"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. " இயேசு அளித்த இப்பதிலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. கடவுளை முழு மனதோடு அன்பு செய்ய வேண்டும் என்ற கட்டளைக்கு இணையான கட்டளையாக பிறரை அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் இயேசு. அவ்வாறெனில் இறையன்புக்கு இணையாக பிறரன்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்னும் ஆழமாகச் சிந்தித்தோமெனில் இறையன்பையும் பிறரன்பையும் பிரிக்க இயலாது என்ற கருத்தை ஆழமாகச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.அத்தோடு மட்டுமல்ல இவ்விரு கட்டளைகள் தான் மற்ற கட்டளைக்கெல்லாம் அடிப்படை எனவும் அவர் கூறுகிறார்.
ஆம் கல்லிலே கடவுளைக் கண்டு அன்பு செய்யத் தெரிந்த மனிதன், தன் போன்ற இரத்தமும் சதையும் கொண்ட மனிதனிலே வாழும் கடவுளைக் காண இயலாதது ஏன்? பல வேளைகளில் நாமும் இதற்கு விதிவிலக்கல்லவே.
எனவே ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’(மத் 25:40) என்ற வார்த்தைக் கேற்ப நம்மோடு வாழும் நம் அயலாருக்கு நாம் காட்டும் சிறிய அன்பு கடவுளின் பார்வையில் விலைமதிப்பில்லாததாகும் என உணர்ந்து, நம் வார்த்தைகளால், உடனிருப்பால்,பகிர்தலால், மன்னிப்பால், உதவியால் பிறருக்கு நம் அன்பை வெளிப்படுத்துவோம். அவ்வன்பு நாம் வணங்கும் இறைவனை நேரடியாகச் சென்றடையும். அன்பே நம் வாழ்வின் பொருளாகட்டும்.
இறைவேண்டல்
அன்பே இறைவா! பிறரில் உம்மை கண்டுணர்ந்து அன்பு செய்யும் வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment