Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஆண்டவரிடம் திரும்புவோமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் -மூன்றாம் வாரம் சனி
I: ஓசே: 6: 1-6
II: திபா: 51: 1-2. 16-17. 18-19
III: லூக்:18: 9-14
இரு நண்பர்கள்.. தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டார்கள். சண்டை முற்றி வார்த்தைகள் தடித்து உறவில் முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் தத்தம் வழிகளில் சென்றனர். புதிய உறவுகளும் புதிய நண்பர்களும் கிடைத்தன. ஆனால் இருவருக்குமே பழைய உறவில் இருந்த ஆனந்தம் புரிதல் போன்றவை இல்லாத உணர்வு இருந்தது. இருவரும் ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. அங்கு நடந்த ஒரு அழகிய சம்பவம் என்னவென்றால் இருவருமே மற்றவர்தான் முதலில் பேச வேண்டும் என எண்ணாமல் தங்களைத் தாழ்த்தி இரங்கி வந்து பேசி சமாதானம் செய்து கொண்டனர். முறிவு மறைந்தது. உறவு திரும்பியது. மனக்காயங்கள் எல்லாம் மாய்ந்தது.
இது தான் உறவில் தேவையான ஒன்று. நாம் ஒருவரை நோக்கி ஒருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதன் பேரல்ல உறவு. உள்ளத்தை அவர்கள் பால் திருப்புவது தான் உறவு. மனித உறவுகளுக்கு மட்டும் அல்ல இறைவனோடு உள்ள உறவைப் புதுப்பிக்கவும் தேவையானது இந்த மனநிலையே.
ஓசேயா இறைவாக்கினர் மக்களிடம் "வாருங்கள் ஆண்டவரிடம் திரும்புவோம் " என அழைப்பு விடுக்கிறார். இஸ்ரயேல் மக்கள் செய்த பாவத்தால் பல தண்டனைக்களுக்கு உள்ளாகி அவர்கள் உடலாலும் மனதாலும் காயப்பட்ட நிலையில் ஆண்டவரிடம் திரும்பினால் நம் காயங்கள் எல்லாம் மாறும். அவர் நம் வாழ்வை புதுப்பிப்பார் என மக்களுக்கு அறிவுறுத்துவதை நாம் முதல் வாசகத்தில் காண்கிறோம்.
நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் வரி தண்டுபவரும் ஆண்டவரிடம் தம்மையே தாழ்த்தி திரும்பி வருவதை காண்கிறோம். தன்னிலை உணர்ந்து ஆண்டவரிடம் திரும்பிய அவர் ஏற்புடையவராய் வீடு திரும்பினார். மாறாக தன்னை உயர்த்தி தன் முகத்தை வரிதண்டுபவருக்கு எதிராக திருப்பிக்கொண்ட பரிசேயரோ ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
நம்மையே நாம் ஆய்வு செய்வோம். நாம் நம்மையே தாழ்த்தி நம் நிலை உணர்ந்து ஆண்டவரை நோக்கித் திரும்புகிறோமா? அல்லது நம் அயலாருக்கும் நம் உறவுகளுக்கும் எதிராக நம் முகத்தைத் திருப்பிக்கொண்டு உறவுகளை முறித்துக்கொள்கிறோமா? முழு மனதோடு ஆண்டவரிடம் திரும்பி அவருக்கு ஏற்புடையவராக முயல்வோம்.
இறைவேண்டல்
அன்பான இறைவா! எங்கள் வாழ்வில் உண்மையான உறவில் நிலைத்திருந்து சிறந்த நற்செய்தி பணியாளர்களாக வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment