Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திருச்சபை செய்திகள்
திருப்திருப்பீட தலைமையக அதிகாரிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை
“இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக!” (உரோ.13:12) என்ற தூய பவுலடிகளின் வார்த்தைகளால், தனது உரையைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவை அறிவிப்பதற்கு நமக்கிருக்கும், நற்செய்தி அறிவுறுத்தும் கடமையைப் புதுப்பிப்பதற்கு, கிறிஸ்மஸ் நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார்.
திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, டிசம்பர் 21, இவ்வெள்ளிக்கிழமை காலையில், கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக் கூறி, ஏறக்குறைய நாற்பது நிமிடம் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் சில பிள்ளைகளால் இழைக்கப்பட்ட அனைத்துப் பாவங்களும், தவறுகளும், தீமைகளும், திருஅவையின் முக அழகை ஒருபோதும் பாழ்படுத்த இயலாது என்ற நம்பிக்கையையும், கிறிஸ்மஸ் நமக்கு வழங்குகின்றது என்று கூறினார்.
கத்தோலிக்க திருஅவை, தனது அனைத்து நெருக்கடிகள் மற்றும் கடும் துன்பங்களுக்கு மத்தியில், இன்னும் அழகானதாய், தூய்மைப்படுத்தப்பட்டதாய் மற்றும் சுடர்விடுவதாய் மேலெழும்பும் என்ற உறுதியை, ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் நமக்கு அளிக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உண்மையில், திருஅவையின் சக்தி, அதன் பிள்ளைகளைச் சார்ந்தது அல்ல, மாறாக, உலகின் மீட்பரும், இப்புவியின் ஒளியுமாகிய கிறிஸ்து இயேசுவைச் சார்ந்து உள்ளது என்பதற்கு, உறுதியான சான்றாக இது இருக்கின்றது என்பதையும், கிறிஸ்மஸ் நமக்குத் தருகின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.
திருஅவை எதிர்நோக்கிவரும் கடும் இன்னல்கள் மற்றும், திருஅவை மகிழ்ச்சியடைவதற்குக் காரணமானவை ஆகிய அனைத்தையும் மிக விரிவாக எடுத்துரைத்த திருத்தந்தை, கத்தோலிக்க திருஅவை மீது, வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டுகளை வைப்பர்களுக்கு எதிராகச் செயல்படும் ஊடகத் துறையினருக்கு, தனது நன்றியையும் தெரிவித்தார்.
மகிழ்ச்சி நிகழ்வுகள்
திருஅவையில் வெற்றிகரமாக நடைபெற்ற இளையோர் குறித்த உலக ஆயர்கள் மாமன்றம், திருப்பீட தலைமையகத்தின் சீர்திருத்தத்தில் காணப்படும் முன்னேற்றம், நிதிசார்ந்த விவகாரங்களில் காணப்படும் ஒளிவுமறைவற்றதன்மை, வத்திக்கான் வங்கியால் எட்டப்பட்டுள்ள நல்ல முடிவுகள், வத்திக்கான் நகர நாட்டின் புதிய சட்டம், தொழில் குறித்த வத்திக்கான் விதிமுறை, வெளிப்படையாக அதிகம் தெரியாமல் இருக்கும் நல்ல பலனுள்ள நடவடிக்கைகள் போன்றவை, மகிழ்வைத் தருகின்றன என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாண்டில் அருளாளர்கள் மற்றும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, அல்ஜீரியாவிள் 19 மறைசாட்சிகள், ஒவ்வோர் ஆண்டும் புதிதாக திருமுழுக்குப் பெற்று, திருஅவையின் இளமையைப் புதுப்பிக்கும் கத்தோலிக்கர், தங்கள் பிள்ளைகளுக்கு, விசுவாசத்தை துணிச்சலுடன் ஒவ்வொரு நாளும் வழங்கிவரும் பெற்றோர், அருள்பணியாளர் மற்றும் துறவற வாழ்வுக்கு அர்ப்பணிக்கும் இளையோர், தங்களின் இறையழைத்தலுக்கு விசுவாசமாக இருந்து, அமைதியிலும், தூய வாழ்விலும், தன்னலமறுப்பிலும் ஒவ்வொரு நாளும் வாழ்கின்ற இருபால் துறவியர், ஆயர்கள், அருள்பணியாளர்கள் போன்றோர், திருஅவையின் மகிழ்வை அதிகரிக்கின்றனர் எனவும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் எப்போதும் அரசர் தாவீதும், யூதாஸ் இஸ்காரியோத்தும் உள்ளனர் என்று சொல்லி, இவர்களால் ஏற்படும் கடும் துன்பங்கள் பற்றி பேசும்வேளை, திருஅவை ஆட்சியமைப்பிலும், துறவற நிறுவனங்களிலும் நிர்வாகம் செய்வோர், விழிப்புடன் இருந்து, தங்கள் பொறுப்பிலுள்ளவர்களைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணருமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவைக்கு ஏற்பட்ட கடும் இன்னல்கள்
தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயர்ந்தோர், குடிநீர், உணவு, மருந்துகளின்றி ஒவ்வொரு நாளும் இறக்கும் மக்கள், குறிப்பாக, சிறார், வறுமை மற்றும் புறக்கணிப்பை அனுபவிப்போர், அனைத்துவிதமான போர்களால், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது போன்ற மக்களின் துன்பங்கள் பற்றிப் பேசிய திருத்தந்தை, மறைசாட்சியத்தின் புதிய காலத்தை நாம் அனுபவிக்கின்றோம், புதிய நீரோ மன்னன், கிறிஸ்தவர்களைச் சித்ரவதைப்படுத்துவதற்குப் பிறந்துள்ளான், ஆலயங்களைத தாக்கும் புதிய பயங்கரவாத அமைப்புகள் தோன்றி வருகின்றன, இன்றும் உலகெங்கும் எண்ணற்ற கிறிஸ்தவர்கள், சித்ரவதைக்கும், பாகுபாட்டிற்கும், அநீதிக்கும், புறக்கணிப்புக்கும், சமய சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர் எனவும், கவலை தெரிவித்தார்.
அரசர் தாவீது, பாலியல் முறைகேடுகள், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, மனசாட்சியை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய மூன்று மாபெரும் குற்றங்களைச் செய்தார் என்றும், இவர் அரசராய் இருந்ததால் எதையும் செய்யலாம் என எண்ணினார் என்றும் உரைத்த திருத்தந்தை, இன்று திருஅவையிலும், தங்களின் பதவியையும் அதிகாரத்தையும் சலுகையாக எடுத்துக்கொண்டு, தவறு செய்பவர்கள் உள்ளார்கள் என்றும், இன்று திருஅவைக்கு, தாவீதின் குற்றத்தை உணர்த்திய நாத்தான்கள் தேவைப்படுகின்றனர் என்றும் கூறினார்.
வருகிற பிப்ரவரியில், வத்திக்கானில் நடைபெறவிருக்கும், ‘திருஅவையில் சிறார் பாதுகாப்பு’ பற்றிய கூட்டத்தையும் குறிப்பிட்ட திருத்தந்தை, தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து உண்மையை அறிந்துகொள்வதற்கான அன்னை திருஅவையின் கடினமான பணியில் உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
சிறாரைத் தவறாகப் பயன்படுத்துவோர் மனந்திரும்பி, மனித நீதிக்கும், இறை நீதிக்கும் தங்களைக் கையளிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தங்களின் இறையழைப்பையும், கடவுளுக்கும் திருஅவைக்கும் அளித்த வார்த்தைப்பாடுகளையும் மறுதலிக்கும் மற்றும் அவற்றுக்கு விசுவாசமற்று இருக்கும் துறவியாரல் திருஅவைக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றியும் கூறினார்.
thanks to Vatican News.
Add new comment