Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கோபத்தை அகற்றுவோமா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - முதல் வெள்ளி
I: எசே: 18: 21-28
II: திபா: 130: 1-2. 3-4. 5-6 7-8
III: மத்: 5: 20-26
ஒரு ஊரில் கிராம நிர்வாகி சிறப்பான பணிகளைச் செய்து வந்தார். எல்லோரையும் அன்போடும் பாசத்தோடும் அணுகி வந்தார். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பணியினைச் செய்துவந்தார். அவரின் முகத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தன. அவருடைய பண்பை பார்த்து ஏராளமானவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது ஒருவர் "எவ்வாறு உங்களால் எவ்வளவு நெருக்கடியான வேளையிலும் கோபப்படாமல், மிகுந்த பொறுமையோடும் அன்போடும் பாசத்தோடும் சமூகப் பணி செய்ய முடிகின்றது?" என்று கேட்டார். அதற்கு அந்த கிராம நிர்வாகி "என்னுடைய வாழ்க்கையில் இளம்பருவத்தில் என்னைப் போல யாரும் கோபப்பட முடியாது. என்னுடைய கோபத்தால் எண்ணற்ற நபர்களின் உறவுகளை இழந்து தவித்து இருக்கிறேன். எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் அனைத்தையும் இழந்திருக்கிறேன். ஆனால் எங்கள் ஊரில் கத்தோலிக்க தேவாலயம் இருக்கின்றது. அப்பொழுது குருவானவர் இயேசு எவ்வாறு கல்வாரியில் சிலுவையில் தொங்கிய பொழுது தன்னை சிலுவையில் அறைந்த படைவீரர்களை மன்னித்தார் என்பதைப்பற்றி மறையுரை ஆற்றினார். அதைக் கேட்ட பின்பு என்னுடைய வாழ்க்கையில் ஒரு சில மாற்றம் ஏற்பட்டது. ஒரு கடவுளின் மகன் தன்னைத் தவறாக குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்தவர்களை தண்டிக்காது மன்னிக்கும் மனநிலையை ஒரு உயர்ந்த மனநிலையாக நான் பார்த்தேன். அந்த நிமிடத்தில் இருந்து என்னுடைய கோபத்தை விட்டு விட்டு, எல்லோரையும் அன்பு செய்ய ஆரம்பித்தேன்.எனக்கு எதிராக செயல்படுபவர்களை மன்னிக்க ஆரம்பித்தேன். எனவேதான் எல்லோரையும் அன்போடும் பாசத்தோடும் நேசத்துடன் ஏற்றுக்கொள்ள முடிகிறது" என்று பதில் கூறினார்.
ஆம் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல நேரங்களில் கோபம் உறவுகளை இழக்கச் செய்கின்றது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கோபம் என்ற மனநிலையை அகற்றிவிட்டு, அன்பு பாசம் என்ற நல்ல மனநிலையை வளர்த்திட அழைப்பு விடுக்கிறார். நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார். சினம் உறவை முறிக்கும் ;சிலநேரங்களில் கடவுளுடைய அருளை இழக்கச் செய்வதற்கு அடிப்படையாக மாறி விடும்.
"கொலை செய்யாதே ; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் " என்று முற்காலத்தவர் சொன்னதை இயேசு மேற்கோள்காட்டி சினம் கொள்ளாமல், அன்பு செய்ய அழைப்பு விடுக்கிறார்.
சினம் தான் பல நேரங்களில் கொலை செய்ய அடிப்படையாக இருக்கின்றது. காயின் ஆபேல் வாழ்வை நாம் அறிவோம். காயின் ஆபேல் மேல் கோபம் கொண்டதால், அவரை கொல்லக்கூடிய பாவத்தைச் செய்தார். ஏரோது பதவி வெறி பிடித்த காரணத்தினால் தனக்கு இணையாக வேறொரு அரசர் வந்துவிடக்கூடாது என்று சினம் கொண்டவராய், அப்பாவி மாசிலாக் குழந்தைகளைக் கொன்று குவித்தான். கோபம் பல நேரங்களில் இறை உறவையும் பிறர் உறவையும் தன் உறவையும் இழக்கச் செய்கிறது. கோபத்தோடு பலிச்செலுத்துவது கடவுளுக்கு ஏற்புடைய ஒன்றல்ல. எனவேதான் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு "நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியை நாம் அறிவோம்.அதிகப்படியான கோபம் நம் வாழ்வை பாதிக்கும். கோபத்தை நாம் வெளிப்படுத்துவது நல்லதுதான். அதை சரியான முதிர்ச்சி நிறைந்த மனநிலையோடும் கனிவான வார்த்தைகளோடும் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தப்படும் கோபம் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும். மாறாக கடுஞ்சொற்களாலும் செயல்பாடுகளாலும் நாம் வெளிப்படுத்தும் கோபம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இறுதியில் அக்கோபம் நம்மையே பாதிக்கக்கூடியதாய் அமையும். எனவே கோபத்தை அகற்றி அன்புறவோடும் மன்னிக்கும் மனதோடும் எல்லாரையும் அணுகவும், சமாதான உள்ளத்தோடு கடவுளுக்கு காணிக்கை செலுத்தவும் வேண்டிய வரத்தைக் கேட்போம்.
இறைவேண்டல்
அன்பு நிறைந்த இறைவா! எம்மிடையே உள்ள கோபம்,பகையை அகற்றி உம்மோடும் பிறரோடும் அன்புறவு கொண்டு வாழும் மக்களாக விளங்க எமக்கு அருள் செய்யும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment