Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நமது பணி மக்கள் மையப் பணியா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் இரண்டாம் வியாழன்
I: எபி: 7: 25-8: 6
II: திபா 40: 6-7. 7-8. 9, 16
III: மாற்: 3: 7-12
இயேசு மக்கள் நலப்பணிக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். தான் இறையாட்சிப் பணிசெய்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற இறையாட்சி பணிகளைச் செய்துள்ளார். ஒரே தந்தையின் பிள்ளைகளும் இயேசுவின் சகோதர சகோதரிகளாகிய நமக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கின்றார். தன்னோடு வாழக்கூடிய மக்களுக்கு பணி செய்வது வாழ்வதுதான் நம் ஆண்டவர் இயேசுவின் இயல்பாக இருந்தது. அவருடைய சொல்லும் செயலும் மக்களுக்கு நலமான வாழ்வை வழங்கியது.
இயேசு எண்ணற்ற மக்களை குணம் பெறச் செய்ததால் நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று இயேசு மீது விழுந்து கொண்டிருந்தனர் என இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். ஏராளமான மக்கள் இயேசுவின் போதனைகளையும் வல்ல செயல்களையும் கண்டும் கேள்வியுற்றும் அவரைப் பின்பற்றினர். இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டு நம்பியவர்களை கைவிடாமல் குணமளித்தார். இதன் வழியாக அவர்களுக்கு புது வாழ்வை வழங்கினார்.
இயேசுவின் வாழ்வு இரண்டு வகையான பணிகள் வழியாக மக்களுக்கு புது மாற்றத்தையும் புது வாழ்வையும் தந்தது. முதலாவதாக, தன்னுடைய போதிக்கும் பணியின் வழியாக மக்களை இறைநம்பிக்கையில் திடப்படுத்தி மீட்பின் கனிகளைச் சுவைக்க வழிகாட்டினார். இயேசுவின் வார்த்தை மக்களுக்கு உடல் மற்றும் ஆன்ம நலனைக் கொடுத்தது. இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்று அவரின் சீடர்களாக வாழ முன் வந்திருக்கின்ற நாம், நம்முடைய வார்த்தையால் பிறருக்கு உடல் மற்றும் ஆன்ம நலனைகக் கொடுக்க முடிகின்றதா? என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய வார்த்தை பிறருக்கு நலம் கொடுக்க வேண்டுமென்றால் இயேசுவைப் போல நம் வாழ்வு புனிதம் நிறைந்ததாகவும், நாம் எல்லோரும் சொல்வதைச் செய்பவராகவும் செய்வதைச் சொல்பவராகவும் இருக்க வேண்டும். இத்தகைய வாழ்வு வாழுகின்ற பொழுது நாம் சிறந்த இறை பணியைச் செய்ய முடியும். எனவே நம்முடைய வார்த்தைகளைத் தூய்மையாக்கவும் அதன் மூலம் நம்முடைய வாழ்வைத் தூய்மையாக்க முன்வருவோம்.
இரண்டாவதாக இயேசு வல்ல செயல்கள் வழியாக சிறந்த ஒரு பணியினை செய்தார். இயேசுவுடைய வார்த்தையும் செயல்பாடும் உடனிருப்பும் நோயுற்றவர்களுக்கு குணமளித்தது. அதேபோல நம்முடைய வாழ்விலும் நாம் வாழக்கூடிய இடங்களில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உளவியல் நோயால் தங்கள் வாழ்க்கையை இழந்து சில மனிதர்கள் வாழலாம். அவர்களுக்கு நாம் நம்மாலான உடனிருப்பையும் உதவியையும் செய்கின்ற பொழுது, நாமும் குணப்படுத்துதல் பணியினைச் செய்ய முடியும். நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கையில் நம்முடைய வார்த்தைகளும் உடனிப்பும் நம்மைத் தேடி வருபவர்களுக்கு நலமளிகின்றதா எனச் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் மனநிலையில் எந்நாளும் பயணித்து ஏழை, எளிய மற்றும் நோயளர்களுக்கு நம்மாலான நற்பணிகளைச் செய்திட தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்:
வல்லமையுள்ள இயேசுவே! உம்மைப் போல நாங்கள் எம் வார்த்தையாலும் வாழ்வாலும் நலமளிக்கும் பணியினைச் செய்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment