மீட்பின் காலத்தில் தலைநிமிர்ந்து நிற்போமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்(24.11.2022) 
ஆண்டின் 34ஆம் வாரம் வியாழன்
மு.வா: திவெ: 18: 1-2, 21-23; 19: 1-3,9
ப.பா:  திபா: 100: 1-2. 3. 4. 5
ந.வா: லூக்: 21: 20-28

 மீட்பின் காலத்தில் தலைநிமிர்ந்து நிற்போமா!

இன்றைய வாசகங்கள் தீமையின் அழிவையும் இறைமகன்  வழங்கும் மீட்பையும் நமக்குச் சுட்டி க்காட்டுகின்றது. இறைமகன் மீண்டும் வரும்வேளையில் உலகத்தில் நடைபெறும் மாற்றங்களையும், இயற்கைச் சீற்றங்களையும் படம் பிடித்துக் காட்டுவதாய் உள்ளது. இவ்வசனங்களை நாம் வாசிக்கும் போது நமக்குள் அச்சம் எழுவதை நாம் உணர்கிறோம்.மனம் கலங்குகிறோம். இவை அனைத்தும் இப்பொழுதே நடைபெற்றுக் கொண்டிருப்பதை உணர்கிறோம். ஆனால் ஆண்டவர் எதிர்பார்ப்பது அச்சத்தை அல்ல. நல்ல மனமாற்றத்தையே.

உலகத்தில் எப்போதுமே எதிர்மறையானவற்றிற்கிடையே போராட்டம் நடைபெறுகிறது. தீமை நன்மையை வெல்லத் துடிக்கிறது. இருள் ஒளியை ஆள நினைக்கிறது. பொய்மை உண்மையை மறைக்க எண்ணுகிறது. இப்போராட்டத்தில் தீமையானவை வெல்வது போலத் தோன்றினாலும் இறுதியில் வெல்வது நன்மையே. நீதியின் கடவுள் பொறுமையாய் இருந்தாலும் அவருடைய தீர்ப்பு நீதியாய் விளங்கும் என்பதைப் புரிந்து கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.அவ்வேளையில் நாம் நீதியுள்ளவர்களாய், ஒளியின் மக்களாய் தலைநிமிர்ந்து நிற்கிறோமா? அல்லது மீட்பைச் சுவைக்கத் தகுதியற்றவர்களாய் இருக்கிறோமா? என நம்மை நாமே கடவுளின் கண்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

இன்றைய முதல் வாசகம் பாபிலோனுக்கு வழங்கப்படும் தீர்ப்பு பற்றி நமக்கு விளக்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளின் உடன்படிக்கையிலிருந்து விலகிச் செல்லும் போது அவர்களைக் கடவுள் பக்கம் அழைத்துவர ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நாடுதான் பாபிலோன்.கடவுள் தாமே அவர்களைத் தேர்தெடுத்தாலும் ,பாபிலோனியர்கள் கடவுளை மறந்து தீமையின் உச்ச கட்டத்திற்குச் சென்றதால் அவர்களின் தண்டனையும் உச்சத்தை எட்டுகிறது. நம்முடைய வாழ்விலும் பலசமயங்களில் நாம் தீமைக்கும் கடவுள் விரும்பாத அநீதிக்கும் துணைபோகும் போது கடவுள் நம்மைக் கண்டிப்பார் என்பதை மனதில் இறுத்த வேண்டும்.

இன்று நாம் காணும் இயற்கைச் சீற்றங்கள் யாவும் நம்முடைய அநீதியின் வெளிப்பாடுகளே. நன்மையை ஒதுக்கி தீமையின் குரலைக் கேட்டு சுயநலத்தோடு இயற்கையையும் சக மனிதர்களையும் நாம் காயப்படுத்தியதால் தான் இயற்கைப் பேரிடர்கள் நம்மை வாட்டுகின்றன.

கிறிஸ்துவின் வருகைக்காக நம்மைத் தயாரிக்கும் இவ்வேளையில் நம் வாழ்வைத் திருப்பிப் பார்ப்போம். நன்மையும், ஒளியும், நீதியும் உலகில் வெற்றிபெற நம் வாழ்வுப் பாதையை மாற்றுவோம். உண்மைக்குக் குரல் கொடுப்போம். அப்போது தலைநிமிர்ந்தவர்களாய் நம்மை நெருங்கி வந்துகொண்டிருக்கும் மீட்பை நம்மால் எதிர்கொள்ள முடியும். அதற்கான வரத்தை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
நீதியின் தேவனே தீயவற்றை நாங்கள் விலக்கி உண்மை ஒளி நீதியின் மக்களாக நாங்கள் வாழ்ந்து தலைநிமிர்ந்து உம் மீட்பைப் பெற்றுக்கொள்ள வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 0 =