மீண்டும் பார்வை பெறுவோம்! இயேசுவைப் பின்பற்றுவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலம் 33 வாரம் - திங்கள்  
I: திவெ:  1: 1-4; 2: 1-5
II: திபா 1: 1-2. 3. 4,6
III: லூக்: 18: 35-43

பார்வை என்பது என்ன?  நம் கண்முன்னே காணக்கிடக்கின்ற பொருட்கள், மனிதர்கள், காட்சிகள், நடக்கின்ற நிகழ்வுகள் ஆகியவற்றை கண்ணால் கண்டு இவைதான் என உணர்வது அல்ல பார்வை.  மாறாக பார்வை என்பது அனைத்தையும் மேலோட்டமாக அல்லாமல் ஆழமாகக் கண்டு அதன் உண்மைப் பொருள் உணர்ந்து அதில் நல்லவை எவை கெட்டவை எவை என வேர்பிரித்து அறிந்து வாழ்க்கையில் பயன்படுத்துவதுதான்.  கண் என்பது உடலுக்கு விளக்கு என்கிறார் இயேசு. கண்கள் நமக்குக் கொடுக்கப்பட்டதன் இரு நோக்கங்கள் என்னவென்றால் அனைத்திலும் கடவுளைக் காண்பது, அனைத்தையும் கடவுள் காண்பது போல் காண்பது. இந்த இரு நோக்கங்களும் நம் கண்களால் நிறைவேற்றப்படவில்லை எனில் நாம்அனைவரும் பார்வை அற்றவர்களே.

நாம் அனைவருமே இத்தகைய பார்வை உடையவர்களாக இருந்திருப்போம். அதற்கான அருள் நமக்கு கொடுக்கப்படாமலில்லை. ஆனால் நம்முடைய பலவீனங்கள், உலகத்தின் மாயக்கவர்ச்சிகள் போன்றவை நம்முடைய பார்வையிலிருந்த நல்ல நோக்கங்களை மழுங்கடித்து நம்முன்னே வெறும் கவர்ச்சிகளைக் காட்டி தீயவற்றைப் புகுத்தி நம்மை குருடர்களாக்கி விட்டது. 
நம்மிலே எத்தனை பேரின் கண்களுக்கு குறைகளும் கெட்டவைகளும் முதலில் தெரிகின்றன என்ற கேள்வியை எழுப்பினால்  நாம் அனைவருமே எனக்கு அவ்வாறுதான் தெரிகின்றது என ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆம் நாம் அனைவருமே பெற்ற பார்வையை இழந்திருக்கிறோம். மீண்டும் பார்வை பெற வேண்டிய கட்டயத்தில் இருக்கிறோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்றவர் இயேசுவிடம் "நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் " என்ற கோரிக்கையை வைக்கிறார். இருளாகிப்போன தன் வாழ்வு மீண்டும் ஒளியால் நிரம்ப வேண்டும் என்ற பேராவல் அவருக்கு இருந்ததால்தான் அத்தனைபேர் அவரை அடக்க முயற்சித்தும் கூக்குரலிட்டு தம் குரலை உயர்த்தி இயேசுவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். அவர் விரும்பியது நடந்தது. மீண்டும் பார்வை பெற்றார். அத்தோடு நின்றுவிடவில்லை. இயேசுவைப் பின்பற்றினார். தான் பெற்ற பார்வையை தக்க வைத்துக் கொண்டார்.

அன்பு சகோதரமே, நாம் சிந்தித்த படி நாம் அனைவருமே மீண்டும் பார்வை பெற வேண்டிய கட்டாய்த்தில் இருக்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் பலவும் நாம் இயேசுவிடம் செல்லாதவாறு நம்மை அடக்கலாம். ஆனால் நாம் விடாது இயேசுவை அழைத்து அவர் கவனத்தை நம்பால் ஈர்க்க வேண்டும். அவரிடம் மீண்டும் பார்வை பெற செபிக்க வேண்டும். நம் கண்களால் அனைத்திலும் கடவுளைக் காணவும் கடவுளைப் போல அனைத்தையும் காணவும் முயற்சி செய்யும் போது நம் பார்வை விரிவடையும். இயேசுவைப் பின்பற்ற நமக்கு நன்றாய் வழியும் தெரியும். எனவே பார்வை பெற்று இயேசுவை பின்தொடர்வோம்.

 இறைவேண்டல் 
ஒளியாம் இறைவா நாங்கள் மீண்டும் பார்வை பெற்று உம் திருமகன் இயேசுவை பின்பற்ற வரமருளும் ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

11 + 6 =