இறையாட்சி நம் நடுவிலே தான்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலம் 32 வாரம் - வியாழன்  
I: பிலமோ:  1: 7-20
II: தி பா : 146: 7. 8-9. 9-10
III: லூக்: 17: 20-25

இறைஆட்சி என்ற பெயரிலிருந்தே அதன் பொருளை நம்மால் அறிய முடிகிறது. இறைவனால் செய்யப்படும் ஆட்சி.மனிதரின் ஆட்சிகளில் உள்ள தீமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் இறையாட்சி என்பது பெருவரமே. இறைவன் நம்மை ஆட்சி செய்தால் நாள்தோறும் மகிழ்ச்சியையும், அன்பையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமாதானத்தையும் நம்மால் அனுபவிக்க முடியும். இத்தகைய ஆட்சி எப்போது வரும் என நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.  இறையாட்சியை நாம் இறந்த பிறகுதான் பார்க்க முடியும் என பலர் எண்ணலாம். அதுதான் இல்லை. இயேசு நமக்கெல்லாம் இறையாட்சி நம் நடுவிலேதான் உள்ளது என்ற உறுதியை அளித்துள்ளார்.

 இறைவன் நேரடியாக வந்து நம்மையெல்லாம் ஆட்சி செய்யப் போவதில்லை. பின் இறையாட்சியை நம் நடுவில்  உணர்வதெப்படி?இறைவனின் சாயலாய் படைக்கப்பட்ட நாமெல்லோரும் அவருடைய குணங்களை நமதாக்கி வாழும் போதெல்லாம் இறையாட்சி நம் நடுவிலே உணரப்படுகிறது .நம்மிடையே நிறுவப்படுகிறது. 

ஆம் நாம் அன்போடு பழகும் போது இறையாட்சியை நிறுவுகிறோம். மன்னிக்கும் போது இறையாட்சியை செயல்படுத்துகிறோம். அனைவரையும் மதித்து சமமாக நடத்தும் போது இறையாட்சியை செயல்படுத்துகிறோம். இருப்பதை பிறரோடு பகிரும் போது இறையாட்சியை ஊக்குவிக்கிறோம். மகிழ்ச்சியோடு வாழ்ந்து அம்மகிழ்ச்சியை பிறரோடும் பகிரும் போது இறையாட்சியைத் தேடி அலைய வேண்டியதில்லை. அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 

இதற்கு மாறான பகை உணர்வு, பகிரா மனம், ஏற்றத்தாழ்வு காணுதல், எப்போதும் சோகம் போன்ற பண்புகள் நம்மிடையே இருந்தால் இறையாட்சியை நம் நடுவே உணர இயலாது. அதை அமைக்கும் பணியாளர்களாய் நம்மால் வாழவும் இயலாது. இச்சிந்தனைகளைக் கருத்தில் கொண்டு இறையாட்சியை அமைக்க புறப்படுவோம். செபிப்போம். இறையாட்சி நம் நடுவிலேதான்!

 இறைவேண்டல் 
எம்மை ஆளும் இறைவா! உமது ஆட்சியை நாங்கள் எம் நடுவிலே உணர்ந்து அதை பிறரும் உணரச் செய்யும் இறைமனிதர்களாய் வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

4 + 10 =