நேர்மையும் மனநிறைவும்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்(05.11.2022) 
ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் சனி
I: பிலி: 4: 10-19
II: தி பா :112: 1-2. 5-6. 8யb,9
III: லூக்:16: 9-15

 

செல்வந்தர் ஒருவரின் வீட்டில்  கணக்காளராக ஒருவர் பணிசெய்து வந்தார்.பல வருடங்களாக அங்கே வேலைசெய்தாலும் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் இல்லை.வாடகை வீட்டில் தான் வசித்தார்.எளிமையாக வாழ்ந்தார்.தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து சிக்கனமாகவும் தன் வருமானத்தை செலவிட்டார். தன்னுடைய மனைவியோ பிள்ளைகளோ மனநிறைவு இன்றி குறைகூறும் போது அதை அவர் சட்டை செய்வதில்லை.மாறாக தம்மை விட வாழ்வில் சிரமப்படும் எளியவர்களை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்வார். எத்தனையோ பேர் "இவன் பிழைக்கத் தெரியாதவன்."என்று கூறுவர். பலர்  ஆசைவார்த்தைகள் கூறி தவறாக வழிநடத்தவும் செய்வர். ஆயினும் தன்னுடைய நேர்மையைக் கைவிடவில்லை.பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும் நேர்மையாளர், நம்பிக்கைக்குரியவர் என்ற பெயரை சம்பாதித்தார்.

நேர்மையாளராக இருக்க இன்றைய நற்செய்தியின் வழியாக நாம் அழைக்கப்படுகிறோம்.
"மிகச் சிறியவற்றில் நம்பத்வகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்."என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுவது நம் எல்லாருடைய வாழ்வையும் அலசிப்பார்க்க நம்மை அழைக்கிறது.நாம் எல்லாருமே ஏதாவது ஒருகாரியத்திற்கு பொறுப்பாளராக இருக்கிறோம். நமக்கென்று சில வேலைகள் தரப்பட்டுள்ளன்.  "இவரிடம் இப்பணியைக் கொடுத்தால் இவர் அதை நிச்சயம் சிறப்பாகச் செய்வார்"என்ற நம்பிக்கையுடன் தான் பலவேளைகளில் நாம் பொறுப்புகளில் அமர்த்தப்படுகிறோம்.ஆனால் அதை நாம் உணர்கிறோமா ? 

பல சமயங்களில் நம் கடமைகளை நிறைவேற்ற நாம் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. சரியான திட்டங்கள் தீட்டுவதில்லை. காலத்தை வீணாக விரயம் செய்துவிட்டு இறிதியில் ஏனோதானோவென்று கடமைக்காக பணிகளைச் செய்வதும் உண்டு. இவையெல்லாம் நேர்மையற்ற மனநிலைக்கு எடுத்துக்காட்டுகள்.
சின்னச் சின்னப் பொறுப்புகளைக் கூட சிறப்பாகச் செய்யும் போது நம்முடைய நம்பகத் தன்மையையும் நேர்மையையும் கண்டு பெரிய காரியங்கள்  நம்மைத் தேடி வந்து பெருமைப்படுத்தும்.
ஆம் அன்பு சகோதர சகோதரிகளே இத்தகைய பொறுப்புள்ள நம்பத்தகுந்த நேர்மையான பணியாளர்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.இறையாட்சியைக் கட்டியெழுப்பவும் இறை இயேசிவின் இரண்டாம் வருகையை எதிர்கொள்ளவும் இப்பண்பு நமக்கு மிக மிக அவசியமாகிறது.

இத்தகைய நேர்மையான பணியாளராய் விளங்க நாம் கொண்டிருக்க வேண்டிய முக்கியமான பண்பு "மன நிறைவு".மனநிறைவு என்பது அனைத்தையும் கடவுளின் கொடையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பண்பு. இருப்பது போதும் என்ற உணர்வு பேராசையிலிருந்தும் பிறரோடு நம்மைத் தாழ்வாக ஒப்பிட்டுப் பார்க்கும் குணத்திலிருந்தும் பாதுகாக்கிறது.நம் தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது நன்றி உணர்வையும் வளர்கிறது.  இதையே நம் ஆன்றோர்கள் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று கூறுவர். புனித பவுல் "எனக்கு வறுமையிலும் வாழத்தெரியும். வளமையிலும் வாழத்தெரியும்" என்ற வார்த்தைகளால் மனநிறைவு என்ற சிறந்த பண்பு தன்னகத்தே உள்ளதை நீரூபிக்கிறார்.இந்த உயரிய பண்பு நலன் நம்மை குறுக்கு வழியில் சென்று தேவைகளை நிறைவேற்றலாம் என்ற சிந்தனையிலிருந்து விலக்கி நேர்மையாளராக வாழ ஊக்குவிக்கிறது. மேலும் நேர்மையளராய் வாழ்வது கடவுளின் வல்லமையாலேயே.
எனவே மனநிறைவும் நேர்மையும் கொண்ட சிறந்த பணியாளர்களாய் வாழ முயற்சிப்போம். இறையருள் வேண்டுவோம்.

 இறைவேண்டல்
அன்பு இறைவா! இருப்பதில் மனநிறைவு காணும் மக்களாக எம்மை மாற்றும்.  இதனால் நாங்கள் தேவையற்ற ஆசைகளை விலகக்கி எங்களுக்குக் கொடுக்கப்ட்ட பொறுப்புகளை நேர்மையான உள்ளத்தோடு செய்யும் நல்ல பணியாளர்களாய் வாழ அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

 

Add new comment

3 + 8 =