முன்மாதிரியாக வாழ்வோமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் வெள்ளி
I: பிலி:  3: 17 - 4: 1
II: தி பா :122: 1-2. 4-5 
III: லூக்:16: 1-8

பிறருக்கு முன்மாதிரியாய் வாழ்வது என்பது மிக எளிமையான காரியமல்ல. அவ்வாறு வாழ்வதற்கு நாம் சொல்பவற்றையும் பிறர் எவ்வாறு இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறே வாழ்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். இன்றைய முதல்வாசகத்தில் நம்மை பிறருக்கு முன்மாதிரியாக வாழ அழைக்கிறார் புனித பவுல். அதுவும் தன்னைச் சுட்டிக் காட்டி என்னைப்போல் வாழுங்கள் என்று கூறுகிறார்.

ஒரு இளைஞனும் முதியவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.அப்போது முதியவர் இளைஞனை நோக்கி இக்கால இளைஞர்கள் தவறான பாதையில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்வதாக குற்றம்சாட்டினார்.மேலும் அவர்களுக்கு யாரைப் பின்பற்றுவது எனத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை என்றும் வாதிட்டார். அதற்கு காரணம் முதியவர்கள் தங்களுக்கு சிறந்த முன்மாதிரிகளாய் இல்லாததே என்று பதிவுசெய்தார் அந்த இளைஞர்.அதைக்கேட்ட அம்முதியவர் "நீங்கள் ஏன் முன்மாதிரிகளைத் தேடுகிறீர்கள். நீங்களே முன்மாதிரிகளாய் வாழ முயலுங்கள் "என்றார். இவ்வார்த்தைகள் இளைஞனின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இயேசு நமக்குச் சிறந்த முன்மாதிரி. அவர் இறைவனோடு இணைந்திருக்கச் சொன்னார்.அவர் இறைவேண்டலில் நிலைத்திருந்தார். பாவம் செய்யாதிருக்கச் சொன்னார்.அவர் சோதனைக்கு உட்பட்டாலும் அதை வென்று காட்டினார்.பாவிகளை மன்னிக்கவும் அன்பு செய்யவும் சொன்ன அவர் சிலுவை மரணத்தின் பிடியிலும் பாவிகளை மன்னித்து அன்பு செய்தார். இன்னும் எத்தனையோ  வழிமுறைகளில் தான் போதித்தவற்றை வாழ்ந்து காட்டினார். அதனால் தான் அவரை மக்கள் கூட்டம் பின் தொடர்ந்தது. 
இயேசுவை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்ததால் புனித பவுலும் என்னைப் பின்பற்றுங்கள் எனப் பெருமிதத்தோடு சொல்ல இயன்றது. 

இன்று நாம் தேடும் முன்மாதிரிகள் யார்?
நம்மில் எத்தனை பேர் மற்றவருக்கு முன்மாதிரிகளாய் இருக்கிறோம்?இயேசுவையும் அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களையும் நம் வாழ்வின் எடுத்துக்காட்டாகக் கொள்கின்றோமா? போன்ற இக்கேள்விகளை நமக்கு நாமே கேட்டுப்பார்த்து நம் வாழ்வை நெறிப்படுத்த வேண்டும். அவ்வாறு நெறிப்படுத்தும் போது ஆண்டவரோடுள்ள உறவில் நம்மால் நிலைத்திருக்க முடியும்.

மேலும் இன்றைய நற்செய்தி நம்மை முன்மதியுடையவராக வாழ அழைக்கிறது. முன்மதி தூய ஆவியார் நமக்கு அருளும் உன்னத கொடை. முன்மதியோடு நாம் வாழும் போது பல இடையூறுகளிடமிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். முன்மதி நம்முடைய ஆளுமையை வளர்த்து நம்மை மற்றவருக்கு முன்மாதிரியாகவும் திகழச்செய்யும். எனவே முன்மதியுடைய முன்மாதிரிகளாக வாழ முயற்சிப்போம்.அதற்கான அருளை கடவுளிடம் வேண்டுவோம்.

 இறைவேண்டல்
அன்பு இறைவா
உமது திருமகனை எங்கள் வாழ்வின் முன்மாதிரியாகப் பின்பற்றி, முன்மதியுடையவர்களாய் வாழ அருள் தாரும். இதனால் நாங்கள் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்து பிறருக்கு முன்மாதிரிகளாய்த் திகழ்வோமாக. ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

4 + 11 =