Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கைமாறு கருதாது உதவி செய்வோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் திங்கள்
I: பிலி: 2: 1-4
II: திபா 131: 1. 2. 3
III:லூக்:14: 12-14
ஒருமுறை ஒரு சகோதரி என்னிடம் பகிர்ந்து கொண்ட நிகழ்வு இது. அவருடைய மகன் தன்னுடைய பிறந்த நாளன்று வீட்டிலே தனக்கென்று எதுவும் கேட்காமல் வீட்டிலிருந்து சற்று தொலை தூரத்திலுள்ள ஒரு தெருவின் பெயரைச் சொல்லி அங்கு சாலையிலே வசிப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று விரும்பியதாகச் சொன்னார். அச்சகோதரி தன் மகனிடம் தன் வீட்டு அருகிலுள்ளவர்களுக்கே கொடுக்கலாமே என்று கேட்டதற்கு அப்பையன் "இல்லையம்மா. தொலைவில் உள்ளவர்கள் நமக்கு யாரென்று தெரியாது. அருகிலுள்ளவர்களை அடிக்கடி பார்க்க நேரிடும். அப்போது இவர்களுக்கு இதைச் செய்தோம் என்று நினைக்க நேரிடும்." என்று சொன்னதாகக் கூறி தன் மகனின் பரிவுள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்தார்.
அன்புக்குரியவர்களே கைமாறு கருதாமல் உதவும் உள்ளம் இன்று நம்மில் பலரிடம் இல்லாமல் இருக்கும் போது தான் செய்த உதவியை சொல்லிக் காட்டக்கூடாது, அதை நினைவில் கூட வைத்துக்கொள்ளக்கூடாது என எண்ணும் இச்சிறுவனின் குணம் நமக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டு அல்ல வா.
வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியக்கூடாது என்று சொன்னார் இயேசு. ஆனால் நாமோ ஊருக்கே சொல்லிவிடுவதோடு "நான் அவனுக்கு அப்படி செய்தேன். நான் இவளுக்கு இப்படி உதவினேன். ஆனால் எனக்கு அவள் ஒன்றுமே செய்ததில்லை"என்று பதிலுக்கு உதவிகளையும் அன்பையும் நேரத்த்தையும் என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம்.
இம்மனநிலை வேண்டாமென்று நம் ஆண்டவர் கூறுகிறார். விருந்துக்குக் கூட ஏழைகள் ஊனமுற்றோர் என கைமாறு செய்ய இயலாதவர்களை அழைக்கச் சொல்கிறார். செய்த மொய்யை திரும்பப்பெற நிகழ்வுகள் வைக்கும் நமக்கெல்லாம் இது கடினம் தான்.
நம்முடைய மனநிலையை இன்று இயேசுவின் ஒளியில் ஆராய்வோம். கொடுப்போம். உதவுவோம். அனைத்தையும் திரும்ப எதிர்பார்க்காத மனநிலையோடு. தயாரா?
இறைவேண்டல்
அன்பு இறைவா! கைமாறு கருதாது அனைவருக்கும் அனைத்தும் கொடுப்பவரே உம்மைப்போல பரிவுள்ளத்தோடு கைமாறு எதிர்பார்க்காமல் உதவும் மனதை எமக்குத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment