ஒளிபெற்ற மக்களாய் தலைநிமிர்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் திங்கள்
மு.வா: எபே:  4: 32- 5: 8
ப.பா: தி பா :1: 1-2. 3. 4,6
ந.வா:லூக்:12: 13: 10-17

 ஒளிபெற்ற மக்களாய் தலைநிமிர்வோம்! 

இன்று நாடெங்கும் தீபாவளி விமரிசையாகக் கொண்டாடபப்படுகிறது. நமது இந்து சமயத்தை சார்ந்த சகோதரங்கள் நரகாசுரன் அழிக்கப்பட்ட தினத்தையே இவ்வாறாகக் கொண்டாடுகிறார்கள். நாமும் கிறிஸ்துவே நமக்கெல்லாம் ஒளி என்ற சிந்தனையோடு இவ்விழாவை அனுசரிப்பதில் தவறில்லை. கிறிஸ்துவை நம் வாழ்வின் ஒளியாக ஏற்றுக்கொண்ட நாமும் ஒளிதருபவர்களாகத் திகழ வேண்டுமென்பதே நமக்கான அழைப்பு.

"ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்" என்று அறைகூவல் விடுக்கிறார் புனித பவுல் இன்றைய முதல் வாசகத்தில்.

"நீங்கள் கடவுளின் பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள்" என்று ஒளியாம் கடவுளைப்போல நாமும் ஒளியாய்த் திகழ அழைக்கிறது இன்றைய திருப்பாடல். 

நாம் ஒளிபெற்ற மக்களாக வாழ்வதற்கான வழிமுறையையும் இன்றைய முதல்வாசகம் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது எனலாம். நன்மை செய்தல், கிறிஸ்துவைப் போல் மன்னித்தல், அன்பு கூறுதல், நன்றி சொல்லும் மக்களாய் திகழ்தல் இவற்றோடு ஒழுக்கக் கேடுகளை விட்டொழித்தல், பேராசைகளைக் களைதல், வீணான கேலிப் பேச்சுகளை விட்டுவிடுதல் போன்ற காரியங்களைச் செய்யும் போது நாம் ஒளிபெற்ற மக்களாய் மாறமுடியும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பல ஆண்டுகளாய் சாத்தானின் பிடியில் சிக்கி நோய் என்னும் இருளில் வாழ்ந்த பெண்ணை இயேசு குணமாக்குகிறார். கூனிக் குறுகி இருளிலே இருந்த அவர் நிமிர்ந்து இறைவனைப் போற்றினார் எனக் காண்கிறோம். ஆம் இறைவனால் நம் வாழ்வு ஒளிபெறும் போது கூனிக் குறுகிய நம் வாழ்வும் நிமிர்த்தப்படும்.இறைவன் தரும் வழிமுறைகளைப் பின்பற்றி ஒளிபெற்று தலைநிமிர்வோம். 

 இறைவேண்டல் 
ஒளியாம் இறைவா! உம்மால் எம் வாழ்வு ஒளிபெறுவதாக. எம் வாழ்வில் இருள் நீங்கி தலைநிமிர்ந்த மக்களாய் நாங்கள் வாழ்வோமாக! ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 7 =