Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தந்தை கடவுளை அடித்தளமாய்க் கொண்ட குடும்பமாய் அன்பில் நிலைத்திருப்போம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 29 ஆம் வியாழன் -
I. எபே: 3:14-21;
II. திபா 33:1-2.4-5.11-12.18-19;
III. லூக்: 12:49-53
குடும்பம் ஒரு கோவில் என்பர். நாம் குடும்பம் ஒரு குட்டித் திருஅவை என்கிறோம். இப்படி ஒரு குடும்பம் கோவிலாகவும் திருஅவையாகவும் விளங்க வேண்டுமெனில் அக்குடும்பத்தின் அடித்தளம் அன்பே உருவான விண்ணகத் தந்தையாக இருக்க வேண்டும். ஏனெனில் அன்பு தான் கடவுள். நாம் சார்ந்த குடும்பங்கள் அது இரத்த உறவிலான குடும்பமாக இருந்தாலும் சரி அல்லது ஆன்மீகத்தால் இணைக்கப்பட்ட பங்கு எனும் குடும்பமாக இருந்தாலும் சரி துறவறத்தால் இணைக்கப்பட்ட குழுமம் எனும் குடும்பமாக இருந்தாலும் சரி தந்தையின் அன்பு எனும் அடித்தளம் இல்லையெனில் அது பிளவுற்றுதான் இருக்கும்.நமது குடும்பங்களுக்கு அடித்தளம் எது என நாம் இன்று சிந்திக்கவே இரு வாசகங்களும் நம்மை அழைக்கின்றன.
முதல் வாசகத்தில் பவுல் குடும்பம், குடும்பமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமே தந்தையாம் கடவுள் என்கிறார்.அத்தோடு
"அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும், அடித்தளமுமாய் அமைவதாக" (எபே3:17). என்றும் கூறுகிறார்.ஏனெனில் தந்தையே அன்பின் உறைவிடமாய் இருக்கிறார். இறைவனையும், சக மனிதர்களையும் அன்பு செய்வதே அனைத்திலும் உயரிய கட்டளை' என்றும், 'நம்மிடம் எல்லாம் இருந்தாலும் அன்பு இல்லாவிட்டால் அனைத்தும் குப்பைக்கு சமம்' என்றும் விவிலியத்தில் வாசிக்கிறோம். ஆம் இந்த அன்பே அனைத்து உயிர்களுக்கும், உறவுகளுக்குமான தொடக்கம். அன்பு அனைவரையும் ஒரே மனதாய், ஒரே குடும்பமாய் இணைக்கும் வல்லமையைக் கொண்டது.
இச்சிந்தனை ஒருபுறமிருக்க
அன்பைப் போதித்து வாழ்ந்து காட்டிய இயேசு, 'நான் தீ மூட்டவந்தேன், பிளவு உண்டாக்கவே வந்தேன்' என்று கூறுவது நமக்கெல்லாம் சற்று வியப்பையும், எதிர்மறை உணர்வுகளையும் ஏற்படுத்தலாம், ஆனால் இவ்வார்த்தைகள் மூலம் இயேசு நமக்குக் கூறும் உண்மையான செய்தி என்ன?
கிறிஸ்து பிளவு உண்டாக்கவே வந்தார். ஆம், அப்பிளவானது நன்மைக்கும், தீமைக்கும், இருளுக்கும் ஒளிக்கும், பொய்மைக்கும் உண்மைக்கும் இடையேயான பிளவாக இருக்கும்.
அன்புடையவர் எவரும் நன்மைக்கும் தீமைக்கும் துணை போவதில்லை. பொய்மையை உண்மையைப் போல மதிப்பதில்லை. ஒளியை நாடுவது போல் இருளை நாடுவதில்லை. இதுதான் இயேசு கொண்டுவந்த பிளவு. அன்பை நம் வாழ்வின் அடித்தளமாக மாற்றும் போது இயேசுவைப் போல, நாமும் நம் குடும்பங்களிலும் சமூகத்திலும் நல்லனவற்றோடு கலந்து கிடக்கும் தீமையை வேர்பிரித்து அறிந்து, நன்மைக்கும் தீமைக்கும் இடையே பிளவு உண்டாக்கும் கருவிகளாக வாழமுடியும் என்பதில் ஐயமில்லை.இவ்வாறு நாம் வாழ்ந்தால் நமது குடும்பங்களும் குழுமங்களும் சமூகமும் அன்பால் பற்றி எரிபவன, தந்தை கடவுளின் பேர் சொல்பவையாக மாறுமன்றோ.
மேலும் இன்றைய முதல் வாசகத்தின் மூலம் கிறிஸ்துவுடைய அன்பின் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை அறிய நமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பகைவரை மன்னித்து, எளியவருக்கு இரக்கம் காட்டி, நோயாளிகளைக் குணமாக்கி, பாவிகளை அரவணைத்து, அநீதிகளை எதிர்த்த இயேசுவின், அன்பின் ஆழத்தை நாம் அறிய வேண்டுமென்றால் அவரைப் போலவே நம் நாமும் நம் பகைவரை மன்னிக்கவும், எளியவருக்கு இரக்கம் காட்டவும், நோயுற்றோருக்கு ஆறுதலளிக்கவும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் முயலவேண்டும். ஏனெனில் இயேசுவின் அன்பு நிறைவடைவது நாம் பிறருக்கு அளிக்கும் அன்பிலேதான்.இதைநாம் உணர்ந்தால் இயேசு அன்று மூட்டிய அன்புத் தீ இன்று நம் வழியாய் பற்றி எரியும். இச்செயல்களை நம்மிலிருந்தும், நம்முடைய குடும்பங்களிலிருந்து தொடங்க, இறையருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இயேசுவே நீர் மூட்டிய அன்புத் தீ எம்மில் பற்றி எரியட்டும். உமது அன்பின் ஆழத்தை உணர்ந்து அன்பே உருவான தந்தையை அடித்தளமாகக் கொண்ட குடும்பங்களாக,குழுமங்களாக,சமூகங்களாக வாழ்ந்து நன்மை தீமையை வேர்பிரித்து அறியவும், உமது உண்மையான அன்பை உலகில் பரப்பவும் வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment