மனந்தளராமல் மன்றாட ஒருவரை ஒருவர் ஊக்கப்படுதுவோம்.! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு
I: வி.ப17: 8-13
II: திபா 121:1-2. 3-4. 5-6. 7-8
III: 2திமோ 3: 14- 4: 2
IV:லூக்: 18: 1-8

இறைவேண்டல் அல்லது இறைவனிடம் மன்றாடுதல் என்பது எல்லா சமயத்தவரிடமும் காணப்படும் ஒரு ஆன்மீகப் பயிற்சி. இச்செயலானது கடவுளுக்கும் அவர் உண்டாக்கிய மனிதனுக்கும் இடையேயான உறவினை ஆழப்படுத்தும் மிகச் சிறந்த வழி என்பதே அனைத்து ஆன்மீகவாதிகளின் கருத்து. அது உண்மையும் கூட. அதேபோல் இந்த இறைவேண்டல் எத்தகைய தன்மை உடையதாய் விளங்க வேண்டும் என்பதைக் குறித்தும் நாம் பலமுறை சிந்தித்திருக்கின்றோம்.அதன் அடிப்படையில் இன்று நாம் மனந்தளராமல் மன்றாட வேண்டும் என சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் மோசே கைகளை உயர்த்தி மனந்தளராமல் செபித்தார் எனவும்  நற்செய்தி வாசகத்தில் ஏழைக் கைம்பெண் ஓயாமல் மன்றாடி நேர்மையற்ற நீதிபதியிடமிருந்து கூட நீதியைப் பெற்றார் எனவும் நாம் வாசிக்கிறோம். இன்றைய திருப்பாடல் கூட நமக்குதவி விண்ணையும் மண்ணையும் படைத்த ஆண்டவரிடமிருந்தே வருகிறது என்று கூறி அவரை நோக்கியே நம் கண்களை நம் உள்ளத்தை உயர்த்த அழைக்கிறது. என்றாலும் மனந்தளரா இறைநம்பிக்கை அல்லது மனந்தளரா செபப்பயணத்தில் தனியாய் செல்வதைக் காட்டிலும் நம்மை ஊக்கப்படுத்துபவரோடு செல்வது இன்னும் நம்மை திடப்படுத்தும். இதனை இன்றைய முதல் வாசகத்தின் அடிப்படையில் நாம் சிந்திக்கலாம்.

முதல் வாசகத்தில் மோசேயுடைய தளரா இறைவேண்டலின் வல்லமையில் யோசுவோ அமலேக்கியரை வென்றார் என நாம் வாசிக்கிறோம். அவர் தன் கையை உயர்த்திய போதெல்லாம் இஸ்ரயேலர் போரில் சிறப்பாகச் செயல்பட்டனர் எனவும் கையை தளர்த்திய போதெல்லாம் இஸ்ரயேலரும் தளர்ந்தனர் எனவும் அதிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடத்தில் மோசேயோடு உடனிருந்தவர்களின் பங்களிப்பு சிறப்பானதாய் இருந்தது. அவர்கள் மோசேயை அமரவைத்து அவருடைய கைகள் தளராதபடி தாங்கிக் கொண்டார்கள்.

இந்நிகழ்வு நம் இறைவேண்டலில் மனந்தளரா நிலையை ஊக்கப்படுத்த ஒருவர் ஒருவருக்கு உதவ வேண்டுமென்ற கருத்தை நமக்கு விளக்குகிறது.
ஆம் நமது இறைவேண்டலிலே பல சமயங்களில் தளர்வுகளும் தொய்வுகளும் இருக்கும். இறைவேண்டலில் ஏற்படும் இத்தளர்ச்சி நம் வாழ்க்கையில், உடல் நலனில், நம் பணியில் வெளிப்பட வாய்ப்புள்ளது.அச்சமயத்தில் நம்மோடு இருப்பவர்கள் நமக்குத் தரும் வழிகாட்டல்களும் அறிவுரைகளும் நம் மனதைத் தளரவிடாமல் ஊக்கப்படுத்துகின்றன.

என் சொந்த வாழ்வில் இதனை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நான் என் பலவீனங்களால் தளர்வுற்று, செபிக்கக்கூட மனமின்றி வாழ்வில் சோர்ந்து வீழ்ந்த காலங்களில் என் ஆன்மீக வழிகாட்டிகளும் நண்பர்களும் என்னை அதிகமாய் செபிக்க ஊக்கப்படுத்தியதோடு தங்களுடைய அனுதின செபத்திலும் என்னைத் தாங்கிக் கொண்டார்கள் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். அதுபோல நானும் என்னைச் சார்ந்த பலருக்கு மோசேக்கு ஊக்கமளித்தவர்களைப் போல மனந்தளரா செபவாழ்விற்கு ஊக்கமூட்டியுள்ளேன். 

ஆம் அன்புக்குரியவர்களே. நம் இறைவன் நாம் வேண்டுவதைத் தரக் கூடியவர். சில சமயம் தாமதமாகிறதென்றால் அது நம் நம்பிக்கை மிகுந்த செப வாழ்வை பக்குவப்படுத்தவே அல்லாமல் நம்மை தளர்வடையச் செய்ய அல்ல. வாய்ப்பு கிடைத்தாலும்  கிடைக்காவிட்டாலும் நற்செய்தி அறிவிக்க வேண்டியது நம் கடமை என இரண்டாம் வாசகம் கூறுகிறது.ஒருவரை ஒருவர் மனந்தளரா மன்றாட்டில் ஊக்கப்படுத்துதல் உன்னதமான நற்செய்தி பணியே.  அதை உணர்ந்து மனந்தளராமல் செபிக்கவும் அவ்வாறே செபிக்க பிறரை ஊக்கப்படுத்தவும் நாம் இறையருள் வேண்டி செபிப்போம்.

 இறைவேண்டல் 
அன்பே இறைவா!எம் வேண்டல்களைக் கவனிப்பவரே! நாங்கள் மனந்தளராமல் செபிக்கவும் பிறரையும் அதற்கு ஊக்கப்படுத்தி நம்பிக்கையில் வளரவும் வரமருளும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

13 + 5 =