போதனைகளை வாழ்வாக்குவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் வியாழன் 
I: எபே: 1: 1-10
II: திபா 98: 1. 2-3. 3b-4. 5-6
III:லூக்: 11: 47-54

ஒரு பங்கில் இரண்டு அருட்பணியாளர்கள் இறைப்பணி செய்து வந்தனர். இருவருள் ஒருவர் திருப்பலி நிறைவேற்றும் பொழுது மக்கள் மிகுந்த ஈடுபாட்டோடு பங்கெடுப்பர். எவ்வளவு நேரம் மறையுரை வைத்தாலும் மிகுந்த மகிழ்ச்சியோடு அதற்கு மக்கள் செவி சாய்ப்பார்கள். இந்த இரண்டு அருட் பணியாளர்களும் ஒவ்வொரு வாரமும் காலையில் ஒருவரும் மாலையில் ஒருவரும் திருப்பலி நிறைவேற்றும் நேரத்தை மாற்றிக் கொள்வார். எனவே மக்களுக்கு எந்த வாரத்தில் எந்த அருட்பணியாளர் திருப்பலி நிறைவேற்றுவார் என்பது தெரியும். இந்த முதல் அருட்பணியாளர் எந்த  நேரத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறாரோ, அப்பொழுது மக்கள் கூட்டமாகச் செல்வர். ஆனால் இரண்டாவது அருட்பணியாளர் திருப்பலி நிறைவேற்றும் பொழுது குறைந்த அளவே மக்கள் வந்தனர். இவற்றைக் கண்ட அந்த இரண்டாவது அருட்பணியாளருக்கு ஒருவிதமான வருத்தம் கலந்த கேள்வி ஏற்பட்டது.  

எனவே முதல் அருட்பணியாளர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும்பொழுது இந்த இரண்டாவது அருட்பணியாளர் ஆலயத்திற்கு வெளியே நின்ற ஒரு நபரிடம் "ஏன் நான் திருப்பலி நிறைவேற்றும் பொழுது நீங்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர் "தற்பொழுது திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அருட்பணியாளர் மிகச்சிறந்த மறையுரையாளர். சொல்வதைச் செய்பவர். செய்வதைச் சொல்பவர். எனவே அவர் போதிக்கின்ற போதனைகள் எங்கள் உள்ளத்தைத் தொடுகின்றது. ஆனால் உங்களுடைய மறையுரை, சொல்வது ஒன்றும்  செய்வது ஒன்றுமாகவும் இருக்கின்றது. எனவேதான் மக்கள் உங்கள் நீங்கள் வைக்கும் மறையுரையில்  நாட்டம் கொள்வதில்லை" என்று பதிலளித்தார். இவற்றைக் கேட்ட அந்த அருட்பணியாளர் தான் கடந்து வந்தப் பாதையை ஆய்வுக்கு உட்படுத்தினார். தான் போதிப்பதை வாழத் தொடங்கினார். வாழ்ந்ததைப் போதிக்கத் தொடங்கினார். அதன்பிறகு பிற்காலத்தில் மிகச்சிறந்த ஒரு அருட்பணியாளராக, மறையுரையாளராக இறைப்பணி செய்தார். 

இறைவார்த்தையைப் போதிக்கும் பணி இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட உன்னதமானப் பணி. அத்தகைய உன்னதமானப் பணியில் தங்களையே  கையளிக்கத் திருமுழுக்கின் வழியாக  முன்வந்துள்ள நாம் ஒவ்வொருவரும் இறைவார்த்தையை வாசிக்கவும், அதை வாழ்ந்துக் காட்டவும், அவ்வாழ்வின் வழியாக பிறருக்கு அறிவிக்கவும் கடமைப்பட்டுள்ளோம். நம்முடைய முன்மாதிரியாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்  செய்த அந்த மூன்று ஆண்டு இறையாட்சிப் பணியில் சொல்வதைச் செய்தார். செய்வதையேச் சொன்னார்.

ஆனால்   இயேசு வாழ்ந்த காலத்தில் திருச்சட்டத்தை வாசித்து அதற்கு விளக்கம் கொடுக்கும் அதிகாரத்தைத் திருச்சட்ட அறிஞர்கள் மட்டுமே கொண்டிருந்தனர். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு திருச்சட்ட நூலின் போதனைகளை வழங்குவதற்கானப் பொறுப்பும், கடமையும் பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் போதித்தப் போதனைகள்  மக்களுடைய வாழ்வைத் தொடாத ஒன்றாக இருந்தன. அவர்களுடையப் போதனைகள் எந்த ஒரு பயனையும் மக்களுக்கு வழங்கவில்லை.

ஏனெனில் அவர்களின் சொல்லும், செயலும் வெவ்வேறு பாதையில் இருந்தன. திருச்சட்ட நூலை வாசித்து மக்கள் முன்னேற அவர்கள் அனுமதிக்கவுமில்லை, அவர்கள் முன்னேற சரியான போதனைகளையும் வழங்கவுமில்லை. மாறாகத் திருச்சட்டத்தின் பெயரால் மக்களை தீட்டுப்பட்டவர்கள் எனப் பலரை விலக்கினார்கள். ஆனால் இன்றைய நற்செய்தி வழியாக நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உண்மையான தீட்டுப்பட்டவர்கள் பரிசேயர்கள் தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார். "அறிவு களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை ; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்று இயேசு குற்றம்சாட்டினார். திருச்சட்ட நூலை மக்கள் அனைவரும் அறிந்து மீட்புப் பெறுவதற்கு வழிகாட்டப் பரிசேயர்களாகிய திருச்சட்ட அறிஞர்களுக்கு பொறுப்பும் கடமையும் இருந்தும் அவற்றைச் சரியாக செய்யாமல் வெளிவேடத் தன்மையோடு தங்கள் வாழ்வை வாழ்ந்தனர். 'வெளிவேடக்காரன் என்று அறியப்படுவதை விடவும், பாவி என்று அறியப்படுவது மேல் ' என்கிறது ஒரு பழமொழி.

பரிசேயர்களாகிய மறைநூல் அறிஞர்கள் வெளிவேடக்காரர்களாக இயேசுவால் அடையாளப்படுத்தப் படுகின்றனர். ஏனெனில் அவர்கள் சொல்லும் செயலும் வெவ்வேறு பாதையில் அமைந்திருந்தது. அவர்களுடைய வாழ்வு சுயநலம் நிறைந்ததாக இருந்தது. எனவே இப்படிப்பட்ட மன நிலையை மாற்றி இறைவார்த்தை என்னும் களஞ்சியத்தைக் கையில் எடுத்து அதை வாசித்து வாழ்வாக்கி, பிறருக்கு அதை வழங்கும் பொழுது நாம் மிகச்சிறந்த  இறைப் பணியாளர்களாக மாறமுடியும். விண்ணரசின் மகத்துவத்தை இம்மண்ணுலகிலும், விண்ணுலகிலும் நாம் அனுபவிக்க முடியும். அதற்கு நம் சொல்லையும் செயலையும் ஒரே பாதையில் இணைத்து வாழ்வாக்க முயற்சி செய்ய வேண்டும். தூய மனநிலையிலும், தூய  வாழ்விலும் நாம் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும்.  இதைத்தான் இன்றைய நற்செய்தி மூலமாக நம் ஆண்டவர் இயேசு நமக்கு வலியுறுத்த விரும்புவது. எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே பரிசேயர்களாகிய மறைநூல் அறிஞர்களைப் போல் அல்லாமல், நம் ஆண்டவர் இயேசுவைப் போல போதிக்கும் போதனைகளின் படி வாழ்ந்திடத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வாழ்வளிக்கும் வள்ளலே இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் உம்முடைய போதனைகளின்படி வாழவும், வாழ்ந்ததைப் பிறருக்கு நன்முறையில் போதிக்கவும் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

4 + 14 =