உட்புறத்தில் உள்ளதைத் தானமாகக் கொடுத்து தூயோராய் வாழ்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 28ஆம் செவ்வாய் 
மு.வா: கலா: 5: 1-6
ப.பா: திபா 119: 41,43. 44,45. 47,48
ந.வா:லூக்: 11: 37-41

 உட்புறத்தில் உள்ளதைத் தானமாகக் கொடுத்து தூயோராய் வாழ்வோம்! 

 அகம் புறம் எனும் இரண்டும் சேர்ந்தது தான் மனிதன். பிறரால் காணமுடிகின்றவற்றை புறம் அதாவது வெளிப்புறம் என்பதும் காணமுடியாததை உட்புறம் அல்லது அகம் எனவும் கூறுவதுண்டு. ஆனால் இந்த அகமும் புறமும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்தது. அகம் அமைவதன் அடிப்படையிலேயே புறம் இருக்கும். அகத்திற்கு மாறாக புறம் இருப்பது போலத் தெரிந்தாலும் அது நிலைக்காது. சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். அகத்தின் அழகுதான் புறத்தில் தெரியும். 

பல வேளைகளில் புறத்தினை அழகு செய்யவும் தூய்மை செய்யவும் நேரம் செலவழிக்கும் நமக்கு அகத்தினை தூய்மை செய்வதற்கான எண்ணம் கூட இல்லாதது வேதனைக்குரிய விஷயம். இதற்கு யாரும் விதிவிலக்கில்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு உட்புறத்தில் தூயோர்களாக வாழ நம்மை அழைக்கின்றார். நம்பிக்கை, இறைவேண்டல், மனமாற்றம் போன்றவை நம் உட்புறத் தூய்மைக்கு பேருதவியாய் அமையக்கூடிய செயல்கள். அத்தோடு கூட நாம் செய்ய வேண்டிய முக்கியக் காரியமாக இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிடுவது "உட்புறத்திலுள்ளவற்றை தானமாகக் கொடுப்பது "
தானமாகக் கொடுக்குமுன்பு நமது உட்புறமாகிய மனதில் அல்லது ஆன்மாவில் நிறைந்திருப்பது என்ன என்பதைப்பற்றியும்நாம் கவனமாக இருக்க வேண்டும்.

நமது உட்புறம் அன்பு, பொறுமை, மன்னிப்பு,நம்பிக்கை, நல்லெண்ணம், மகிழ்ச்சி, நன்றிஉணர்வு போன்றவற்றால் நிறைந்திருந்தால் அவற்றை நாம் பிறருக்கு தானமாக வழங்கினால் நாம் தூய்மையானவர்களாக நாள்தோறும் திகழ்வோம் என்பதில் ஐயமில்லை.
எனவே நம் உட்புறத்தை நல்லவற்றால் நிறைப்போம். பிறருக்குப் பகிர்வோம். தூயோராய் வாழ்வோம்.

 இறைவேண்டல் 
தூய்மையின் உறைவிடமே இறைவா! எமது உட்புறத்தை நன்மைகளால் நிறைத்து அவற்றை பிறருக்கு தானமாக வழங்கி நாங்கள் உள்ளும் புறமும் தூயோராய் வாழ வரமருளும். ஆமென்

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

13 + 7 =